Skip to main content

அமித்ஷாவுக்கு சொந்த மாநிலத்திலேயே மூக்குடைப்பு!

Published on 09/08/2017 | Edited on 09/08/2017
அமித்ஷாவுக்கு சொந்த மாநிலத்திலேயே மூக்குடைப்பு!




அமித்ஷா பாஜக தலைவராக பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன. மூன்றாம் ஆண்டு நிறைவடையும் கடைசி நாளன்று அவருடைய சொந்த மாநிலத்திலேயே சரியான மூக்குடைப்பு நிகழ்ந்துள்ளது.

அமித்ஷாவின் மூன்றாண்டு தலைமைப் பதவியில் அவருடைய சாதனைகள் என்ன? 

சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என்ற சுதந்திரமான அமைப்புகளைப் பயன்படுத்தி அகில இந்திய அளவில் எதிர்க்கட்சி அரசுகளை கூச்சமே இல்லாமல் மிரட்டியிருக்கிறார்.

புறவாசல் வழியாக தமிழகத்தில் சிதறிக்கிடக்கும் அதிமுக அரசாங்கத்தை பயன்படுத்தி அதிகாரம் செலுத்த வகை செய்திருக்கிறார்.

தேர்தலில் ஜெயிக்காமல், மக்கள் தீர்ப்புக்கு மாறாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மூன்று சிறிய மாநிலங்களில் பாஜக அரசாங்கத்தை அமைத்திருக்கிறார். 

இதனாலெல்லாம் பாஜகவிற்கு மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க அமித்ஷா முயன்றால் அதைக் காட்டிலும் பைத்தியக்காரத்தனம் இருக்குமா?

திரிபுராவில் பாஜகவுக்கு ஆளே இல்லை. ஆனால், அந்த மாநிலத்தில் உள்ள ஆறு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அந்த மாநில சட்டசபையில் பாஜக தனது கணக்கை துவக்கி இருப்பதாக பெருமை பீற்றியிருக்கிறது.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சொந்தக் கட்சி உறுப்பினர்களை அவர்களே கொன்றுவிட்டு, அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை வீரம் என்று காட்டுகிறார்கள்.

அமித்ஷாவின் இந்த வேலையை புகழ்ந்து தள்ளுகிறார் பிரதமர் மோடி. குஜராத்தில் அமித் ஷா மூக்குடைபட்டதை வசதியாக மறைக்கிறார். 

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெற வேண்டிய தேர்தலை தேவையில்லாமல் தள்ளி வைக்க ஏற்பாடு செய்தார். முதல்முறையாக வாக்களிக்க பிடிக்காதவர்கள் நோட்டாவை பயன்படுத்தலாம் என்று தகிடுதித்த அறிவிப்பை வெளியிடச் செய்தார்.

வெட்கமே இல்லாமல் காங்கிரசிலிருந்து வெளியே வந்த ஒருவரை தனது கட்சி வேட்பாளராக அறிவித்தார். 

அகமது படேலை தோற்கடித்தே தீரவேண்டும் என்று போராடிய அமித்ஷாவின் மூக்கை காங்கிரஸ் எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவரும் உடைத்திருக்கிறார்கள்.

குஜராத்தில் கிடைத்துள்ள இந்த அடி, அனேகமாக பிகாரில் விரைவாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் பாஜகவின் பாணி...

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்