Skip to main content

அரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

28 ஆண்டுகளுக்கு முந்தைய ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் குறித்து சீமான் கொளுத்திப் போட்ட நெருப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் அவருக்கு எதிரான கண்டனங்களும் அதிகரித்தபடி இருக்கின்றன. சீமானே தனது முந்தைய நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசுவதன் பின்னணி குறித்த சந்தேகங்களை எழுப்புகின்றனர் தமிழ்த் தேசியவாதிகள். படுகொலைப் பின்னணிகளை விசாரிப்பதற்காக வர்மா மற்றும் ஜெயின் தலைமையில் இருவேறு கமிசன்கள் அமைக்கப்பட்டு வழக்கின் தீர்ப்புகள் சொல்லப்பட்டிருந்தாலும் ராஜீவ் மரணத்தில் பின்னிக் கிடக்கும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இன்னும் ஏராளம்.

 

politicsஇந்த வழக்கில் விடுதலைப்புலிகள் மீதே முதன்மையான குற்றச்சாட்டு வைக்கப்பட்ட போதும், ஈழத்தில் 2003-ல் நடந்த சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில், ராஜீவ் மரணத்தை, "துன்பியல் சம்பவம்' என வர்ணித்த புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், "ராஜீவ் கொலைக்கு நாங்கள்தான் காரணம்' என ஒப்புக்கொள்ளவில்லை. இறுதி யுத்தம் வரையிலும்கூட அந்த இயக்கம் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம், ராஜீவ் கொலையின் பின்னணியில் சர்வதேச சதிகள் இருப்பதாகவே குற்றம்சாட்டப்பட்டு வந்தன. சீமான் உள்பட தமிழுணர்வாளர்கள் இதைத்தான் முன்னிறுத்தினர்.

 

politicsஜெயின் கமிஷனில் சாட்சியமளித்தவரும் ராஜீவ் படுகொலையின் நீள அகலங்களை அறிந்தவருமான காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி நம்மிடம், "ராஜீவ் கொலைக்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை; அந்தப் படுகொலையில் சர்வதேச சதி இருக்கிறது என நேற்று வரை பேசிவந்தவர் சீமான். அப்படிப்பட்ட அவர், திடீரென அந்தர்பல்டி அடிப்பது போல, "நாங்கள்தான் கொலை செய்தோம்' என அச்சமில்லாமல் சொல்கிறாரெனில்... அதன் பின்னணிகள் ஆராயப்பட வேண்டும். அவரது பேச்சின் பின்னணியில் மத்திய- மாநில அரசுகளின் உளவுத்துறை இருக்கிறது. குறிப்பாக, பா.ஜ.க. வும் மத்திய உள்துறை அமைச்சகமும் இருக்கிறது. "ஒரு மிகப் பெரிய கொலையை நாங்கள்தான் செய்தோம்'னு ஒருத்தர் நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறாரெனில் அதிகாரவர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் ஒருவரால் பேச முடியாது.

 

politicsராஜீவ்காந்தி கொலைச் சதியை விசாரித்த ஜெயின் கமிஷன், "இந்த கொலையில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை. அவர்களை பிடிப்பதற்கான தீவிர விசாரணை தேவை' என தனது இறுதி அறிக்கையில் தந்தது. அதன் அடிப்படையில்தான் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஆக்ஷன் டேக்கிங் ரிப்போர்ட் போட்டு, இதற்காக தனி குழு அமைத்து சி.பி.ஐ. தலைமையிடம் கொடுக் கிறது மத்திய அரசு. சி.பி.ஐ.யின் அப்போதைய தலைமையும், ராஜீவ் கொலையை மட்டுமே விசாரிப்பதற்காக பல்நோக்கு புலனாய்வுக் குழுவை அமைக்கிறது. விசாரணையை அந்த குழு ஆரம்பித்து 20 வருசம் ஆகுது. இன்னமும் விசாரணை முடியலை. குழுவும் கலைக்கப்படலை.

 

politicsஇந்த சூழலில், "நாங்கள் தான் கொலை செய்தோம்' என சீமான் சொன்னது, இந்தியா உள்பட உலகம் முழுவதும் தெரியும்போது சி.பி.ஐ.க்கு மட்டும் தெரியவில்லையா? ராஜீவ் கொலையை மட்டுமே விசாரிப்பதற்காக சி.பி.ஐ.யால் அமைக்கப்பட்டிருக்கும் பல்நோக்கு விசாரணைக் குழு அதிகாரிகள், சீமான் அப்படி பேசி நான்கு நாட்களாகியும் அவரிடம் எந்த விசாரணையையும் ஏன் நடத்தவில்லை? சி.பி.ஐ. ஒரு சுதந்திரமான அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் மத்திய உள்துறையின் கண் அசைவில்தான் அது செயல்படுகிறது. ஆக, உள்துறை அமைச்சகத்தின் ஆதரவில்லாமல் சீமான் இப்படி துணிச்சலாகப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை.

ராஜீவ் கொலை நடந்ததையடுத்து, "அக்கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அந்த படுகொலையால் எங்களது போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது' என பிரபாகரனுக்கு அடுத்தநிலையிலிருந்த கிட்டு லண்டனிலிருந்து அறிக்கை வெளியிடுகிறார். பிரபாகரனும் "இது அபாண்ட பழி' என ஒரு காணொலியில் பேசியிருக்கிறார். செய்த செயலை ஒப்புக்கொள்கிற நேர்மை, புலிகளின் தலைவர்களிடம் இருந்தது. ராஜீவ்காந்தி படுகொலை அப்படி இல்லையென்பதால்தான் துன்பியல் சம்பவம் என்றார் பிரபாகரன்.

படுகொலை நேரத்தில் தமிழக அரசியலில் இல்லாத சீமான், புலிகளை சம்பந்தப்படுத்தி பேசுவதை அவராக பேசியதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், ராஜீவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையை ஒட்டுமொத்த மனித சமூகமும் எதிர்பார்க்கிறது. ஆனால், இதற்கு தடையாக இருக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான விமர்சனங்களும் தமிழக அரசியலில் வலுத்து வருகின்றன. ஏழு பேரையும் விடுதலை செய்ய அரசாங்கங்கள் விரும்பவில்லை. மேலும், புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறது.

இது இரண்டும் நடக்க வேண்டுமாயின் இறுதி யுத்தத்தில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாக அரசாங்கங்கள் சொல்லி வரும் நிலையில், புலிகள் இயக்கம் இப்போதும் இருக்கிறது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ராஜீவ் கொலையில் புலிகளை தொடர்புப்படுத்தி புதிய பூகம் பத்தை கிளப்பினால் மட்டுமே சாத்தியமாகும் என அதிகார வர்க்கம் திட்டமிடுகிறது. அதற்கு அவர்கள் எடுத்த ஆயுதம்தான் சீமான். அவருடைய பேச்சு 7 பேர் விடுதலைக்கு பின்னடைவு. ஆக, சீமானின் பேச்சில் இத்தகைய அரசியல் சதி இருக்கிறது'' என்கிறார் மிகஅழுத்தமாக.


இதே கருத்துக்கள்தான் தமிழீழ உணர்வாளர்கள் பலரிடமும் எதிரொலிக்கின்றன. "சீமானை மத்திய-மாநில அரசுகளின் உளவுத் துறையினர் இயக்குவதால்தான் அவரது பேச்சை ஜஸ்ட் லைக் தட் என்கிற வகையில் ஒரு தேர்தல் வழக்காக கையாள நினைக்கிறது தமிழக அரசு. முன்னாள் பிரதமர் ஒருவரை நாங்கள்தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக சொன்ன நிலையில் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததோடு வேறு எந்த நடவடிக்கையிலும் உடனடி அக்கறை காட்டவில்லை எடப்பாடியின் காவல்துறை'' என்கின்றனர் ஈழ உணர்வாளர்கள்.

இந்த நிலையில், சீமானின் பேச்சு, ராஜீவ் கொலையில் சிறையில் இருக்கும் 7 பேருக்கும் தெரிந்து மிக வருத்தத்தில் இருக்கின்றனர். முன்பு வேலூரில் சீமான் சிறைப்படுத்தப்பட்டிருந்த போதிருந்தே உறவும் முரணும் அவர்களுக்குள் இருந்தது. நளினிக்கு பரோல் கிடைத்து வீடு ஒதுக்குவதில் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் காட்டிய தயக்கமும் புறக்கணிப்பும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது எதிரொலித்தது.

இந்த சூழலில், விடுதலை புலிகளுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை கடந்த வாரம் எடுத்துள்ளது மலேசிய அரசு. புலிகள் இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்ததாக எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், சுவாமிநாதன் உள்பட 12 நபர்களை கைது செய்துள்ளது மலேசிய அரசு. இந்த சம்பவங்கள் மலேசியா உள்பட பல்வேறு நாடுகளிலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் ராமசாமியையும் குறி வைக்கிறது. புலிகளோடு தொடர்புடைய அவரை கைது செய்ய வேண்டும் என பகிரங்கமாகவே குரல் கொடுக்கிறார்கள் மலேசிய எம்.பி.க்கள். ராமசாமியை குறி வைப்பதன் மூலம் சீமானுக்கு வலை விரிக்கப்படுகிறதா? என மலேசியாவின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "ஆதாரங்கள் இருந்தால் அவர் (சீமான்) மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்' என பதிலளித்துள்ளனர்.  இதற்கிடையே, புலிகள் இயக்கம் மீண்டும் கட்டமைக்கப்படுவதாக சுட்டிக்காட்டி மலேசியாவில் இயங்கும் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை தடை செய்வதற்கான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டிருக்கின்றன.

இது குறித்து விசாரித்தபோது, ‘இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜீத்பிரேமதாசாவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் களமிறங்கியுள்ளனர். சிங்களவர்களின் வாக்குகளை முழுமையாக பெறுவதில்தான் இவர்களது வெற்றி இருக்கிறது. சிங்களவர்களின் பெரும்பான்மை வாக்குகள் சஜீத் பிரேமதாசாவுக்கே இருப்பதால் அதை உடைத் தெறிய உளவியல் ரீதியான தாக்கத்தை சிங்களவர்களிடம் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே மலேசிய விவகாரத்தை சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.


மலேசியாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள் உயிர்ப்புடன் இருப்பதாக காட்டுவதன் மூலம் சில அரசியல் சதிகள் பின்னப்படுகின்றன. இந்த சூழலில், சீமான் விவகாரம் மோசமான விமர்சனங்களை ஏற்படுத்தினால் டெல்லியிலிருந்து கிடைக்கும் உத்தரவுகளுக்கேற்ப கைது நடவடிக்கையை கையாளலாம் என்கிற ஆலோசனையில் இருக்கிறது எடப்பாடி அரசு. இதற்கிடையே, சீமானுக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் போட திட்டமிட்டிருக்கிறது காங்கிரஸ் தலைமை. சீமான் பேச்சின் பின்னணிகள் குறித்து கருத்தறிய அவரை தொடர்புகொண்டபோது, தொடர்பு கிடைக்கவில்லை. அவரது தரப்பில் விசாரித்தபோது, "தேர்தல் பிரச்சாரத்தில் பலவற்றுக்கு நடுவே ஒருசில நிமிடம் இதையும் பேசிய சீமான், தன் கருத்திலிருந்து மாறாமல் இருக்கிறார். இதற்காக வழக்குகள் வந்தால் சட்டப்படி எதிர்கொள்வார்'' என்கின்றனர்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்