Skip to main content

நாடிஜோதிடம் பார்த்த பகுத்தறிவுக் கவிஞர்! 

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

 

உவமைக்கவிஞர் சுரதா, தமிழ் இலக்கியத்தில் தனித்தடம் படைத்தவர்.
 

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதால், அவர் மீது கொண்ட காதலால், சுப்புரத்தினதாசன் என்று புனைபெயர்  சூட்டிக் கொண்டார்.  ஆரம்பத்தில் சு.ர.தா.  என்று சுருக்கமாகக் கையெழுத்துப் போட்டு வந்தவர்,  காலப்போக்கில் அந்தப் பெயருக்கிடையில் இருந்த புள்ளிகளை விட்டுவிட்டு, சுரதாவாய் ஆகிவிட்டார்.
 

எதையும் புதுமையாகப் பார்க்கும் பார்வை இவருக்குரியது. அதனால், மரபுக் கவிதையில் புதுக்கவிதையின் நுட்பத்தைக் கையாண்டு எழுதினார்.  அதனால் இவரது கவிதைகள் தனிச்சுவையோடு திகழ்ந்தன.

 

suratha


 

’மங்கையர்க்கரசி’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களுக்கு புதிய நடையில் வசனம் எழுதினார். ’உன் கை பட்டால் விஷம் கூடச் செத்துவிடும்’ என்பது சுரதா எழுதிய ஒரு ’சுருக்’ வசனம்.  ’அமுதும் தேனும் எதற்கு...’, ’ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ உள்ளிட்ட  100-க்கும் மேற்பட்ட கலத்தால் அழியாத பாடல்களையும் எழுதி பாமர மக்கள் மத்தியிலும் புகழ்பெற்றார்.
 

தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சாவின் முத்தம், எச்சில் இரவுகள் என ஏராளமான நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

அண்ணா, கலைஞர், எம்ஜி.ஆர் ஆகிய மூன்று முதல்வர்களின் இதயத்தைத் தொட்ட கவிஞர் என்றும் சுரதாவைச் சொல்லலாம். இவர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் சுரதா. கலைஞரின் இளைமைக் கால நண்பராகவும் அவர் இருந்தார். சுரதாவின் தலைமையில்தான் கலைஞர் தயாளு அம்மாளைத் திருவாரூரில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தன் நண்பரான சுரதாவை முரசொலியில் தொடர்ந்து கவிதை எழுதச்செய்தார் கலைஞர். அது அவருக்கு ’உவமைக் கவிஞர்’ என்ற புகழ்ச் சிறகைத் தந்தது. அதனால்...
 

’எனது கவிதைகள் இந்த அளவிற்கு
பரவுவ தற்குப் பழைய நண்பர்
கருணா நிதியே காரண மாவார்
அதற்கு எனது ஆயிரம் நன்றி’- என்று அகவல் கவிதையாலே கலைஞருக்கு நன்றி சொன்னார் சுரதா.
 

*
அரங்கங்களிலும் கோயில் மண்டபங்களிலும்தான் பொதுவாக கவியரங்கங்கள் நடக்கும். சுரதாவோ, தெப்பக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், மாட்டு வண்டிக் கவியரங்கம், ரயில் கவியரங்கம் என்று தொடங்கி விமானக் கவியரங்கம் வரை நடத்தி புதுமை செய்தார். அவர் மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காதவர். இவருக்கு அமைச்சர்களும் ஒன்றுதான் கூலித்தொழிலாளியும் ஒன்றுதான். இருவரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பழகுவார். இளம் படைப்பாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவர்தான்.  அதேபோல், யாராக இருந்தாலும் முகத்திற்கு நேராகக் கடுமையாக விமர்சிக்கும் போக்கும் இவரிடம் உண்டு. பகுத்தறிவுக் கொள்கையில் உறுதியானர் சுரதா.
 

எதற்கிந்த வீண்கதைகள்?-இனி எதற்கிந்த வைதீகம்?’ --என்ற அதிரடிக் குரல் சுரதாவினுடையது.
 

’சாதிமதம் பிரித்தாளும் தந்திரங்க ளாகும்!
சாத்திரமும் கோத்திரமும் தடைக்கற்க ளாகும்’-என மடமையின் தலை மீது அடித்தவர் சம்மட்டியால் அடித்தவர் அவர்.
 

*
எதையும் சோதித்துப் பார்த்தே முடிவெடுக்கும் சுரதா, ஒருமுறை சீர்காழி அருகே இருக்கும் வைத்தீஸ்வரன்கோயிலுக்குப் போய்  அங்கிருக்கும் ஒரு புகழ்பெற்ற நாடிஜோதிடரிடம் சென்று ஓலைச்சுவடி பார்த்தார்..


அப்போது ஜோதிடர், இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு மிகப் பெரிய விருது ஒன்று கிடைக்கப் போகிறது என்று சொல்லி அனுப்பினார். அதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்குள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், ஒரு லட்ச ரூபாயுடன் கூடிய ராஜராஜன் விருதை சுரதாவுக்கு அறிவித்தது.
உங்களுக்குச் சொல்லப்பட்ட ஜோதிடம் பலித்துவிட்டதே என்று சுரதாவிடம் உற்சாகமாகச் சொன்னபோது, அவர் சொன்னார், ’காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்திருக்கிறது. அவ்வள்வுதான்...’.
 

-இதுதான் பகுத்தறிவில் ஊறிப்போன சுரதா.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Poet statue for Tamiloil says CM M.K.Stalin

 

கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். விசயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர் ஆகும். பாரதியாரின் வழித்தோன்றலாகவும்,பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.

 

தமிழ்ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

 

இந்நிலையில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்திருந்தனர். இதனையடுத்து கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டினை முன்னிட்டு கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 50 இலட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

 

Next Story

நான்காயிரம் வண்ண விளக்குகள்... ஒளிர்ந்த பாரதியார்!

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

 Bharatiyar lit by lights!

 

மீசைக் கவிஞன் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் நான்காயிரம் வண்ண விளக்குகள் கொண்டு அமைக்கப்பட்ட பாரதியாரின் முழு உருவம் அனைவரையும் கவர்ந்தது. பள்ளி மைதானத்தில் 150 அடி உயரம், 50 அடி அகலம் என மொத்தம் 7,500 சதுர அடியில் கையில் தடியுடன் பாரதியார் நிற்பது போன்ற கம்பீரமான உருவம் அமைக்கப்பட்டது.

 

இதற்கு நான்காயிரம் எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 50 மாணவர்கள் பாரதி வேடமணிந்து அவரின் பொன்னான கவிதை வரிகளை எடுத்துரைத்தனர். இதுதவிர 25 மாணவிகள் பாரதியாரின் உருவப்படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து கொண்டு பாரதியின் பாடல்களைப் பாடினர். இந்த நிகழ்ச்சியில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகள் தொடர்பான புகைப்படங்கள், பெண் விடுதலை-சமத்துவம் பற்றிய அவரின் புரட்சிகர கவிதைகள் அடங்கிய பதாகைகள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்  எவர்வின்  பள்ளியின்  சி.இ.ஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பாரதியார் நினைவு நாள் இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.