Skip to main content

வேங்கைப்புலி வேட்டைக்கு நேர்த்திக் கடன் செய்த ஜமீன்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

sivagangai district, zamindar Inscription Discovery

 

சிவகங்கையை அடுத்த படமாத்தூர் சித்தாலங்குடியில் வேங்கைப்புலி வேட்டைக்கு நேர்த்திக்கடன் செய்த 160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர்.

 

சிவகங்கையை அடுத்த படமாத்தூர் சித்தாலங்குடியில் மகாராஜா கோவில் உள்ளது. இதில் வணங்கப்படுகிற கடவுள் சிவகங்கையை ஆண்ட முதல் ஜமீன் கௌரி வல்லப உடையண ராஜா (1801- 1828) அல்லது அவரது மூதாதையராக இருக்கலாம். குதிரை மேல் அமர்ந்த வீரனைப் போன்ற அமைப்புடன் அணிகலன்கள் அணிந்து தலைப்பாகையுடன் சிலை கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இதே சிலை அமைப்புடன் சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியிலும் மகாராஜா கோவில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. படமாத்தூரில்  இருக்கும் கௌரி வல்லவரை சிவகங்கை அரண்மனையினர் குல சாமியாக வணங்குவதோடு அப்பகுதி மக்களும் தங்களது காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

 

sivagangai district, zamindar Inscription Discovery

 

கோயில் திருச்சுற்று மதிலில் கல்வெட்டு:

படமாத்தூர் கௌரி வல்லவர் திருக்கோவிலில் சுற்றுமதில் வடக்குப் பகுதியில் சுவரின் அடியில் ஒன்பது வரிகளைக் கொண்ட ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.

 

கல்வெட்டுச் செய்தி:
     
1861- ஆம் ஆண்டு துன்மதி வருஷம் வைகாசி மாதம் 26- ஆம் நாள் மகாராஜா சத்ரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டைக்குச் செல்லும்போது படமாத்தூரில் இருக்கும் இஷ்ட குல தெய்வமான வல்லவ சாமியிடம் செய்து கொண்ட பிரார்த்தனையின்படி புலியைச் சுட்டுக் குத்தினதுனாலே இந்த திருமதிலைக் கட்டினது என எழுதப் பெற்றுள்ளது.

 

sivagangai district, zamindar Inscription Discovery

 

மகாராஜா போத குருசாமி:

கல்வெட்டில் உள்ள காலத்தைக்கொண்டு இவர் சிவகங்கையின் ஐந்தாவது ஜமீனான இரண்டாம் போத குருசாமி மகாராஜா (1848-1865) என உறுதிசெய்ய முடிகிறது. மேலும் 160 ஆண்டுகள் பழமையான சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்த கல்வி வள்ளலும் இவரே ஆவார். இவரது சிலை சிவகங்கை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது சிறப்பு.

 

sivagangai district, zamindar Inscription Discovery

 

செவ்வேங்கை:

சிவகங்கையின் பழமையான பெயர் செவ்வேங்கை என்று அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், சிவந்த மண்ணில் வேங்கை மரம் நிறைந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்பர். சிவந்த வேங்கைப்புலி நிறைந்த பகுதியாக இருந்து செவ்வேங்கை பகுதி பின்னாளில் சிவகங்கை பகுதியாகவும் மாறியிருக்கலாம்.

 

sivagangai district, zamindar Inscription Discovery

 

புலி நிறைந்த காட்டுப் பகுதி:

சிவகங்கை வரலாற்றில் சிவகங்கையின் முதல் மன்னர் சசிவர்ணத்தேவர் தஞ்சை செல்லும்போது புலியை அடக்கியதாகவும், பின்னாளில் மருது சகோதரர்கள் புலியை அடக்கியதாகவும் செய்தி உண்டு. மேலும், மற்றொரு மன்னர் புலியை வீழ்த்தி இருப்பதை இக்கல்வெட்டு வழி அறிய முடிகிறது.

 

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்தவரான போதகுரு சாமி மகாராஜாவின் கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

 

 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.