Skip to main content

தமிழர்களுக்கு ஒரு நோய் இருக்கிறது... - ரஜினி, கமல் குறித்து சீமான் பேட்டி!

Published on 08/03/2018 | Edited on 09/03/2018

ரஜினி, கமல் என இருவரும் அரசியல் பிரவேசம் பற்றி கடந்த பல மாதங்களாக பேசிவந்தனர். இதன் பிறகு தற்போது  கமல் 'மக்கள் நீதி மய்யம்' எனும் கட்சிபெயரை தொண்டர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதேபோல் ரஜினியும் தனியார் கல்லூரி விழாவில் தமிழகத்தில் உள்ள  வெற்றிடத்தை நிரப்பும் தலைவனாக நான் இருப்பேன் என தெளிவாக சொல்லிவிட்டார். திரை கலைஞர்கள் அரசியலுக்கு வரலாமா கூடாதா என்ற விவாதம் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் அந்த விவாதத்தை விட உறுதியாக தமிழர்தான் தமிழகத்தை ஆளவேண்டும் வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுப்பவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். ரஜினி, அரசியலுக்கே வரக்கூடாது என்று கூறியவர், கமலை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அவரிடம் விரிவாகப் பேசினோம்.


 

Seeman interview


 

 

அரசியலுக்கு வர திரைக்கவர்ச்சியை பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறீர்கள்... ஆனால், நீங்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்தானே என்று கேட்கிறார்கள்...?

திரைக்கவர்ச்சி கூடாது என்பதை விட, அது மட்டும் போதாது என்றுதான் நான் சொல்கிறேன். அதுமட்டுமே போதுமானது இல்லை. அவர்கள் திரைக்கவர்ச்சி வைத்துதான் வருகிறார்கள். சமூக உணர்வு அவர்களுக்கு இருந்திருந்தால், திரையுலகம் காவேரி பிரச்சனைக்கெல்லாம் போராடியபோது வந்திருப்பார்கள். அப்படி வந்திருந்தாலும் அதோடு முடிந்துவிடுகிறது அவர்களது பயணம்.  அவர்கள் எந்த இடத்தில் சமூக பொறுப்புடன் நின்றிருக்கிறார்கள்? திரையுலகம் சேர்ந்து வந்தால் வருவார்கள். மற்றபடி எங்கு நின்றிருக்கிறார்கள்? இதற்கு முன்னரும் பல பிரச்சனைகள் இருந்திருக்கிறது. நான் தலைவரானால் தான் அவர்களுக்காக பேசுவேன் என்பது தான் சந்தர்ப்பவாதமாக பார்க்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகாலத்தில் ஏன் ஒரு முறை கூட அரசியலுக்கு வருவேன் என்றுகூட சொல்லாமல் இருந்தார்? ஆண்டவன் மீதே பாரத்தை போட்டுக்கொண்டிருந்தால், மீதம் இருக்கும் ஆண்டுகளுக்கும் பாரத்தை போட்டுவிட்டு செல்லலாமே! இப்போ மட்டும் என்ன ஆண்டவன் செத்துவிட்டானா? இருக்கிறார்தான... இது ஒரு சந்தர்ப்ப வாதம் இரண்டு வலிமையான தலைவர்கள் இல்லை என்பதால் அதை அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். தமிழனுக்கு தலைவனாகிவிடலாம், ஏன் என்றால் இது ஒரு திரைக்கவர்ச்சியால் கவரப்பட்ட கூட்டம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
 

தமிழர்கள் திரைக்கவர்ச்சியால் கவரப்பட்டிருக்கிறார்களா?

தரையில் போரிட்ட அண்ணன் பிரபாகரனை இந்த சமூகம் தீவிரவாதி என்கிறது, திரையில் நடித்தவர்களை 'தலைவா' என்கிறது. அவரை கொண்டு போய் சேர்க்கவேண்டிய இடமிருக்கிறது. இப்படி ஒவ்வொன்றாக நிராகரித்து நிராகரித்து வரலாற்றை மறந்துகொண்டு வருகிறோம். கண்ணகியை கொண்டாடிய அளவுக்கு வேலு நாச்சியார் கொண்டாடப்படவில்லையே, பூலித்தேவன் என்பவர் வெறும் தேவர் சமுதாயத்துக்கு மட்டும் சொந்தமா? தீரன் சின்னமலை வெறும் கவுண்டர்களின் குறியீடா? ஜாதிகள் இல்லை என்று பாடிய புரட்சி பாவலரையே முதலியார் சமூகம் குறியீடாக வைத்திருக்கிறது. இது எல்லாம் எவ்வளவு வலியானது?  பல தடைகள் இருக்கத்தான் செய்யும், எதிரியே இல்லை என்றால் படைகளுக்கு என்ன வேலை அங்கு?
 

தமிழனுக்குதான் தமிழ்நாட்டை ஆளும் உரிமை இருக்கிறது என்கிறீர்கள். ரஜினி, கமலுக்கு அந்த உரிமை இல்லை என்று கூறுகிறீர்களா ?

நான் பேசுவதையும் அவர் பேசுவதையும் ஒப்பிட்டு பாருங்கள். அவர்களை பற்றியே ஏன் கேட்கிறீர்கள், ஒரு நேர்காணலில் அவரிடம் சென்று என்னை பற்றி மட்டுமே ஒரு இரண்டு கேள்விகள் கேட்டு எடுக்க முடியுமா? அவரை பற்றி பேசமட்டும் நானில்லை, கமல், ரஜினியை பற்றி பேச மட்டும் நான் இங்கில்லை. என்னை வைத்து எதாவது நான்கு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள், ஆக்கபூர்வமான கேள்விகளை கேளுங்கள். நான் கோடி கனவுகளுடன் இருக்கிறேன். இந்த தலைமைகள் ஈழத்தில் நடந்த 60 வருட போராட்டத்துக்கு என்ன தீர்வு கொடுக்கும்? எங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது. நாங்கள் ஐயரை தலைவனாக ஏற்றுக்கொள்வோம், ஆனால் ஒரு ஆதி பறையரை ஏற்றுக்கொள்ளமாட்டோம். அப்படியென்றால் இது ஒரு மனநோய் தானே? ஆதி தமிழனை கொண்டாடுவதற்கு பதிலாக துண்டாடிக்கொல்கிற சமூகத்தை என்ன செய்வீங்க? 

நீங்கள் அவர்களை மதிப்பீர்களா? இல்லை மிதிப்பீர்களா? நாங்கள் வந்தபின் தான் பறையிசையே உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. சாவுக்கு மட்டும் அடிக்கப்படும் பறையிசை நல்ல காரியங்களும் அடிக்கப்படுகிறது. இப்போதுதான் எல்லாம் மீண்டுகொண்டு வருகிறது. நான் இறங்கி வேலை செய்துள்ள இந்த இடங்களுக்கெல்லாம் இவர்கள் செல்லக்கூட மாட்டார்கள்... செல்வார்களா? மாவீரர் தினம், மொழிப்போர் தியாகிகள் தினம் போன்ற இடங்களுக்கு இவர்கள் முதலில் வருவார்களா? கட்டிய கட்டிடத்திற்கு வெள்ளை அடிக்க வந்தவர்களில்லை நாங்கள், இதற்கு முன் கட்டிய கட்டிடத்தை தகர்த்துவிட்டு புதிதாக கட்டிடத்தை கட்ட நினைப்பவர்கள் நாங்கள். அதைத்தான் ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார். ஏன் இப்போதுதான் சிஸ்டம் சரியில்லாமல் இருக்கிறதா? இதற்கு முன்னர் சரியாக இருந்ததா? அதுமட்டுமில்லாமல், இந்தியன் சிஸ்டம் தான இங்கயும் இருக்கு? பின்ன ஏன் இந்த இருவரும் மத்திய அரசை பற்றி ஒரு வார்த்தைக்கூட பேச மறுக்கிறார்கள். காவேரி மேலாண்மை வாரியம் தர மறுக்கிறது, இருந்தாலும் ஏன் இவர்கள் பேசமாட்டேன் என்கிறார்கள்?
 

seeman

    

நீங்கள் வந்தாலும் அதே சிஸ்டத்துக்குள்ளே தானே இருப்பீர்கள், நீங்கள் எப்படி காவிரி தண்ணீரை கொண்டு வருவீர்கள்?

நான் தான் அவங்க கிட்ட தண்ணி கேட்க மாட்டேன்னு சொல்லிட்டனே, நீங்க தரமாட்டேன் சொல்லியபிறகு உங்களிடம் நான் கேட்க மாட்டேன், உங்களிடம் இருந்து எப்படி பெறவேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அந்தந்த மண்ணின் வளங்கள் அந்தந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கே என்ற திட்டத்தை கொண்டுவந்துவிடுவேன். அதுக்கான திட்டம், வேலை எல்லாம் வைத்திருக்கிறேன். இப்போவே சொன்னா எப்படி? என்னாடா இப்படி பேசுறான்னு சொல்லுவீங்க. அங்கு அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நான் இங்கு நான் என் நாட்டு மக்களுக்காக செய்வேன்.