Skip to main content

வேலுமணிக்காக வரும் ஈஷா! அ.தி.மு.க.வில் அடுத்த பிளவு?

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

SP Velumani to break ADMK ?

 

‘என்றென்றும் அ.தி.மு.க.காரன்’ என சனிக்கிழமையன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. இனிமேல் பா.ஜ.க.வுடன் எவ்வித கூட்டணியும் கிடையாது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, அதற்கடுத்து வரவிருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அறிவித்தது. இதனையடுத்து வேலுமணிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து மோதல், உரசல் என செய்திகள் சிறகடித்துப் பறந்தது. இந்த நிலையில், வேலுமணியின் எக்ஸ் தளப்பதிவு எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டவே எனவும், இதன் பின்னணியில் ஈஷாவின் ஜக்கி வாசுதேவ் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

 

ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோவை KMCH-ல் பாராட்டுவிழா நடந்தது. வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் வானதி சீனிவாசனைப் பார்த்து, “வானதி.! முன்னாள் அமைச்சர் வேலுமணியைப் பார்த்துக்கொள். எந்த சூழலிலும் அவரை கைவிடக்கூடாது” என அனைவரின் முன்னிலையில் நேரடியாகப் பேசினார் சி.பி. ராதாகிருஷ்ணன். அந்தளவிற்கு பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள் வேலுமணி மீது அக்கறை வைத்துள்ளார்கள்.

 

SP Velumani to break ADMK ?

 

ஹைகோர்ட்டாவது, ...வது என்று கூறிய ஹெச். ராசாவை கைது செய்யவிடாமல் பார்த்துக்கொண்டது, வானதியின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டது என பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள் இன்றுவரை வேலுமணி புராணம் பாடிக்கொண்டிருக்கின்றார்கள். இங்குதான் இப்படியென்றால் அமித்ஷாவுடன் அவருடைய உறவு உலகம் அறிந்ததே. அண்ணாமலை வருகைக்கு முன்பே அமித்ஷாவுடன் நெருங்கி மத்திய அரசின் நீட் தேர்வு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. எட்டுவழிச் சாலை சட்டங்களுக்கு அனுமதியளித்து ஒன்றிய அரசிற்கு முட்டுக்கொடுத்தது வேலுமணியே. அதுபோல் வேலுமணியின் சொத்துக் குவிப்பு மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்படி ஒன்றிய அரசுடன் ‘முஸ்தபா... முஸ்தபா...’ ரேஞ்சில் பின்னிப் பிணைந்து வருபவர் வேலுமணி.

 

இப்படியிருக்க, அடுத்த முதல்வர் யார்.? எனும் பிரச்சனைக்காக பா.ஜ.க. வுடனான உறவை முறித்ததில் துளியும் உடன்பாடில்லை வேலுமணிக்கு. அறிவிப்பு வந்த நாளிலிருந்து அமைதியாக இருந்தவர் இப்பொழுது ‘என்றென்றும் அ.தி.மு.க.காரன்’ எனும் பதிவைப் போட்டிருக்கின்றார். இது புரிந்தவர்களுக்குப் புரியும்” என்கிறார் மேற்கு மண்டலத்திலுள்ள அ.தி.மு.க. முன்னாள் மா.செ. ஒருவர்.

 

2021 சட்டமன்றத் தேர்தலின்போது மேற்கு மண்டலத்திலுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் 21 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் வேலுமணி. தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. மண்ணைக் கவ்விய நிலையில் தான் பொறுப்பேற்ற 21 சட்டமன்றத் தொகுதிகளில் 17-ஐ கைப்பற்றி அ.தி.மு.க.வில் அசைக்கமுடியாத சக்தியானார். இது இப்படியிருக்க, தற்பொழுதுள்ள அ.தி.மு.க. கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 32க்கும் அதிகமானோர் வேலுமணியின் தயவால் எம்.எல்.ஏ. ஆனவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

 

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி, “எடப்பாடி பழனிச்சாமி மீது வேலுமணி கடுமையான கோபத்தில் இருப்பது உண்மை. அதற்காக பா.ஜ.க.விற்கோ ஏனைய கட்சிகளுக்கோ எந்நாளும் போகமாட்டார். அதுபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்த ஏக்நாத் ஷிண்டேவாகவும் இருக்கமாட்டார். நான் அ.தி.மு.க. கட்சிக்காரன். நான் எதற்கு வெளியே போகணும், கட்சியை உடைக்கணும். துரோகியாக மாறனும் என்பது அவருடைய வாதம். இருப்பினும் கட்சியிலுள்ள எம்.எல்.ஏ.க் களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர்களும், மா.செ.க்களும் என் பக்கமே இருக்கின்றார்கள் என்பதை கோடிட்டுக் காட்டவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்பட எவ்வித முடிவையும் நான் எடுப்பேன் என்பதை அறிவிக்கவுமே இந்த எக்ஸ் தளப்பதிவு. இதன் பின்னணியில் ஜக்கி வாசுதேவ் மற்றும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நண்பர்களான கிரண் விஸ்வநாத், சிவக்குமார் ஆகியோர் இருக்கின்றனர். விரைவில் அ.தி.மு.க. வேலுமணி வசம் வருவதை யாராலும் தடுக்கமுடியாது” என்கிறார் அவர்.

 

இந்த பரபரப்பு சூழலில், இல்ல விழா ஒன்றிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் கட்சிக்காரர்களை தேடித் தேடி வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மற்றும் செந்தில் அழைப்பிதழ்களை வைத்து வருகின்றனர். அழைப்பிதழ் வைக்கும் போதே யார் யாரெல்லாம் வேலுமணிக்கான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர் என்கிற தகவல்களை ரகசியமாகத் திரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

SP Velumani to break ADMK ?

 

இதேவேளையில், மதுரை மாவட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை தினசரி சந்தித்தாலும், கூட்டணி முறிவுபற்றி தற்பொழுது வரை வாய் திறக்கவில்லை. இதேநிலை தான் ஏனைய இரண்டாம் கட்டத் தலைவர்களிடமும் உள்ளது. எப்படியாகினும் எடப்பாடி பழனிச்சாமி நம்மைத் தேடுவார் என்ற நிலையில், அவரை தவிர்க்கவே எஸ்கேப்பாகியுள்ளனர். ஒற்றைத் தலைமை வேண்டுமென கர்ஜித்த மதுரை புறநகர் கிழக்கு மா.செ.வான ராஜன் செல்லப்பாவும், மதுரை மாநகர மா.செ.வான செல்லூர் ராஜுவும். என்னைக் காப்பாற்றியது வேலுமணியே என ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்த ராஜேந்திரபாலாஜியும் பா.ஜ.க. கூட்டணி முறிவிற்கு எதிராக இருப்பது எடப்பாடியை உறுத்தியுள்ளது.

 

"வேலுமணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில்தான் வருகின்றது ஈஷாவும், காருண்யாவும். ஊழல் செய்து வேலுமணி சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதி ஈஷாவிடம்தான் உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலின் பொழுது கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஈஷாவிடமிருந்து தான் பணம் போனது. குறிப்பாக, வானதி சீனிவாசன் போட்டியிட்டு வென்ற கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு "ஈஷா' என முத்திரையிடப்பட்ட கவரில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். பதிலுக்கு ஈஷாவில் நடைபெறும் எவ்வித மர்ம மரணங்களையும் வேலுமணி கண்டுகொள்வதில்லை. மாறாக, காருண்யாவிற்கு எதிராக சில அமைப்புகளை தூண்டிவிட்டு "நொய்யல் ஆற்றை சுத்தம் செய்வோம்.! நீர் நிலைகளை மீட்போம்' என போராட்ட வடிவத்தை உருவாக்கி ஜக்கி வாசுதேவினை சந்தோஷப்படுத்துவது வேலுமணியின் அன்றாட வேலை. வேலுமணியின் பணம் ஈஷா மூலமாக வெளியேறி கோவையில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான அண்ணாமலையின் நெருங்கிய நண்பரான அரவக்குறிச்சி சிவக்குமாரின் சிவா இண்டஸ்ட்ரீஸ், சிவா கன்ஸ்ட்ரக்‌ஷனிலும், மற்றொரு நண்பரான கர்நாடகா கிரண் விஸ்வநாத்திடமும் சென்றடைந்து தொழில் முதலீடாக மாறியுள்ளது. ஜாம்பியாவில் செயல்பட்டு வரும் நிலக்கரிச் சுரங்கமே அதற்கு சாட்சி.! அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின் பொழுது ஈஷா மையப் பொறுப்பாளர் தினேஷும், கிரண் விஸ்வநாத்தும் அண்ணாமலைக்காக நேரடியாகக் களப் பணியாற்றியது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேலுமணியை மோதவிடுகின்றனர் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி மற்றும் அண்ணாமலை டீம்” என்கிறார் வேலுமணியின் நெருங்கிய நண்பர் ஒருவர்.

 

SP Velumani to break ADMK ?

 

இதேவேளையில், “எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவு தற்கொலைக்கு சமம். நமக்கு விருப்பம் இல்லை என தெரிவித்தாலும் ஜெயக்குமாரை வைத்து கூட்டணியில் பிளவை ஏற்படுத்துகிறார். பெயருக்காக மா.செ. கூட்டத்தினை கூட்டிவிட்டு, முன்பே அவர் எடுத்த முடிவை செயல்படுத்துகிறார். தன்னிச்சையான அவரது முடிவு நமக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, அடுத்து நாம்தான் ஆட்சி அமைப்போம். அதற்கான சூழல் நன்றாகத் தெரியும் நிலையில் நமக்கு பலமாக இருக்கும் ஒன்றிய அரசின் ஆதரவு தேவை. இப்படியிருந்தால் என்னாவது..? தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை தற்பொழுது வரை எடப்பாடி பழனிச்சாமியை யாரும் ஏற்கவில்லை. கட்சியை உடைக்க வேலுமணி துரோகி அல்ல. நமக்கு தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெ.வுமே. இருக்கின்ற எம்.எல்.ஏ.க்களை, மா.செ., நிர்வாகிகளை வைத்து தனியாகச் செயல்படுவோம். பா.ஜ.க. கூட்டணியிலேயே தொடர்வோம். உள்ளது உள்ளபடியே இப்பொழுது இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கே வரும் தேர்தலில் சீட். அனைத்து செலவுகளையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் செய்வது வேலுமணிக்கான ஆதரவைத் தருவது மட்டுமே என ஒவ்வொருவரிடமும் வேலுமணிக்காக கேன் வாஸ் செய்துவருகின்றனர் ஈஷா தரப்பினர்” என்கிறது உளவுப் பிரிவு.

 

ஈஷாவின் செயலால் அதிர்ச்சியிலிருக்கிறார் எடப்பாடி.