Skip to main content

"தனித்துப் போட்டிங்கிறது தற்கொலைக்குச் சமம்' எனக் கூட்டணிக்கு மல்லுக் கட்டுகிறார் சுதீஷ்

Published on 28/02/2019 | Edited on 04/03/2019

"திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என்பதை வலியுறுத்தி வந்த பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த நிலையில், பிப்ரவரி 25 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி, "2011-ல் நாங்கள் அப்படிச் சொன்னபோது இருந்த அரசியல் சூழல் வேறு; இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாரும் வெல்லமுடியாது. கூட்டணி வைத்தாலும் தமிழகத்தின் நலன்களை முன்னிறுத்தி நடத்தும் போராட்டங்களிலிருந்து பின்வாங்கமாட்டோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருப்பவர்களோடு கூட்டணி சேர்ந் தால்தான் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதற்காகத்தான் கூட்டணியை தேர்ந்தெடுத்தோம்'’ என விளக்கமளித் திருக்கிறார்.

7pmkseats

அன்புமணியின் இந்த விளக்கம் பா.ம.க.வினரிடமும் கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இது பற்றி பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, ‘""அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்தானதை அடுத்து ஜி.கே.மணி, அன்புமணி உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்களிடம் ஆலோசித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது, "திராவிட கட்சிகளைப்பற்றி நாம் வைத்த விமர்சனங்கள் நமக்கு எதிராக பெரிதுபடுத்தப்படலாம். தேர்தல் களத்தில் அ.தி.மு.க. - பா.ம.க. தொண்டர் களிடையே இணக்கமில்லாச் சூழலை இது உருவாக்கும். அதனால் அ.தி.மு.க. தலைவர் களுக்கு விருந்து வைப்பதன் மூலம் இரு கட்சிகளின் தொண்டர்களிடையே நெருக்கம் உருவாகும்' என விவாதிக்கப்பட்டது.

அ.தி.மு.க. தலைவர்களிடம் ராமதாஸும் அன்புமணியும் பேச, அவர்கள் சம்மதித்தனர். இதனையடுத்து திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அ.தி.மு.க. தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் தடபுடல் விருந்து கொடுத்தார் ராமதாஸ். மதுரை வந்திருந்த அமித்ஷா, ஓ.பி.எஸ்.சையும் தங்கமணியையும் மதுரைக்கு அழைத்ததால் மதிய விருந்து இரவு நேர விருந்தாக மாற்றப்பட்டது..

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ம.க. மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பேச்சு எழுந்தபோது, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் "தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கத் துடிக்கும் கட்சி தலைவர்கள், கடந்த தேர்தலில் தி.மு.க.வை தாக்கிப் பேசிய பேச்சுக்களை நாம் தொகுத்து வைக்கலாம். அவர்களுக்கு பதிலடியாக தேர்தல் களத்தில் பயன்படுத்துவோம். கூட்டணி வேறு; கொள்கைகள் வேறு' என சொல்லியிருக்கிறார்கள்.

இருப்பினும், "பா.ம.க. ஏன் கூட்டணி வைத்தது என்பதை தெளிவுபடுத்திடலாம்' என அவர்களிடம் ராமதாஸ் சொன்னதுடன், மீடியாக்களிடமும் தெளிவுபடுத்துமாறு அன்புமணியிடமும் சொன்னார்'' என்று பின்னணிகளை விவரித்தனர் பா.ம.க.வினர்.

தங்கள் தொகுதி பா.ம.கவிடம் பறிபோகுமோ என்ற பதற்றம் வட தமிழகத்திலுள்ள அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் உள்ளது. பா.ம.க.வினருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் எடப்பாடியிடம் கேட்டு வருகிறார்கள். அவரோ, "தே.மு.தி.க.வின் முடிவைப் பொறுத்து சில பல விசயங்கள் மாறக்கூடும்' என சொல்லியபடி இருக்கிறார்.

பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதி கள் குறித்து அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர் களிடம் நாம் பேசிய போது, ‘""மத்திய சென்னை, ஸ்ரீபெரும் புதூர், அரக்கோணம், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அ.தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க. வராதபட்சத்தில், மத்திய சென்னைக்குப் பதிலாக மயிலாடுதுறையும், திண்டுக்கல்லுக்குப் பதிலாக கள்ளக்குறிச்சியும் மாற்றி தருவதாக எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் எடப்பாடி மற்றும் ராமதாஸுக்கிடையே போட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது''’ என சுட்டிக்காட்டுகிறார்கள்.

anbumani


மேலும், தே.மு.தி.க.வின் வருகை குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, ""மூன்று சீட்டுதான் அதிகபட்சமாக தரமுடியும்னு அ.தி.மு.க. சொல்லி விட்டது. பா.ஜ.க. கொடுத்த தொடர் வலியுறுத்தலில் தொடர்ந்த பேச்சு வார்த்தையால், மெடிக்கல் கல்லூரிக்கு ஒப்புதல், பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் , தேர்தல் செலவுத் தொகை என டிமாண்டுகள் தொடர்ந்தன. ராஜ்யசபா சீட்டுக்கு எடப்பாடி கடும் மறுப்பு தெரிவித்தார். அந்தக் கோபத்தில்தான் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வைபவத்தை துவக்கினார் பிரேமலதா. இந்த நிலையில், "யாரிடமும் கெஞ்ச வேண்டாம். நாம் தனித்துப் போட்டியிடுவோம். நாம் வாங்கும் ஓட்டு இரண்டு கட்சி களையும் காலி செய்துவிடும்' என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆவேசம் காட்டி வருகிறார். "தனித்துப் போட்டிங்கிறது தற்கொலைக்குச் சமம்' எனக் கூட்டணிக்கு மல்லுக் கட்டுகிறார் சுதீஷ். என்ன முடிவெடுப்பதென தெரியாமல் தடுமாறுகிறார் பிரேமலதா'' என்று விவரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதற்கிடையே, "கடந்த 2016 தேர்தலில் ம.ந.கூ. கட்சிகளுடன் இணைந்து நின்றே 2.4 சதவீத வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது தே.மு.தி.க. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.வுக்கு பலனில்லை. அதனால் அவர்களை அழைக்க வேண்டாம்' என அ.தி.மு.க. தலைமைக்கு யோசனை தெரிவித்திருக்கிறதாம் பா.ம.க.

 

Next Story

“அம்மா உணவகங்களைத் தரத்துடன் இயக்க வேண்டும்” - முதல்வருக்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
EPS insistence on CM for most runs amma restaurants with quality

ஜெயலலிதா ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க தமிழக முதல்வருக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் 2021 மே மாதம் வரை, குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் நகரப் பகுதிகளில் வாழ்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளர்களது அன்னலட்சுமியாக தமிழகம் முழுவதும் சுமார் 664 அம்மா உணவகங்கள் நகரப் பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் திறக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வந்தன.

அம்மா உணவங்களில் விற்கப்படும் உணவு வகைகளின் சுவை மற்றும் தரத்தை ஜெயலலிதாவும் அவர்வழியில்  ஆட்சி செய்தபோது நானும், அமைச்சர் பெருமக்களும் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்தோம். சுவை மற்றும் தரத்தை ஆய்வு செய்தபின் தக்க ஆலோசனைகள் வழங்கி அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டன என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

2021-இல் ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை மூன்றில் ஒரு பங்காக குறைத்தும், அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலும், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தரமாக வழங்காமல், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகள் வயிராற உண்ணும் உணவின் தரத்தைக் குறைத்து பல அம்மா உணவகங்களுக்கு மூடு விழாவும் நடத்தியது திமுக அரசு.

திமுக அரசின் மேற்கண்ட செயல்பாட்டினை உடனடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாக கடுமையாக எதிர்த்தேன். அதனையடுத்து, அம்மா உணவகங்களை மூடும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தியது திமுக அரசு. உண்மை நிலை இவ்வாறு இருக்க, நிர்வாகத் திறனற்ற  திமுக அரசின் முதலமைச்சர் 19.7.2024 அன்று, தனது எக்ஸ் வலைத்தளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். மேலும், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாக குறிப்பிட்ட  திமுக அரசின் முதலமைச்சர், உணவின் சுவையை சோதித்தார்.

முதலமைச்சர் ஆய்வுக்கு வருவார் என்று முன்னதாகவே அம்மா உணவகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அங்கு தரமாக உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. எஞ்சிய அம்மா உணவகங்களில் நேற்று நடைபெற்றதை போல் கடந்த மூன்றாண்டுகளில் எத்தனைமுறை உணவின் தரத்தை அதிகாரிகளோ, திமுக அமைச்சர்களோ சோதித்தனர் என்று முதலமைச்சர் விளக்குவாரா ? ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை 19.7.2024 அன்று திமுக அரசின் முதலமைச்சர் அரங்கேற்றியுள்ளார். ஜெயலலிதாஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் மூன்றாண்டுகளில் அதை உயர்த்தாமல், சுமார் 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளது இந்த திமுக அரசு.  முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்?

இனியாவது வாய் பந்தல் போடாமல், உண்மையிலேயே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு சுவையுள்ள உணவு வகைகளை வழங்கவும், மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன், மேலும் புதிய அம்மா உணவகங்களை, ஜெயலலிதா ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Former Minister MR Vijayabaskar appears in court

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். 

Former Minister MR Vijayabaskar appears in court

அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர்  மீது அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (19.07.2024) ஆஜர்படுத்தப்பட்டார்.