Skip to main content

ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலை!  -டாஸ்மாக் அடிக்கிறது டமாரம்!

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
sd


திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே தமிழக அரசு நம்பி இருக்கக்கூடாது.  வருவாயைப் பெருக்குவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  
 
மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ராம்குமார் தாக்கல் செய்திருந்த அந்த  மனுவில் ‘டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். மது விற்பனைக்கு ரசீது வழங்க வேண்டும். கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்பது போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 
 


திருச்சி – மணப்பாறை வழக்கறிஞர் செல்வராஜ் தொடுத்த வழக்கில்,  ‘படிப்படியாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று 2016-இல் அளித்த தேர்தல் வாக்குறுதி பிரகாரம், இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டன? அடுத்தகட்டமாக எத்தனை கடைகள் மூடப்படும்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அதே உயர் நீதிமன்றம்.
 

நாயும் பிழைக்கும் பிழைப்பு!
 

டாஸ்மாக் விவகாரத்தில் உயர் நீதிமன்றமே தமிழக அரசுக்குக் ‘குட்டு’ வைத்திருக்கும் நிலையில், டாஸ்மாக் சூபர்வைசர் ஒருவர் நள்ளிரவில் நம்மைச் சந்தித்து  ‘வெளியில் தெரியாத சமாச்சாரங்கள் எவ்வளவோ இருக்கின்றன..’ என்று குமுறித் தீர்த்துவிட்டார். 

 

poratam



“குவார்ட்டருக்கு ரூ.5, ஹாஃப் மற்றும் ஃபுல்லுக்கு ரூ.10 என, ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலை வைத்து விற்கிறோம். அதனால், முகத்துக்கு நேராக குடிமகன்கள் எங்களைத் திட்டுவது கொஞ்சநஞ்சமல்ல. ‘ரேட்டைக் கூட்டி விக்கிறியே..  நாலு வீட்ல பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்ல.. நீங்கள்லாம் எங்கே திருந்தப் போறீங்க.. போங்கடா போங்க..  அஞ்சு ரூபா.. பத்து ரூபான்னு உங்களுக்கு வாய்க்கரிசி போட்டுத் தொலைக்கிறோம்.” என்று அவரவர் பாணியில் தினுசு தினுசாக வசை பாடுவார்கள். முடிந்த அளவுக்குப் பொறுமை காப்போம். சிலநேரங்களில்,   டென்ஷனில் தலை சூடாகிவிட்டால்,  விடமாட்டோம். “அஞ்சு ரூபாய்ங்கிறது பிச்சைக் காசு. என்னமோ பெரிசா லஞ்சம் கொடுத்துட்ட மாதிரி சீறுறீங்க. வி.ஏ.ஓ., தாசில்தார் ஆபீஸ்ல பட்டாவுக்கு 3000 ரூபாய் லஞ்சம் தர்றப்ப, அங்கே கேள்வியா கேட்கிறீங்க?” என்று பதிலுக்கு எகிறுவோம். ஆனாலும்,  ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என்று உள்ளுக்குள் வெடித்து அடங்கிவிடுவோம். 
 

நியாயம் கேட்கிறோம்!
 

சுளையாக  அரசு ஊதியம் பெறுபவர்களும் கூட, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். அதேநேரத்தில், கூடுதல் விலைக்கு விற்று அநியாயம் செய்வதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை.
 

2003, நவம்பர் 29-இல் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் டாஸ்மாக் தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போது, தமிழகத்தில் 6280 டாஸ்மாக் கடைகள் உள்ளன.  மேற்பார்வையாளர், உதவியாளர், பார் உதவியாளர் என தற்போது டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 29,403 ஆகும். பணி நிரந்தரம், மிகை பணிக்கு மிகை ஊதியம், காலமுறை ஊதியம் என 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கம் போராடி வருகிறது. 
 


10-ஆம் வகுப்பு படித்தவர்கள் சேல்ஸ்மேனாகவும், டிகிரி முடித்தவர்கள் சூபர்வைசராகவும் டாஸ்மாக்கில் பணிபுரிகிறார்கள். சேல்ஸ்மேனுக்கு சம்பளம் ரூ.8100. பிடித்தம் போக சேல்ஸ்மேன் கையில் கிடைப்பது ரூ.6993. சூபர்வைசருக்கு சம்பளம் ரூ.10250. பிடித்தம் போகக் கிடைப்பது ரூ.8885. உதவி விற்பனையாளரின் சம்பளம் ரூ.7000. பிடித்தமெல்லாம் போல அவருக்குக் கிடைப்பது ரூ.6025.  இவ்வளவு குறைந்த சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்தமுடியும்? அதேநேரத்தில், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும்கூட நாங்கள் வேலை பார்த்தாக வேண்டும். ஃபெஸ்டிவல் லீவோ,  மெடிக்கல் லீவோ எதுவும் இல்ல. 
 

கட்டிட உரிமையாளருக்கும் பங்கு போகிறது!
 

மத்திய, மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டன. சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்கு மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்பதால், சாலையிலிருந்து 1 கி.மீ. தள்ளி, சுடுகாட்டிலும்கூட புதிதாக மதுக்கடைகள் கட்டப்பட்டன. முன்பெல்லாம், டாஸ்மாக் கடையை வாடகைக்கு விடுபவர் ஒரு தொந்தரவும் தந்ததில்லை. தற்போது, ரூ.1 லட்சத்துக்கு டாஸ்மாக் சரக்கு விற்றால், கட்டிட உரிமையாளர் ரூ.500 கேட்கிறார். விற்பனையின் அடிப்படையில், ஒவ்வொரு லட்சத்துக்கும்  அவர்களுக்கு ரூ.500 வீதம் தந்தாக வேண்டும்.  வாடகை என அரசாங்கம் தருவதோ ரூ.1000-லிருந்து ரூ.1500 வரைதான்.  மின் கட்டணமும் அப்படித்தான். டாஸ்மாக் கடைக்கு ரூ.3000-லிருந்து ரூ.4000 வரை கரண்ட் பில் வருது. அரசாங்கமோ,    2003-ல் இருந்த மின் கட்டண விகிதப்படி, இரண்டாயிரமோ, மூவாயிரமோதான் தருகிறது.  மது பாட்டில்களை வாகனத்திலிருந்து இறக்கும்போது உடைந்து டேமேஜ் ஆகிவிட்டால், அதற்கும் நாங்கள்தான் பொறுப்பு. 
 

thaakapatavar


அதிகாரிகள் யாரும் யோக்கியமல்ல!
  


டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் மண்டல மேலாளருக்கு விற்பனையில் ரூ.1 லட்சத்துக்கு ரூ.300-லிருந்து ரூ.400 வரை மாமூல் தர வேண்டியதிருக்கிறது. அதனால், ஒவ்வொரு மாதமும் இவ்விருவரின் மாமூலே ரூ.15000-லிருந்து ரூ.20000 வரை என்றாகிவிடுகிறது. பிறகு, ஸ்குவாட் இருக்கிறது. பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வைத்து விற்று ஸ்குவாடிடம் பிடிபட்டால், ரூ.10000 ஃபைன் போட்டு விடுவார்கள். மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவை ஸ்குவாட் வந்துவிடும். இதில் கொடுமை என்னவென்றால், ஸ்குவாடும் ரெகுலராக மாமூல் வாங்கிவிடும். பிறகு, எம்.டி. (மேனேஜிங் டைரக்டர்) ஸ்குவாட் இருக்கிறது.  இவர்களிடம் மாட்டிக்கொண்டால், நடவடிக்கை எடுத்து வெளியில் அனுப்பிவிடுவார்கள். திரும்பவும், டாஸ்மாக் வேலைக்கு வருவதற்கு ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிடும். அதற்கும், பல ஆயிரம் அழ வேண்டும். டாஸ்மாக் குறித்துப் புகார் அளிப்பதற்கு டோல் ஃப்ரீ எண் உண்டு. கூடுதல் விலைக்கு விற்கிறோம் என்று அந்த எண்ணுக்குப் புகார் சென்றுவிட்டால் போதும். அதிகாரி ஒருவர் பேசுவார் “ஏம்பா.. நீ வேலைல இருக்கப் போறியா? வீட்டுக்குப் போறியான்னு கேட்பார். அவரும்கூட எங்களிடம் மாமூல் வாங்கும் அதிகாரிதான். 
 

வரிசை கட்டி வாங்கும் போலீஸ் மாமூல்!
 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இரவில் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு வசூல் தொகை ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தோடு டூ வீலரில் சென்ற ஊழியர்கள் சங்கரையும் பாலச்சந்திரனையும் வழிமறித்து தாக்கி பணப்பையை பறித்துச் சென்றனர். மதுரை – திருப்பரங்குன்றம் – ஆஸ்டின்பட்டியில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டு வெளியில் வந்தபோது, அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தைப் பறித்துச் சென்றது. இதுபோன்ற வழிப்பறிக் கொள்ளையர்களிடமிருந்து பணத்தையும் டாஸ்மாக் ஊழியர்களையும்  காத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்ததால்,  வசூல் பணத்தை எடுத்துச்செல்லும்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக உள்ளூர் போலீஸ்காரர்கள் இருவர் வீடு வரையிலும் வருவதற்கு ஏற்பாடானது.  அந்தப் போலீஸ்காரர்களுக்கு மாமூலாக  தினமும் ரூ.500 அல்லது ரூ.1000 தரவேண்டும். கலால்துறை அதிகாரிகள் கறாராக ஒவ்வொரு மாதமும் ரூ.1000-லிருந்து ரூ.2000 வரை மாமூல் வாங்கிவிடுகிறார்கள். மதுவிலக்கு போலீசாருக்கும் குறைந்தபட்சம் ரூ.1000 மாமூல் போகிறது. 
 

நாங்களும் சுத்தமானவர்கள் அல்ல!
 

மிகக்குறைந்த தொகுப்பூதியம் என்பதால், வங்கியிலும்கூட “இந்தச் சம்பளத்துக்கு எப்படி லோன் தரமுடியும்?” என்று எங்களை நிராகரித்து விடுகின்றனர். மேலே கூறியிருக்கும் அத்தனை செலவுகளையும் நாங்களேதான் பண்ண வேண்டும். அரசாங்கம் தரவே தராது. இத்தனை கஷ்டங்களையும் சமாளிப்பதற்காகத்தான், குறிப்பாக மேலதிகாரிகளையும் கவனிப்பதற்காகத்தான், ரூ.5-லிருந்து ரூ.10 வரை கூடுதலாக விலை வைத்து விற்கிறோம். அதேநேரத்தில்,  இந்த முறைகேடான செயலில் ஈடுபடும் எங்கள் கை சுத்தமானது என்று கூறிவிட முடியாது. இந்த ஊழல் பணத்திலிருந்து நாங்களும் நாள் ஒன்றுக்கு ரூ.500 வரை பங்கு போட்டுக்கொள்கிறோம். 
 

இப்போது சொல்லுங்கள். மிகக்குறைந்த சம்பளம் வழங்கி, அடிமைகளைப் போல இஷ்டத்துக்கும் ஆட்டுவித்து, குடிப்பழக்கம் உள்ள பொது மக்களிடமிருந்து, தவறான வழியில் பணம் பறிக்கின்றவர்களாக ஆக்கியது இந்த அரசாங்கம்தானே!” என்று பெருமூச்சு விட்டார் அந்த டாஸ்மாக் சூபர்வைசர்.  


‘நல்ல சம்பளம் பெறும் அரசு ஊழியர்களே  லஞ்சம் வாங்கும்போது, எங்களால் முடிந்ததை நாங்களும் செய்கிறோம்.’  என்று டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் தவறை நியாயப்படுத்துவது  ஏற்புடையதல்ல! 

 

 

 

 

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.