Skip to main content

எந்த கட்சினாலும் தப்பு தப்புதான்!!!

 

special

 

 

பொதுவாகவே புத்தாண்டிலிருந்து மாற்றிக்கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நேர்மறை சிந்தனையில் பலரும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் 2020 புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத கரோனா தொற்று உலகையே ஒரு புரட்டு புரட்டிப்போட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதுவரை தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகள் முழுமையாக வெற்றிபெறவில்லை. ஆனால், ஒரு சில வெளிநாட்டு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் 90 சதவீத வெற்றியை பெற்றிருக்கின்றன என்றதும் அதன் மூலம் பொருளாதாரம் எப்படி மாறும், எந்த வளர்ந்த வல்லரசு நாடுகளுக்கு தடுப்பு மருந்து முதலில் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துவிட்டன. 

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வெளியாகும் பட்டியலில் தற்போதுதான் எண்கள் குறைவதை பார்க்க முடிகிறது. அதனால் கரோனாவால் பாதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்க வேண்டாம். கரோனா டெஸ்ட் எடுப்பது முன்பைவிட குறைந்துவிட்டது. லாக்டவுன் முன்பைப் போல கண்டிப்பாக இல்லாமல் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாடத் தேவைகளையும் கருதி அரசாங்கம் சில தேவையானவற்றுக்கும் தேவையற்றவைக்கும் அனுமதி வழங்கியுள்ளது. 

 

இந்த நிலையில், அடுத்த வருட தமிழக தேர்தலுக்காக தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் தற்போது தங்களின் அரசியலை தொடங்கிவிட்டன, கரோனாவை மறந்து. ஏற்கனவே பீகாரில் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்கள் எதிலும் கரோனா தொற்று விழிப்புணர்வுகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அந்த அரசியல்வாதிகள் செயல்பட்டார்களா என்பதை பிரச்சாரக் கூட்டங்களை டிவிக்களில், செய்தித்தாள்களில் பார்க்கும்போது தெரிந்திருக்கும். என்னதான் இருந்தாலும் முன்பே கரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டிய சூழலில் ஒரு வாரம் காத்திருந்து, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகானை மீண்டும் ஆட்சியில் அமர வைத்துவிட்டுதான் இந்தியா முழுவதும் லாக்டவுன் விட்டார் மோடி என்ற விமர்சனம் இருக்கிறது. தற்போது தமிழகத்திற்கே வருவோம்...

 

மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் பாஜக, இதுவரை தாமரை மலர்ந்திடாத மாநிலங்களில் இப்போது எதையாவது செய்து மலர வைத்தால்(தான்) உண்டு என்று என்ன அரசியல் விளையாட்டுகளை நிகழ்த்தி வருகிறது. அதில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மேற்கு வங்கத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு தேர்தலை கண்கொத்தி பாம்பாக டார்கெட் செய்து வைத்திருக்கிறது. கடந்த ஒன்று இரண்டு வரிகளில் கரோனாவை குறிப்பிடாமல் அரசியல், தேர்தலையே குறிப்பிடும்போது நமக்கே கரோனா போய்விட்டதோ என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. முழுக்க முழுக்க அரசியலிலேயே ஊறி இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இது பெரிதா என்ன? 

 

தமிழகத்தில் அண்மையில் நடைபெறும் அரசியல் கூட்டங்களும், யாத்திரைகளும், பேரணிகளுமே அதற்கு சாட்சி. ஆளும் அதிமுக அரசு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த கரோனா கால கட்டத்தில்தான் அதிகமாக மேடை போட்டு கூட்டம் நடத்துகிறது. குறிப்பாக முதல்வர் பல கூட்டங்களில் நேரடியாகக் கலந்துகொண்டு வருகிறார். அவருடன் இருக்கும் அதிகாரிகளுக்கு அரசாங்கமே கரோனா டெஸ்ட் எடுத்து பாதுகாப்பாக வைக்க முயல்கிறது. ஆனால், அதை பார்க்க கட்சி சார்பாக கூடும் தொண்டர்களின் நிலை? கூடிய தொண்டர்களென்றாலும் கூட்டப்பட்ட திடீர் தொண்டர்களென்றாலும் ஏதோ ஒரு தொண்டருக்கு எதிர்பாராத விதமாக கரோனா தொற்று ஒட்டிக்கொண்டால்? இப்படி ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க மற்றொரு பக்கம் வேல் யாத்திரை என்று தமிழக பாஜக, கூட்டம் கூட்டிக்கொண்டிருக்கிறது.

 

இவ்விரு கட்சிகளின் செயல்பாடுகளையும் குறை கூறி வந்த எதிர்கட்சி திமுக நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தொடங்கியுள்ளது. திமுக, தொடக்கத்தில் அவர்கள் இருவரையும் கூட்டம் கூடினால் கரோனா பரவும், மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அது அமையும் என்று சொல்லி வந்தநிலையில் தற்போது இவர்களும் கூட்டத்தை கூட்டியுள்ளனர். இதனால் உதயநிதி ஸ்டாலின் கைதும் செய்யப்பட்டுள்ளார். தற்போது, எங்களை மட்டும் கைது செய்துள்ளீர்கள், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று அவர்களை பார்த்து கேட்கிறார் உதயநிதி. ஆனால், மக்கள் கண்ணோட்டத்தில் இவர்கள் மூவர் செய்ததும் தவறே. இன்று நடைபெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பும்தான். இதை எப்போது இவர்கள் புரிந்துகொள்வார்களோ? திருந்துவார்களோ? ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் அலையால் மீண்டும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் அடுத்து இரண்டாம் அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களில் தொடங்கி மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என்னும் கட்சிகள் வரை, இரண்டாம் அலைக்கு ஏதுவாக ஏதும் செய்யாமல் இருப்பதே நன்று!