/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sbp (1).jpg)
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4- ஆம் தேதி பிறந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சென்னை வந்த பிறகு இளையராஜா உள்ளிட்டோருடன் எஸ்.பி.பி. இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். எஸ்.பி.பி.க்கு சாவித்திரி என்ற மனைவியும், சரண் என்ற மகனும், பல்லவி என்ற மகளும் உள்ளனர்.
1969-ல் அடிமைப்பெண்ணில் தொடங்கிய எஸ்.பி.பி.யின் பயணம் 50 ஆண்டுகளைக் கடந்து 2020- ஆம் ஆண்டு முடிவுற்றது. அடிமைப்பெண்ணில் எம்.ஜி.ஆருக்கு முதலில் பாடிய எஸ்.பி.பி. இறுதியாக அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு பாடியுள்ளார்.
சிகரம், துடிக்கும் கரங்கள், தையல்காரன் உள்ளிட்ட 40- க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் 40,000- க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி.பி. அதிக பாடல்களை பாடியுள்ள பாடகர் என்ற கின்னஸ் சாதனையை எஸ்.பி.பாலசுப்ரமணியம் படைத்துள்ளார். அதேபோல், ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய சாதனையையும் படைத்தவர் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
சங்கர் கணேஷ், வித்யாசாகர், தேவா, பரத்வாஜ், ஏ .ஆர்.ரஹ்மான்,யுவன்சங்கர் ராஜா, கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர் எஸ்.பி.பி.
சிறந்த பாடருக்கான தேசிய விருதை ஆறு முறை வென்றுள்ளார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். சங்கராபரணம் படத்திற்காக முதல் தேசிய விருதும், ஏக் துஜே கேலியே படத்திற்காக இரண்டாவது விருதும் வென்றார். மேலும், மின்சாரக் கனவு படத்தின் 'தங்கத்தாமரை மகளே' பாடலுக்காக 6 ஆவது முறையும்தேசிய விருது வென்றார்.
நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட எண்ணிலடங்கா விருதுகளை வென்றவர். எஸ்.பி.பி.க்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்ததலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)