Skip to main content

தத்துக்கொடுத்த தாய்! தேடி அலையும் மகன்கள்! 40 வருட பாசப் போராட்டம்!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கிப் பார்த்த திரைப்படம் கண்ணத்தில் முத்தமிட்டால். தத்தெடுக்கப்பட்ட ஒரு எழுத்தாளரின் மகள் அவளது தாய், தந்தையைக் காண எண்ணி ஏங்கும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். 2016ல் வெளியான லயன் திரைப்படமும் இதேபோன்ற கதைக்களத்தை மையமாக எடுக்கப்பட்டு, குழந்தைக் கடத்தலுக்கு எதிரான கருத்தை ஆழமாக பதிவுசெய்தது. இதில் லயன் உண்மைக்கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதும் கூட.

 

dhanam


 

 

 

அவற்றைப் போலவே ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தங்களைத் தத்துக்கொடுத்த தாயை இரண்டு மகன்கள் தேடிவரும் உருக்கமான செய்தி வெளியாகியிருக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்தவர் டேவிட் கிலெண்டால் நீல்சன். இவரது உண்மையான பெயர் சாந்தகுமார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜன.25, 1978ல் தனலட்சுமி-கலியப்பெருமாள் தம்பதிக்குப் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. குடும்பச் சூழலின் காரணமாக இந்த இருவரையும் பெற்றோர் மெட்ராஸ் கிறிஸ்டைன் குழந்தைகள் காப்பகத்தில் 1978ல் விட்டுவிட்டனர். இதில் கைக்குழந்தையாக இருந்த டேவிட் 1979ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியால் தத்தெடுக்கப் படுகிறார். 
 

ஆண்டுகள் வேகமாக கடந்தோடின. டேவிட்டை அவரது வளர்ப்பு பெற்றோர் நல்ல முறையில் வளர்த்தெடுத்திருந்த சூழலில், தன்னைப் பெற்ற தாய் தந்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் ஏற்படுகிறது. தனது வளர்ப்பு பெற்றோரின் உதவியுடன் தன்னைப் பற்றிய விவரங்களை ஆராயத் தொடங்குகிறார். 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனக்கு ஒரு சகோதரர் இருந்தார் என்றும், அவர் பெயர் மானுவேல் ராஜன் என்பதையும் கண்டுபிடித்து, அவரையும் தேடி அடைகிறார். 2013ல் இருவரும் சந்தித்துவிட, இருவருமாக சேர்ந்து தமது பெற்றோரைத் தேடி வருகின்றனர். 
 

குழந்தைக் கடத்தலைத் தடுப்பதற்காக போராடிவரும் அருண் தோஹ்லே மற்றும் அஞ்சலி பவார் ஆகியோரின் உதவி கிடைக்க, இவர்களைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியைப் படித்த காப்பகம் நடத்திவரும் ஒரு கிறித்தவ பெண், தனலட்சுமியின் புகைப்படம் கிடைக்க உதவி செய்திருக்கிறார். கடந்த நாற்பது ஆண்டுகளில் தன்னைப் பெற்ற தாயை முதன்முறையாக பார்ப்பதாக வியந்து நெகிழ்ந்த டேவிட், இந்தப் புகைப்படத்தை போஸ்டரில் சேர்த்து வண்ணாரப்பேட்டை பகுதியில் தேடத் தொடங்கியபோது, கோவிந்தராஜன் என்பவர் தனலட்சுமியைத் தெரியும் என்று கூறியிருக்கிறார். அவர் எண்ணூருக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் தந்திருக்கிறார். எண்ணூரிலும் இப்போது தேடுதலைத் தொடர்கின்றனர் தாய் தனலட்சுமியின் இரண்டு மகன்கள். 
 

இந்தத் தேடுதலில் தனலட்சுமி கிடைத்து, மகன்கள் மனம் மகிழும் அந்த அழகிய தருணத்திற்காக உங்களைப் போல நக்கீரனும் காத்திருக்கிறது. 
 

Next Story

ஆசிய திரைப்பட விருது; 4 பிரிவுகளில் 'பாரடைஸ்'!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
 Asian Film Award; 'Paradise' in 4 sections!

நியூட்டன் சினிமா தயாரிப்பில் வெளியான பாரடைஸ் படம் ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

நியூட்டன் சினிமாவின் பாரடைஸ் படம் மிகவும் மதிப்புமிக்க 17வது ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் பரிந்துரைகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் பிரசன்ன விதானகே, சிறந்த திரைக்கதை பிரசன்னா விதானகே மற்றும் அனுஷ்கா சேனநாயக்க மற்றும் சிறந்த எடிட்டிங் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  சினிமா சாதனைகள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் திறமைகளை சிறப்பித்துக் காட்டும் வகையில் புகழ்பெற்ற ஆசிய திரைப்பட விருதுகள் அகாடமியால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆசிய திரைப்பட விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது ஒரு படத்தின் வெற்றி மற்றும் தரத்தின் முக்கிய குறிகாட்டியாக கருதப்படுகிறது. முக்கிய பிரிவுகளில் பாரடைஸ் படம் பல விருதுகளுக்கு ஆசிய திரைப்பட விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது படத்தின் தரம் மற்றும் தகுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நான்கு பரிந்துரைகளும் பாரடைஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை, இது சர்வதேசத் திரைப்பட சமூகத்தில் படத்தின் தாக்கத்தையும் அதிர்வலையையும் நிரூபிக்கிறது. பாரடைஸ் படம் அக்டோபர் 2023ல் பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் (கிம் ஜிசோக்) விருதை வென்றது. நியூட்டன் சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நியமனம், உலகளாவிய பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் சினிமாவை ஆதரிப்பதற்கும் தயாரிப்பதற்கும் நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் பிரசன்ன விதானகே தனது அதீத திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஐந்து NETPAC விருதுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். இது அவரது அசாத்திய திறமைக்கு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்.

பிரசன்ன விதானகே மற்றும் அனுஷ்கா சேனாநாயக்க ஆகியோருக்கான சிறந்த திரைக்கதைக்கான பரிந்துரையானது, பாரடைஸ் திரைப்படத்தின் திரைக்கதைக்கு ஒரு சான்றாகும். இது படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.  பொன்னியின் செல்வன் மற்றும் RRR போன்ற குறிப்பிடத்தக்க படங்கள் உட்பட 600 படங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எடிட்டரான A. ஸ்ரீகர் பிரசாத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரது பங்களிப்பு அதன் கதை மற்றும் காட்சி கதைச்சொல்லலை வடிவமைப்பு முக்கியமானது.

மணிரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும், பாரடைஸ் படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திர பெரேரா ஆகியோரின் சிறந்த நடிப்பைக் கொண்டுள்ளது. ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு, கே இன் இசை, தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றால் படத்தின் கலை ஆழம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.   நியூட்டன் சினிமாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆன்டோ சிட்டிலப்பில்லி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்: "இந்த பரிந்துரைகள் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம். இது எங்கள் படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எங்கள் குழுவின் கூட்டு மனப்பான்மை மற்றும் கடின உழைப்பின் கொண்டாட்டம்" என்று கூறினார். நியூட்டன் சினிமா, அதன் விநியோக பங்குதாரரான செஞ்சுரி ஃபிலிம்ஸுடன் இணைந்து, தயாரித்த இரண்டு படங்களை உலகளவில் திரையரங்குகளில் கொண்டு வருகிறது. பாரடைஸ் மார்ச் 2024ல் வெளியிடப்படும் மற்றும் பேமிலி பிப்ரவரி 2024ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Next Story

ஆளுநர் மாளிகை சம்பவம்; கூடுதல் ஆணையர் விளக்கம்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இதுதான் உண்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர் மொத்தமாக நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும், ஏ பிளஸ் குற்றவாளியாக கருக்கா வினோத் இருந்துள்ளார்.

 

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகள் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டது.

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

தொடர்ந்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது. மது போதையில் தவறுதலாக ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.