Skip to main content

சிக்ஸரா? விக்கெட்டா? கதிகலங்கும் கடம்பூர் ராஜூ! 

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
ddd

 

கடந்த 2011 தேர்தலின்போது கோவில்பட்டித் தொகுதியில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வானவர் கடம்பூர் ராஜூ. ’’ஜெ.வின் அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காகப் பிரம்மப்பிரயத்தன முயற்சிகளை மேற்கொண்டாலும், அது கனவாகவே போனது. 2011-ஆம் ஆண்டின் அமைச்சர் கனவு 2016-ல்தான் நிஜமானது.

 

அமைச்சர், தொகுதிக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் மக்கள்நலப் பணிகளை மேற்கொள்ளாவிட்டாலும் தொகுதியின் பிரதானப் பணிகளைக்கூடச் செய்யவில்லை. தொழிலாளர்கள், சிறு குறு தொழில்களைக் கொண்ட மாவட்டத்தின் குறிப்பிடும்படியான கோவில்பட்டி நகரின் அடிமட்டத் தேவையான குடிதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குகிற வகையில் 2016-17 நடப்பாண்டுகளிலேயே கொண்டுவரப்பட்ட இரண்டாவது பைப் லைன் திட்டம் இன்றுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. நகரின் உட்புறச் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.

 

ddd

 

""கோவில்பட்டியின் மேற்கு எல்லைப் பகுதியிலிருக்கும் கதிரேசன் மலையில் பொழியும் மழையால் வெள்ளமாகப் பாய்ந்துவரும் தண்ணீர், நீர்வரத்து ஓடையின் வழியாக ஏ.கே.எஸ். தியேட்டர் வழியாக வந்து மெயின்ரோட்டைக் கடந்து கிழக்கேயுள்ள மூப்பன்பட்டிக் கண்மாயை நிரப்பும். பின் மறுகால் பாய்ந்து அருகிலுள்ள செவல்குளத்தை நிரப்பிவிட்டு இறுதியாக வைப்பாறில் கலக்கும்.

 

மெயின் ரோடு வழியாகச் செல்லும் நீர்வரத்து ஓடை மறிக்கப்பட்டும் ஆக்கிரமிப்புகளால் பல கடைகள் அமைக்கப்பட்டுவிட... கதிரேசன்மலை வெள்ளநீர் போக வழியின்றி அடைப்பட்டு... கழிவுநீர் சாக்கடையாகியிருக்கிறது.

 

இந்த விவகாரம் நீதிமன்றம்வரை போனதில், "நீர்வரத்து ஓடையின் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுப் பத்து வருடங்கள் முடிந்துவிட்டது. மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட நீர்வரத்து ஓடைப் போராட்டக்குழுவின் தொடர் போராட்டங்களால் மாவட்டக் கலெக்டரால்கூட ஒருசில கடைகளைத்தான் அகற்ற முடிந்திருக்கிறது. நடப்புகள் தெரிந்தும் அமைச்சர் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவில்லை'' என்கிறார்கள் மக்கள்.

 

""தற்போது 2021 தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் தொகுதி மற்றும் தன்னுடைய வெற்றிக்கான நிலைப்பாட்டில் கவனம்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தொகுதி மக்களின் அதிருப்தியாலும் அடுத்து, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தேவர் சமூக வாக்குகள் மெஜாரிட்டியாகி முதன்மையிடத்திற்கு வந்தது போன்றவைகளால் தேர்தலில் மீள்வது அத்தனை சுலபமில்லை என்பது தெரியவந்திருக்கிறது. மட்டுமல்ல. தேவர் சமூகத்தின் அறியப்பட்ட புள்ளியான கடம்பூர் மாணிக்கராஜா, ஜெ. மறைவுக்குப் பின் அ.ம.மு.க.விற்கு மாறியதால் அவர் சார்ந்த வாக்குகளில் பெரும்பான்மையை அவர் கொண்டு சென்றுவிடுவார்.

 

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சரின் கடம்பூர் அடங்கிய 16 வார்டுகளைக் கொண்ட கயத்தாறு யூனியன் சேர்மன், வைஸ் சேர்மன் பதவி உள்ளிட்ட கணிசமான வார்டுகளை அ.ம.மு.க.வின் மாணிக்கராஜா தரப்பு அள்ளிக்கொண்டு போக, ஒரே ஒரு வார்டில் மட்டும் அ.தி.மு.க.வினால் கரையேற முடிந்தது. தவிர 2021 பொதுத்தேர்தல் என்று வரும்போது மாணிக்கராஜாவும் கோவில்பட்டி தொகுதியில் போட்டிக்கு வரலாம். இதனால் அமைச்சரின் பார்வை, விளாத்திகுளம் தொகுதிமேல் விழுந்திருக்கிறது'' என்கிறார்கள் அமைச்சரின் தரப்பினர்.

 

விளாத்திகுளம் தொகுதியில் அமைச்சரின் சமூகமான நாயக்கர் சமூகத்தவர்கள், ரெட்டியார் சமூகம் என சரிசமமான மெஜாரிட்டியான வாக்குகள் இருக்கின்றன. தவிர அ.தி.மு.க. எக்ஸ், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுக் கணிசமான வாக்குகளைப் பெற்றார். இம்முறை அந்தத் தொகுதியில் தனது சமூக வாக்குகள் சிதறினாலும், ரெட்டியார் பிரிவு மற்றும் பிறபிரிவு மக்களின் வாக்குகள் மொத்தமாகத் தனக்குக் கைகொடுக்கும். கோவில்பட்டி தொகுதியைவிட விளாத்திகுளம் சுலபமானது என்று கணக்கிட்டிருக்கிறார் அமைச்சர்.

 

அமைச்சரின் பார்வை மாறுவதை அறியாதவரல்ல எம்.எல்.ஏ. சின்னப்பன். விளாத்திகுளத்தில் அமைச்சர் போட்டியிட்டால், அவரை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு தனது ஆதரவு வாக்குகளைப் பிரித்தால் அமைச்சருக்குக் கடுமையான நெருக்கடிதானே என்ற எண்ணத்தில் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்கிறார்'' என்கிறார்கள் எம்.எல்.ஏ. தரப்பினர்.

 

இந்தச் சூழலில் தான் எதிர்பாராத ட்விஸ்ட்டாக மார்க்கண்டேயன், கடந்த மாதம் தி.மு.க.வில் இணைந்தார். சுயேட்சையாக இருந்தால் அவரது ஆதரவைப் பெற்று அமுக்கிவிடலாம் என நினைத்திருந்த அமைச்சருக்கு, இப்போது தனது வெற்றி அத்தனை சுலபமில்லை. வீணாக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற திட்டத்தில் யூ டர்ன் அடித்த வர், தற்போது கோவில்பட்டி தொகுதியிலேயே வளைய வர ஆரம்பித்திருக்கிறார். கிராம மக்களின் வாக்குகளை வளைப்பதற்காக கிராமங்களின் கோவில்களைச் செப்பனிடவும் விழாக்களுக்கும் வலியச்சென்று நிதி உதவி செய்துவருவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

தொகுதி வாக்கு வங்கியில் முதன்மையிலிருக்கும் தேவர் சமூக வாக்குகளைப் பெற, தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் தனது படத்துடன் பிரம்மாண்ட ப்ளக்ஸ் போர்டுகள் வைத்து அசத்தியதுடன், அமைச்சரின் ப்ளக்ஸ்போர்டு தவிர, பிற அமைப்புகளின் போர்டுகளுக்கு போலீஸ் அனுமதி கிடைக்காமல் செய்திருக் கிறாராம்.

 

ஆனால் பந்து இப்போது ஜனநாயகத்தின் அரசியல் எஜமானர்களாகிய மக்களின் கைகளில். கடம்பூர்ராஜூ சிக்ஸர் அடிக்கப்போகிறாரா...… மக்கள் விக்கெட் வீழ்த்தப்போகிறார்களா...… பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்

 

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.