Skip to main content

கரோனாவில் அலட்சியம்... மக்களிடம் பதில் சொல்ல வேண்டி வரும் - திமுக எம்பி சண்முகம் பேச்சு!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

jh



கரோனா பயம் உச்சத்தில் இருந்து வரும் இந்த நேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு நடைவடிக்கை தொடங்குவதற்கு முன்பு போதுமான ஏற்பாடுகளை மக்களுக்குச் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை எம்.பி சண்முகம் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு, "கரோனா என்னும் கொடிய நோய் இந்தியாவில் வந்தவுடனே அதைத் தடுக்கும் நோக்கில் உடனடியாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் நாங்கள் முன் வைத்தோம். அவர்கள் பாராளுமன்றம் நடத்துவதற்கும், சட்டமன்றம் நடத்துவதற்கும் முன்னுரிமை கொடுத்தார்களே அன்றி இந்தக் கொடிய கரோனா நோய்த் தொற்றைப்பற்றி அவர்கள் சிறிதும் சிந்திக்கவில்லை.


அது குறித்த எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. அதற்குப் பிறகு மார்ச் 24- ஆம் தேதி திடீரென்று 144 தடை உத்தரவு போட்டு எங்கேயும் செல்ல முடியாமல் செய்துவிட்டார்கள். இதன் காரணமாக சிறு, குறு விவசாயிகள், கட்டடப் பணியாளர்கள், கூலி வேலை செய்பவர்கள் எனப் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அந்தத் தொழிலாளர்கள் எல்லாம் தங்களின் சொந்த மாவட்டத்துக்கு திரும்பலாம் என்றால் அந்த மாவட்ட நிர்வாகம் நீங்கள் எங்கும் செல்லக்கூடாது உங்களுக்கு உணவளிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் உணவளித்தார்களா என்றால் யாரும் உணவளிக்கவில்லை.

அது சாரியாக வராது என்று நினைத்த காரணத்தால் மத்திய உள்துறை அமைச்சருக்கு நாம் கடந்த மாதம் ஒரு கடிதம் எழுதினோம். அதனைத் தொடர்ந்து மாநில உள்துறை செயலாளருக்கும் ஒரு கடிதம் அனுப்பினோம். இந்தப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய இடங்களுக்கு அனுப்பிவிட்டால் அங்கு உள்ள நிர்வாகம் அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்றும், அவர்களுக்காக நீங்கள் சிரமப்பட தேவையில்லை என்றும் கூறினோம். ஆனால் எங்கள் பேச்சை அவர்கள் சுத்தமாகக் கேட்கவில்லை. ஆனால் இன்று அந்தத் தொழிலாளர்கள் இவர்கள் பேச்சைக் கேட்காமல் சாலைகளில் கூடும் சூழ்நிலைகளை நாம் நேரில் பார்க்கிறோம். அவர்கள் சாலைகளில் எந்த உதவியும் இன்றி செல்வது மனதைப் பாதிப்பதாக உள்ளது. இதற்காக எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. திடீரென 144 தடை உத்தரவு போட்டார்களே தவிர அத்தியாவசியப் பணிகள் என்னென்ன என்று எந்த மாவட்ட நிர்வாகத்துக்கும் முறையாகத் தெரிவிக்கவில்லை. மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு அரசாக இது இருந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மக்களிடம் கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்" என்றார்.