Skip to main content

"ஹெச். ராஜா நீதிமன்றத்தைப் பற்றி பேசாத பேச்சையா நான் பேசிவிட்டேன்" - தமிழன் பிரசன்னா கேள்வி!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 46 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 82,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் வழக்கமான பரபரப்புகளுடனே இருந்து வருகின்றது. பிரதமர் மோடி குறித்து தி.மு.க.வின் தமிழன் பிரசன்னா சில கருத்துகளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தற்கு பா.ஜ.க.-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா எதிர்வினையாற்றி உள்ளார். தமிழன் பிரசன்னாவைக் கண்டிப்பாகக் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழன் பிரசன்னாவிடம், கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
 


இந்த கரோனா நேரத்தில் நீட் தேர்வுக்கான தேதியை அறிவிக்கிறார்கள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதியைச் சொல்லியிருக்கிறார்கள். மின்சார திருத்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளார்கள். காவிரி ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையோடு இணைத்துள்ளார்கள், இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது அனைத்துமே மாநில அரசின் முதுகெலும்பு இல்லாத காரணத்தால் மட்டுமே நடக்கின்றது. மத்திய அரசைப் பார்த்து, பக்கத்தில் இருக்கின்ற சந்திர சேகர் ராவ் சொல்கிறார் 'ஒன்று நீ செய், இல்லை என்னை செய்யவிடு' என்று. இந்த மாதிரி கேட்க நம் மாநிலத்தை ஆள்பவருக்குப் போதிய துணிச்சல் இல்லை. காவிரி ஆணையத்தில் மீண்டும் நமக்குத் துரோகம் செய்துள்ளார்கள். இது சம்பந்தமாக இதுவரை இவர்கள் என்ன அறிக்கை விட்டுள்ளார்கள். மத்திய அரசின் அணுகு முறையை எதிர்த்து இவர்கள் ஏதேனும் கேள்வி கேட்டார்களா? அவர்களின் அடிமைகளாக இருக்கும் இவர்கள் அவர்களை எதிர்த்து எப்படிக் கேள்வி கேட்பார்கள். இப்போது நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். 10 ஆம் வகுப்பு தேர்வு தேதியை அறிவித்துள்ளார்கள், நீட் தேர்வை அறிவித்துள்ளார்கள். இப்போது லாக் டவுன் முடியுமா அல்லது முடியாதா என்று கெள்வி எழுகின்றது. தேர்வுக்கு மாணவர்கள் எப்படிப் போவார்கள். பலர் ஹாஸ்டலில் படிக்கிறார்கள். அவர்கள் எப்படி அங்கு போவார்கள். பேருந்து வசதி இருக்கிறதா? அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்குமா என்ற ஆயிரம் கேள்வி இருக்கின்றபோது எதற்கு அவசர அவசரமாகத் தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும். 
 

 


இந்தியப் பிரதமரைத் தொடர்ந்து அவமரியாதையாகப் பேசுவதாக கூறி உங்கள் மீது பாஜக தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக உங்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு உங்களின் பதில் என்ன? 

வானொலி மூலம் பல மணி நேரம் பேசும் பிரதமர், பத்தரிகையாளர்களின் ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்க மறுத்துவிடுகிறார். 56 இன்ச் மார்பளவு உடையவர் என்று சொல்லிக்கொள்ளும் யாரும் இத்தகைய செயல்களைச் செய்ய மாட்டார்கள். மேலும் அணிந்திருக்கும் உடையை வைத்தே யார் கலவரக்காரர்கள் என்று என்னால் அடையாளப்படுத்த முடியும் என்று தன் சொந்த நாட்டு மக்களையே பிரிக்கும் போதும், தன்னை எதிர்க்கும் மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட நிதியினை ஒதுக்க மாட்டேன் என்று சொல்வதாகட்டும், இப்படி மாநில உரிமைகளுக்கு எதிராகச் செய்ல்படும் ஒருவரை எப்படி எங்களின் பிரதமராக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். பிரதமர் எனக்கு முதலாளி அல்ல, இந்தியக் குடிமகனாகிய நான்தான் அவருக்கு முதலாளி.
 

http://onelink.to/nknapp


நீங்கள் பேசக்கூடிய வெறுப்பரசியல்தான் எங்களைப் பேச செய்கிறது. ஒருமுறை அவ்வாறு பேசியதற்கே என்னைக் கைது செய்ய வேண்டும், தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறீர்களே எங்களின் தலைவர்களின் குடும்பத்தைக் நீங்கள் கொச்சைப்படுத்தி பேசவில்லையா, நாங்கள் அதற்குக் கூட பதிலுக்குப் பதில் பேசவில்லை, அப்படிப் பேசினால் அவர்களால் இருக்க முடியாது. நீதிமன்றம் குறித்து ஹெச்.ராஜா பேசாத பேச்சுக்களாா, பத்திரிகை துறை பெண்களைப் பற்றி எஸ்.வி சேகர் என்ன கூறினார், இதெல்லாம் சரியா? அவர்கள் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் என்பதே என்னுடைய கருத்து.