Skip to main content

மோடியுடன் சமரசமா? சீனியர்களிடம் சீறிய ஸ்டாலின்!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Stalin dmk parliament election

நாடாளுமன்றத் தேர்தலில் வேகம் காட்டிவரும் தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தொகுதிப் பங்கீட்டுக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மோடியுடன் எந்த நிலையிலும் சமரசம் கிடையாது என்று கோபம் காட்டியிருக்கிறார். ஸ்டாலினின் கோபம், தி.மு.க. சீனியர்களையே மிரள வைத்திருக்கிறது என்கிறார்கள்.

தேர்தலை எதிர்கொள்ள வார் ரூம் அமைத்து நாலுகால் பாய்ச்சலில் தி.மு.க. பாய்ந்து வரும் நிலையில், அமைச்சர்களுக்கு எதிரான சூமோட்டோ வழக்குகள் சூடு பிடிப்பதால் தி.மு.க.வின் சீனியர்களிடம் ஒருவித கிலி பரவி வருகிறது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர்களுக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளை நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் விசாரிக்கலாம் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பட்டியலிட்டார். ஆனந்த்வெங்கடேஷிடமிருந்து இந்த வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட வேண்டும் என திட்டமிட்ட தி.மு.க.வின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

Stalin dmk parliament election

இதுகுறித்து தி.மு.க. சீனியர் வழக்கறிஞர்களிடம் நாம் பேசியபோது, ஆஃப் த ரெக்கார்டாக நம்மிடம் பேசிய அவர்கள், "சூமோட்டோ வழக்குகளை எடுத்துக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே வழக்குகளை விசாரிக்கிறார். கீழமை நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட அமைச்சர்களின் விடுதலை தீர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்பதால்தான் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கினை தாமாகவே முன்வந்து மேல்முறையீட்டு மனுவாக எடுத்தார் ஆனந்த்வெங்கடேஷ். அப்படிப்பட்ட நிலை இருப்பதால் தான் தீர்ப்பு குறித்த பயம் வந்திருக்கிறது. அதாவது, தீர்ப்பு சாதகமாக அமைந்துவிட்டால் அமைச்சர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. தி.மு.க.வும் தேர்தல் களத்தில் துணிச்சலாக களமாடும். ஆனால், தீர்ப்பு பாதகமாக வந்துவிட்டால்தான் நிறைய சிக்கல்களை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். குறிப்பாக, தீர்ப்பில் இரண்டு ஆண்டுகளுக்குமேல் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டால் உடனடியாக தங்களின் அமைச்சர் பதவியை வழக்கை எதிர்கொண்ட அமைச்சர்கள் இழப்பார்கள். அப்படியொரு சம்பவம் நடந்தால், அது தி.மு.க. மீதான எதிர்மறை கருத்தை தேர்தல் களத்தில் உருவாக்கும். இந்த அச்சம் தான் அமைச்சர்களிடமும், தி.மு.க. வழக்கறிஞர்களிடமும் சூழ்ந்திருக்கிறது''’என்கிறார்கள்.

இப்படிப்பட்ட அச்சம் அமைச்சர்களிடம் அதிகரித்து வரும் நிலையில் தான், இதுகுறித்து ஸ்டாலினிடம் விவாதிக்க வேண்டும் என காத்திருந்தனர். ஸ்பெயின் நாட்டிற்கு சென்று விட்டு 7-ந் தேதி சென்னை திரும்பினார் ஸ்டாலின். சென்னைக்கு அவர் வந்தடைந்த நிலையில், தேர்தலுக்காக அமைக்கப்பட்ட குழுக்களின் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி ஆய்வு நடத்தினார்.

இதனையடுத்து இரண்டுகட்ட ஆலோசனையும் நடந்தது. அந்த ஆலோசனையில்தான் ஸ்டாலினின் உறுதியையும் கோபத்தையும் எதிர்கொண்டிருக்கிறார்கள் சீனியர்கள்.

Stalin dmk parliament election

இதுகுறித்து தி.மு.க. தரப்பில் விசாரித்த போது, “தேர்தல் கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் நமக்கு சாதகமாக இருப்பதுபோல, மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் என பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருப்பதாகவே கருத்துக்கள் வருகின்றன. மீண்டும் ஆட்சியில் மோடி வந்தால் நிச்சயம் நமக்கு எதிரானவைகளைத்தான் செய்வார். இப்போதே, சூமோட்டோ வழக்குகளில் நமக்கு எதிராகத் தீர்ப்பு வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்னு சொல்றாங்க. நம்முடைய வழக்கறிஞர்கள் கூட அந்த மனநிலையில்தான் இருக்காங்க. அதனால, சில எதார்த்த சூழலை கருத்தில் கொண்டு டெல்லியோடு (மோடி) நாம் மல்லுக்கட்டுவதைக் குறைத்துக் கொள்ளலாமே என மூத்த நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இதனை முதல்வர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உடனே, "என்ன பேசுறீங்க? நமக்கும் அவங்களுக்கும் (பா.ஜ.க.) எந்த விசயத்திலும் ஒத்துப்போகாது. கொள்கைன்னு வந்துட்டா ஆட்சியை தூக்கி எறியத்தான் கழகத் தொண்டர்கள் சொல்வாங்க. அப்படியிருக்கும் போது டெல்லியோடு சமரசம் எதுக்கு? மாநிலத்துல நாம ஆட்சியில இருக்கோம்; ஒன்றியத்துல அவங்க இருக்காங்க. மாநில அரசுங்குற முறையில நிர்வாக ரீதியாக ஒன்றிய அரசோடு இணக்கமாக இருந்து தமிழ்நாட்டுக்குத் தேவையானதைப் பெறலாம் என நாம் முயற்சித்தாலும் நம்மை வஞ்சிப்பதைத்தானே கொள்கையா வெச்சிருக்காங்க.

வெள்ள நிவாரணம் கேட்டு எத்தனை முறை கடிதம் அனுப்பினோம்; நேரிலும் அவரிடம் (மோடி) வலியுறுத்தினோம். ஆனா, ஒரு பைசாவாவது கொடுத்தாங்களா? இல்லையே! தி.மு.க.வை பழிவாங்கறதா நெனச்சி, நம் மக்களைத்தானே பழி வாங்கிக்கிட்டு இருக்காங்க! இப்படி நிறைய இருக்கு. அதையெல்லாம் தாண்டித்தான் நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, அவங்களிடம் சமரசமானோம்னா அதனால் வர்ற விமர்சனம் என்னைத்தானே பாதிக்கும்? கொள்கையை விட்டுட்டு சமரசம் ஆக முடியாது. இதனால் எது நடந்தாலும் எதிர்கொள்ற சக்தி நமக்கு இருக்கு. மோடிக்கு பயப்படற ஆள் நான் இல்லை. ஏன், நம் தொண்டன் கூட பயப்படமாட்டான். எது நடந்தாலும் பார்த்துக்கலாம். 40 தொகுதிகளையும் ஜெயிக்கிற வியூகத்தில் சீரியசாக இருங்க! என முதல்வர் ஸ்டாலின் கோபமாக சொல்லியிருக்கிறார். அவருடைய கோபமும் பா.ஜ.க.வை எதிர்க்கும் உறுதியும் அமைச்சர்களையும் சீனியர் நிர்வாகிகளையும் மிரள வைத்துவிட்டது'' என்கிறார்கள் தி.மு.க. தரப்பினர்.

இதனையடுத்து தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். கூட்டணிக் கட்சிகளின் சிட்டிங் தொகுதிகள் பலவற்றிலும் சிக்கல் இருக்கிறது; அந்த தொகுதிகளில் இந்தமுறை தி.மு.க.தான் போட்டியிட வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள். 30 தொகுதிகளுக்கும் குறையாமல் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கினால் தோற்றுப்போவார்கள். கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை மாற்றியமையுங்கள்.

சிட்டிங் தொகுதின்னு சொல்லி அவங்களுக்கே தூக்கிக் கொடுக்கக்கூடாது. தொகுதியை மாத்தாமலே இருந்தா அந்த தொகுதியில நாம் எந்த தேர்தலில்தான் போட்டியிடுவது? கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் யார் மீதும் தொகுதியில் நல்ல அபிப்ராயம் இல்லை என்றெல்லாம் நிர்வாகிகள் வலியுறுத்தியதை ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர். இப்படிப்பட்ட சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவுக்கு வராமல் இருப்பதை ரசிக்காத ஸ்டாலின், இன்னும் ஒரு வாரத்துக்குள் கூட்டணிக் கட்சிகளுக்கான எண்ணிக்கையையும் தொகுதிகளையும் இறுதி செய்யுமாறு தொகுதிப் பங்கீட்டு குழுவினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களோ, தி.மு.க.விடம் கூடுதல் சீட் கேட்டுப் பெறவேண்டும்; அது கிடைக்காதபட்சத்தில் கடந்தமுறை போட்டியிட்ட எண்ணிக்கை குறைத்துவிடாமல், அதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல், தேர்தல் செலவுகளுக்கும் தி.மு.க. தலைமை உதவ வேண்டும் என்கிற கோரிக்கையையும் ரகசியமாக வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில், தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் பலகட்டப் போராட்டங்களை இந்த மாதம் முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துங்கள்; அரசு பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புங்கள் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியே இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போராட்டங்கள் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய தலைவலியையும், நெருக்கடியையும் முதல்வர் ஸ்டாலினுக்குக் கொடுத்துவருகிறது.

இதுகுறித்து அரசின் உயரதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறார் ஸ்டாலின். தற்போது, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர், சட்டமன்றத்தில் தொடங்கியிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில், பழைய ஓய்வூதியம் உள்பட அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட சிலபல கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்கிற அறிவிப்பை சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடமும், ஆசிரியர்களிடமும் அதிகரித்தபடி இருக்கிறது. அத்தகைய அறிவிப்பு வருகிற பட்சத்தில் தேர்தல் களம் இன்னும் சூடாகும் என்கிறார்கள்.