Skip to main content

9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘கல்மூஞ்சி’

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
stone face

 

பாகுபலி திரைப்படத்தில் கதாநாயகன் பிபாஸ் கையில் கிடைக்கும் ‘மரமூஞ்சி’ மாதிரி, 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய ‘கல்மூஞ்சி’ மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்பு அருகே கிடைத்துள்ளது.

 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுவது மேற்குக்கரை. இங்குள்ள ஹெப்ரான் என்ற இடத்தில் இஸ்ரேலிய குடியிருப்பு அருகே இந்த மரமூஞ்சி கிடைத்துள்ளது. வயல்களுக்கு ஊடாக சென்றபோது ஒரு மனிதர் கையில் இது கிடைத்ததாக தொல்லியல் நிபுணர் ரோனிட் லுபு கூறினார்.

 

இந்த கல்மூஞ்சியை கண்டுபிடித்தவர் அந்த இடத்தை தொல்லியல் துறையினரிடம் காட்டினார். விவசாயத்திற்காக நிலத்தை பயன்படுத்தியபோபோது இது வெளிக்கிளம்பியிருக்கலாம். அத்துடன் இந்த நிலத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைக்கலாம் என்று லுபு கூறினார். அதாவது, அந்த நிலத்தை தொல்லியல் துறை கையகப்படுத்தப் போவதை சூசகமாக தெரிவித்தார்.

 

இந்த கல்மூஞ்சியின் சிறிய வாயும், பற்களும், கன்னத்தில் மெல்லிய எலும்பு தெரியும் வகையில் நுணுக்கமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது என்கிறார் லுபு.

 

முதலில் இந்த கல்மூஞ்சியை பார்த்த ராக்பெல்லர் மியூசியத்தை சேர்ந்தவர்கள் உற்சாகத்தில் கத்தினார்கள். இந்த கல்மூஞ்சி கிடைத்த இடத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

 

இதுவரை உலகம் முழுவதும் இதுபோன்ற 14 கல் முகங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் இதுதான் மிகவும் பழமையானது என்கிறார்கள்.

 

இதுபோன்ற கல்லில் செதுக்கப்பட்ட முகங்களை புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் எப்படி பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை கணிக்க முடியவில்லை. ஒருவேளை வழிபாட்டு சமயத்தில் குறிப்பிட்ட சிலர் இந்த கல் முகமூடிகளை பயன்படுத்தி இருக்கலாம் என்று யூகிக்கிறார்கள்.