Skip to main content

சாம்பியா நாட்டில் ஸ்டெர்லைட் வெளியேற்றம்! இங்கே எப்போது?

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை -திருக்குறள்
 

சாம்பிய நாட்டு குடியரசுத் தலைவர் எட்கார் லுங்கு 

ஸ்டெர்லைட் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை சாம்பியா அரசாங்கம், கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்திலிருந்து வெளியேற்றி விட்டது. நமது நக்கீரனில் நாம் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் உலகெங்கும் நடத்தி வரும் சுரண்டல்களையும், சுற்றுச்சூழல் கேடுகளையும் வெளியிட்டு வருகிறோம். தூத்துக்குடியில் தொடங்கி, லண்டன் பங்குச் சந்தை, இங்கிலாந்து உச்ச நீதி மன்றம் வரையிலும் ஸ்டெர்லைட் அகர்வால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருகிறார். தற்பொழுது சாம்பிய குடியரசுத் தலைவர் எட்கார் லுங்கு அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சசை, KCM என்றழைக்கப்படும் கொங்கோலா தாமிரச் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றி விட்டார்.

 

vedantha



தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூடல் 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு தாமிரக் கனிமங்களை வேதாந்தா ரிசோர்சஸ், ஆஃப்ரிக்க நாடான சாம்பியா, ஆஸ்திரேலியாவில் டாஸ்மானியா மற்றும் இந்தியாவில் ஒடிஷா மாநிலத்தில் காலஹந்தி, ராயகடா ஆகிய இடங்களில் உள்ள தாமிரச் சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்தது. இதில் மிகப் பெரும்பான்மை யான, இன்னும் சொல்லப் போனால், தூத்துக்குடி ஆலைக்குத் தேவையான தாமிரக் கனிமத்தில் ஏறத்தாழ 90 விழுக்காடு கனிமம் சாம்பியாவில் இருந்துதான் வந்தது. வேதாந்தா 4 லட்சம் டன் தாமிரக் கனிமத்தை சாம்பியாவின் கொங்க்கோலா சுரங்கத்தில் இருந்து கொண்டு வரத் திட்டமிட்டது. இந்த நிலையில்தான் தூத்துக்குடிப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

ஆஸ்திரேலியத் தாமிரச் சுரங்கம் மூடல் 

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானிய மாநிலத்தில் உள்ள மௌண்ட் லையல் தாமிரச் சுரங்கத்தையும் வேதாந்தா வாங்கியது. ஆனால், அங்கும் பாதுகாப்பான முறையில் சுரங்கத்தை நடத்தாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2017-ல் ஆறு வார இடைவெளிக்குள் அலிஸ்டர் லூகாஸ், க்ரெய்க் க்ளீசன், வெல்ஷ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் வேதாந்தாவின் மௌண்ட் லையல் தாமிரச் சுரங்கத்தில் கொல்லப்பட்டார்கள். இதனால், டாஸ்மானிய மாநில அரசாங்கம் வேதாந்தாவின் மௌண்ட் லையல் தாமிரச் சுரங்கத்தை, பாதுகாப்பான முறையில் வேதாந்தா நடத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி, மூடி விட்டது. இப்பொழுது சாம்பியாவில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் இருந்தும் வேதாந்தா சாம்பிய அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டு விட்டது. 

 

sterlite



அகர்வால் எனும் சர்வதேச வில்லன் 

அனில் அகர்வால் மிகச்சிறந்த தந்திரசாலியான வியாபாரி. இனிக்க இனிக்கப் பேசுவதில் இமயமலையை விட உயர்ந்தவர். ஆனால், அவருடைய தந்திராபோதயங்களோ ஒரு கோடி நரிகளுக்குச் சமமானது. 2004-ல் இன்றைய மதிப்பின்படி சுமார் 2800 கோடி ரூபாய்க்கு விலை கூறப்பட்ட ஒரு நிறுவனத்தை வெறும் 175 கோடிக்கு வாங்கியவர் என்றால் அவருடைய சாமர்த்தியத்தை எப்படிப் புகழ்வது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அந்த நிறுவனத்தை 175 கோடி ரூபாய்க்கு வாங்கிய பொழுது அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் 420 கோடி ரூபாய். இப்படி 420 கோடி ரூபாயை வங்கியில் வைத்துள்ள ஒரு நிறுவனத்தை 175 கோடி ரூபாய்க்கு வாங்கியவரின் மாபெரும் திறமையைப் புகழ்வதா அல்லது இவ்வளவு ஏமாளித்தனமாக அந்த நிறுவனத்தை விற்றவர்களின் நிலையை எண்ணி வருந்துவதா? நீதி பரிபாலனத்திலேயே குமாரசாமிகள் இருந்தால் மிகவும் பின்தங்கிய நாடுகளின் அரசாங்கத்தில் குமாரசாமிகள் இல்லாமலா போய் விடுவார்கள்? 

 

sterlite



முதல் நாள் கொடுத்தது 175 கோடி - மறுநாள் பெற்றது 420 கோடி

வெறும் 175 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய மறுநாள் அந்த நிறு வனத்தின் நிர்வாகம் அகர்வாலின் கைக்கு வந்துவிட்டது. உடனடியாக, தான் கொடுத்த 175 கோடியை அந்த நிறுவனத்தின் வங்கிக் கையிருப்பில் இருந்த 420 கோடி ரூபாயிலிருந்து எடுத்துக்கொண்டால் மீதமுள்ள 245 கோடி ரூபாய் இலவசமாகக் கிடைக்கிறது. அத்தோடு சேர்த்து பல்லாயிரம் கோடிகளைக் கொட்டித் தரக்கூடிய சுரங்கமும் அதில் இருந்த தாமிரக் கனிமங்களும் வேதாந்தாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. அதே போல் ஃஈங நிறுவனத்தை வாங்கிய பொழுது அந்த நிறுவனத்தின் மற்ற பங்கு தாரர்களுக்கு வேதாந்தா ரிசோர்சஸ் தர வேண்டிய 280 கோடி ரூபாயை பிறகு தருவதாக வாக்குறுதி அளித்து அந்தப் பணத்தைத் தராமலேயே ஏமாற்றியதாக சாம்பியாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும், 2.5 மெட்ரிக் டன் தாமிரத்தைக் கொண்ட கனிமம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. சங்கா என்னும் சுரங்கத்தில் வெட்டுவதற்குத் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த கனிமங்களும் ஏராளமாக இருந்தன. அது மட்டுமல்லாது ஒரு மாதத்தில் உற்பத்தியாகும் தாமிரம் வாடிக்கையாளருக்கு அனுப்பப் பட்டிருந்தது. அதற்கான பணமும் அகர்வாலுக்கே கிடைத்தது. இப்படி, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டித்தரும் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தின் பெரும்பான்மைப் பங்குகளை அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் வெறும் 175 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 

கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தின் பங்குதாரர்கள் 

ஆஃப்ரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய தாமிரச் சுரங்கமான கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தின் பங்குதாரர்கள் மூன்று நிறுவனங்கள்.

1. வேதாந்தா ரிசோர்சஸ் - 79.4%

2. சாம்பியா கன்சாலிடேடட் காப்பர் மைன்ஸ் லிமிடெட் (ZCCM-IH) - 20.6%

3. சாம்பிய அரசு - கோல்டன் ஷேர் (ZCCM-IH) நிறுவனத்தின் 20.6% பங்குகளில் 77.7% பங்குகள் சாம்பிய அரசாங்கத்திடமும் எஞ்சிய 22.3% பங்குகள் தனியாரிடமும் உள்ளன. 

கோல்டன் ஷேர் 

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட் டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியா உள்ளிட்ட பல நாடு களுக்கு விடுதலை அளித்து விட்டு வெளியேறியது. ஆனாலும், அந்தந்த நாடுகளில் இங்கிலாந்து அர சாங்கம் நடத்தி வந்த நிறுவனங்களைத் தன்னு டைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க ‘ கோல் டன் ஷேர்’ என்ற முறையைக் கொண்டு வந்தது. எந்த தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனத் திலும் முடிவுகள் எடுக்கப்படும் பொழுது பங்கு தாரர்கள் வாக்களிப்பார்கள். அதற்கு பங்குதாரர் களின் வாக்குரிமை என்று பெயர். பெரும்பான்மை யான வாக்குகளைப் பெறும் முடிவுகளே அந்த நிறு வனத்தைக் கட்டுப்படுத்தும். அந்த முடிவுகளின் அடிப்படையில்தான் நிறுவனம் இயங்கும். எனவே ஒரு நிறுவனத்தில் யார் ‘கோல்டன் ஷேரை’ வைத் திருக்கின்றார்களோ அவர்களுக்கு 51% வாக்குரிமை உண்டு. கோல்டன் ஷேர் வைத்திருப்பவர்களுக்கு பெரும்பான்மை பங்குகள் இருக்க வேண்டும் என் கிற அவசியமில்லை. இத்திட்டத்தை இங்கிலாந்து பின்பற்றத் தொடங்கியதன் பின்னர் எல்லா அரசாங்கங்களும் அதே முறையைப் பின்பற்றத் தொடங்கின. சாம்பியா அரசாங்கமும் KCM எனப் படும் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தில் தன் னுடைய கோல்டன் ஷேரின் மூலம் 51% வாக்குரி மையை வைத்திருந்தது. அந்த வாக்குரிமையோடு ZCCM-IH நிறுவனத்தின் 20.6% வாக்குரிமையையும் பயன்படுத்தி அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை சாம்பிய அரசாங்கம் வெளியேற்றியதோடு மட்டுமல்லாமல் KCM நிறுவனத்தையும் கலைத்துவிட்டது (Liquidation). 


வேதாந்தாவை வெளியேற்றியது ஏன்? 

2004-ஆம் ஆண்டு கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தை வாங்கியதில் இருந்தே வேதாந்தா அந் தச் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கத் தொடங்கியது. இவ்வளவு பெரிய சுரங்கத்தை நடத்த வேண்டு மென்றால் அதற்குத் திறமையான சுரங்க மேலா ளர்கள் வேண்டும். ஆனால், அகர்வால் தன்னுடைய உறவினர்களையே அங்கு நிர்வாகிகளாக நியமித் தார். சுரங்க அறிவு இல்லாத அவர்கள் சாம்பிய மக்களின் சொத்தான கொங்க்கோலா தாமிரச் சுரங் கத்தை சூறையாடினார்கள். 2007-ல் KCM பெரும் நட்டத்தைக் கண்டது. ஏனென்றால், கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தில் தான் முதலீடு செய்வதாக உறுதி யளித்திருந்த இருபத்தோராயிரம் கோடி ரூபாயை (3 பில்லியன் அமெரிக்க டாலர்) வேதாந்தா முத லீடு செய்யவே இல்லை. ஆனாலும் இன்றுவரை தாங்கள் 21,000 கோடி ரூபாயை அந்தச் சுரங்கத்தில் முதலீடு செய்திருப்பதாகவே வேதாந்தா கூறி வருகிறது. ஆனால் அந்த முதலீடு செய்யப்படவே இல்லை என்று சாம்பியாவிலிருந்து வெளி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2009லேயே வேதாந்தா சுரங்க விதிகளைப் பின்பற்றவில்லை என்றும், அங்கே பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தித் தரவில்லை என்றும், தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்கவில்லை என்றும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. ஆனால், அகர்வால் அதை பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. 

சாம்பிய மக்கள் போராட்டம் 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வரையிலும் இதே கொடுமையை வேதாந்தா செய்து வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தொழிலாளர்களுக்கும், ஒப்பந்தக் காரர்களுக்கும் வேதாந்தா ஊதியம் சரிவரக் கொடுக்கவில்லை. அதனால் மக்கள் வெகுண்டெழுந்தனர். கடந்த மே மாதம் மக்கள் போராட்டத்தை வேதாந்தா ஒடுக்க முனைந்தது. இதற்கு தமிழக அரசு தூத்துக்குடி போராட்டத்தில் வேதாந்தாவிற்கு ஆதரவாக இருந்து 13 பொது மக்களைச் சுட்டுக் கொன்றதைப் போலவே, சாம்பிய அரசாங்கமும் வேதாந்தாவிற்கு ஆதரவாக தன்னுடைய கலவரப் போலீசை அனுப்பியது. ஆனால், நல்ல வேளையாக யாரையும் சுட்டுக் கொல்லவில்லை. இந்தப் போராட்டத்திற்கு சங்கா பாராளுமன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். எல்லா தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. அரசு விழித்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் அங்கே நடந்த பாராளு மன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டது.

  sterlite



வேதாந்தாவின் சுரங்க விதிமுறை மீறல் 

கடந்த ஆண்டே வேதாந்தாவின் சுரங்க உரிமை விதிமுறை மீறல்கள் குறித்து சாம்பிய அரசாங்கம் வேதாந்தாவிற்கு தாக்கீது அனுப்பியிருந்தது. ஆனால், அதைப் பற்றி வேதாந்தா கவலை கொள்ளவில்லை. இந்த நிலையில் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தின் மற்றொரு பங்குதாரரான சாம்பியா கன்சாலிடேடட் காப்பர் மைன்ஸ் லிமிடெட் (ZCCM-IH) நிறுவனம், வேதாந்தா தொடர்ந்து KCMல் ஊழல் செய்து பணத்தைக் கொள்ளை யடிப்பதாகவும், சுரங்க விரிவாக்கத்திற்குத் தேவையான முதலீடுகளைச் செய்யவே இல்லை என்றும் குற்றம் சாட்டியது. ஆகையால், சாம்பிய அரசாங்கம் வேறு வழியின்றியும், மக்கள் போராட்டத்தின் வலிமையினாலும் தன்னுடைய ‘லையன் ஷேர்’ உரிமையைப் பயன்படுத்தி வேதாந்தாவை வெளியேற்றி விட்டது. அதோடு மட்டுமல்லாமல் KCM என்னும் கொங்க்கோலா தாமிரச் சுரங்க நிறுவனத்தையே கலைத்து விட்டது. இதனை சாம்பிய நீதிமன்றம் உறுதி செய்து மேற்பார்வைக் குழுவையும் அமைத்தது. இந்த முடிவை கொங்க்கோலா தாமிரச் சுரங்க ஊழியர்களும், பொது மக்களும், தொழிற்சங்கங்களும் கொண்டாடி ஆதரித்தனர்.

சாம்பிய அரசின் முடிவை உறுதி செய்த சாம்பிய நீதி மன்றம், தன் தீர்ப்பில் வேதாந்தா எப்படியெல்லாம் நட்டக் கணக்கு காட்டியுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பில் அமெரிக்க டாலரில் தரப்பட்டிருக்கும் தொகையை, இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு சராசரியாக 70 ரூபாய் என்ற கணக்கில் கணக்கிட்டு அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

 

sterlite



KCM என்னும் சிங்கோலா தாமிரச் சுரங்கத்தில் வேதாந்தா காட்டிய நட்டக் கணக்கு சாம்பிய நீதிமன்றத் தீர்ப்பில் கூறியுள்ளவாறு: 

2004-ல் அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ், KCM என்னும் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தைக் கையகப் படுத்திய பொழுது 11.8 கோடி ரூபாயாக இருந்த நட்டம் 2019-ல் 2332 கோடியாக உயர்ந்துள்ளது. 2004லிருந்து ஒரு ஆண்டு கூட, ஒரு ரூபாயைக் கூட லாபமாக வேதாந்தா காண்பிக்கவே இல்லை. 2004-லிருந்து 2019-வரை வேதாந்தா காண்பித்துள்ள நட்டம் 16417.5 கோடி ரூபாய். இந்த லட்சணத்தில் ஊழியர்களுக்கு சரிவர ஊதியம் வழங்கவில்லை. சிங்கோலா பகுதியின் சுற்றுப்புறச் சூழலையும், தண்ணீரையும் விஷமாக்கியுள்ளது.

நுணலும் தன் வாயால் கெடும் 

சாம்பியாவில் நட்டக் கணக் கைக் காட்டிவிட்டு, வேதாந்தா தலைவர் அகர்வால் தன் வாயா லேயே, தான் சாம்பியாவின் சிங் கோலா தாமிரச் சுரங்கத்தின் மூலம் ஆண்டொன்றிற்கு 3500 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார். இதனை அவர் யாரிடமும் இரக சியமாகக் கூறவில்லை. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம், பெங்களூரில் நடை பெற்ற ஜெயின் சர்வதேச வர்த்தகக் கழகத்தின் (Jain International Trade Organisation) கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சுரங்கத்தை தான் வெறும் 175 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் தம்பட்டம் அடித்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 

sterlite



சாம்பிய அரசின் முடிவில் மாற்றமில்லை 

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்கள் மட்டுமின்றி இன்னும் ஏராளமான காரணங்களைக் கூறி சாம்பிய அரசு கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தைக் கையகப்படுத்தி வேதாந்தாவை வெளியேற்றி உள்ளது. இது குறித்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சாம்பிய குடியரசுத் தலைவர் எட்கர் லுங்குவை சந்திக்க வேதாந்தா பலமுறை முயன்றும், அவர் மறுத்து விட்டார். சாம்பிய சுரங்கத்துறை அமைச்சர் ரிச்சர்ட் முசூவா, கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தை கனடா, ஆஸ்திரேலியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுரங்க நிறுவனங் களும், மூன்று சீன நிறுவனங்களும் வாங்கு வதற்கு ஆர்வமாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையை எழுதி முடிக்கும் நேரத்தில் வேதாந்தா சாம்பிய அரசை எதிர்த்து தென்னாப் பிரிக்க நாட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது (23/07/2019). அத்தீர்ப்பில், சாம்பிய அரசு KCM என்னும் கொங்க்கோலா தாமிரச் சுரங்கத்தைக் கைப்பற்றி அந்நிறுவனத்தைக் கலைத்ததற்கு இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால், தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தின் தடை சாம்பியாவைக் கட்டுப்படுத்தாது என்று சாம்பிய அரசு தெரிவித்துள்ளது. கையகப்படுத்தும் பணிகள் தொடரும் என்றும், சிங்கோலா மக்கள் வேதாந்தா சிங்கோலா சுரங்கத்திலிருந்து எந்தப் பொருளையும் வெளியே கொண்டு செல்லாதபடி பாதுகாக்க வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், PhD, ஆஸ்திரேலியா.
(ஆதார உதவி: Miriam, Foil Vedanta).

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.