Skip to main content

அமைச்சரின் அறிவிப்பும்; பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சியும்!  

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

tamilnadu archeological study in school teacher field work 

 

பள்ளிகள் தோறும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை தொடங்க மதுரையில் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்டது.

 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் விரவியிருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 நாட்களுக்கு களப்பயணத்துடன் உண்டு உறைவிடப் பயிற்சி வழங்க இருப்பதாக அறிவித்தார்.

 

இப்பயிற்சி ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1000 ஆசிரியர்களுக்கு சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலூர், கோவை மற்றும் தர்மபுரி ஆகிய 9 மண்டலங்களில் பயிற்சி நடத்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சியின் முதல் சுற்று மதுரை மண்டலத்தில் கீழடியில் 06.03.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

 

tamilnadu archeological study in school teacher field work 

இதில் தொல்லியல் ஓர் அறிமுகம், பழைய புதிய இரும்புக் காலப் பண்பாடு, தமிழ்நாட்டு அகழாய்வுகள், நாணயவியல், கல்வெட்டியல் ஓர் அறிமுகம், தமிழி கல்வெட்டுகள், நடுகற்கள், பல்லவர், பாண்டியர், சோழர் கால கலை மற்றும் கட்டடக்கலை, செப்பேடுகள், பாறை ஓவியங்கள், தமிழ்க் கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அமைத்தல் போன்றவை பயிற்சியில் இடம்பெற்றன. பயிற்சியை பூங்குன்றன், வேதாசலம், ராஜவேலு, இனியன், செந்தீ நடராஜன், கரு. ராஜேந்திரன், ஆறுமுக சீத்தாராமன், ராமநாதபுரம் ராஜகுரு, புதுக்கோட்டை மணிகண்டன், சிவகங்கை காளிராசா, பாலாபாரதி, சிவகளை மாணிக்கம் ஆகிய தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்தினார்கள்.

 

tamilnadu archeological study in school teacher field work 

களப்பயணமாக கீழடி, வரிச்சியூர் குன்னத்தூர், கீழக்குயில்குடி, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள தொல்லியல் சின்னங்களை ஆசிரியர்கள் பார்த்து அறிந்து கொண்டனர். இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து கற்றுத்தர உள்ளார்கள். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வழிகாட்டுதலில், இணை இயக்குநர் வைகுமார் மேலாண்மையின் கீழ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை மதுரை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி, துணை முதல்வர் ராம்ராஜ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் பிரபாகரன் உள்ளிட்டோர் செய்தனர். 

 

 

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.