Skip to main content

முருகா என்றால் மக்களுக்கு என் முகம்தான் ஞாபகம் வரும் -சீமான் பளிச் பேட்டி!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020
jkl

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ரஜினி, பள்ளிதிறப்பு, வேல் யாத்திரை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் சற்று காட்டமாகவே பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் வருமாறு,

 

"ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வெளிநாடுவாழ் இந்தியவர்கள் விரும்புகிறார்களே என்று என்னிடம் கேட்கிறீர்கள், அதற்கு என்னிடம் சரியான பதில் இருக்கிறது. இன உணர்வும், மான உணர்வும் இருக்கும் யாரும் அவரிடம் இப்படி கேட்கமாட்டார்கள். அவருடைய ரசிகர்கள் அவரிடம் இப்படி கேட்கலாம். அதை நாம் ஒன்றும் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் அவ்வாறு கேட்டால் நாம் அதுதொடர்பாக கருத்து சொல்வது சரியாக இருக்கும். ஆர்வக்கோளாறு காரணமாக அவர்கள் ரசிகர்கள் செய்வதற்கெல்லாம் நம்மால் பதில் சொல்ல முடியாது. நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது டாஸ்மாக் கடைகளை 10 மணி வரை அதிகரித்துள்ளதை போல இதையும் கடந்து போக வேண்டும். இதில் மட்டுமாவது அவர்கள் பாஸ் மார்க் வாங்கட்டும் என்பதை நினைத்துக்கொண்டு நாம் சென்றுவிட வேண்டும். அரசாங்கம் மற்ற விஷயங்களில் ஆவது பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு பள்ளிகளை 16ம் தேதி திறப்போம் என்று அறிவித்துள்ளார்கள். 

 

கரோனா காரணமாக இன்னைக்கு தமிழக அமைச்சர் ஒருவரை கூட இழந்து நிற்கிறோம். இதை பற்றியெல்லாம் அவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். எல்லோரும் தேர்ச்சி பெற்றார்கள் என்று அறிவித்தால் இந்த தேசத்தில் என்ன குடியா முழுகிப்போய்விடும். மாணவர்களின் மனநிலையில் இருந்து சிந்தித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். நீதியரசர்கள் வலையொளி வாயிலாக வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்குகிறார்கள். அந்த பாதுகாப்பை நாம் மதிக்கின்றோம். அதை போலத்தான் மாணவர்களும். ஒரு அறையில் எந்த பயமும் இன்றி மாணவர்கள் அமர்ந்து எப்படி வகுப்பை கவனிப்பார்கள். அவர்களின் அச்ச உணவர்வை போக்க வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு அதிகம் இருக்கின்றது.  முன்பு போல் பழைய நிலைக்கு அனைத்தும் வரும் வரையில் பள்ளிகள் திறப்பு என்பது மாநிலத்தில் சாத்தியப்படாது என்பதே எங்களுடைய நிலைப்பாடாக உள்ளது. 

 

பாஜகவினர் வேல் யாத்திரை மேற்கொள்வதை பற்றி கேட்கிறீர்கள், அதை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர்களுக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய எந்த வழியும் கிடையாது. ஆனால் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களிடம் இருப்பது மதம் மட்டுமே. எனவே அதை வைத்தாவது அரசியல் செய்யலாமா என்று பார்க்கிறார்கள். மு.மேத்தா அடிக்கடி ஒன்று கூறுவார், மனிதனுக்கும், யானைக்கும் மதம் பிடித்தால் நாடு குட்டிசுவராகிவிடும் என்று. அந்த வழியில் தற்போது தமிழ்நாட்டையும் ஆக்கலாம் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதற்கெல்லாம் தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை ராஜா. நான் கட்சி ஆரம்பிக்கும் முன்பே பாஜக இருக்கிறதா இல்லையா? இவ்வளவு நாள் தொடங்காமல் இப்போது என்ன வேல் யாத்திரை தொடங்குகிறார்கள். எனக்கு பயந்துகொண்டுதான். நான் வேல் தூக்கி சென்றபோது எவ்வளவு இழிவுப்படுத்தினார்கள். அப்போதெல்லாம் யாராவது வாய் திறந்து பேசினார்களா? எல்லோருமே அமைதிகாத்தார்களே அது ஏன்? தற்போது மட்டும் எதற்காக வேலை தூக்கிக்கொண்டு எனக்கு முன்பு ஓடுகிறீர்கள். முருகா என்றாலே மக்களுக்கு என முகம்தான் ஞாபகத்துக்கு வரும். எனவே அவர்கள் பாச்சா எல்லாம் தமிழகத்தில் செல்லுபடியாகாது" என்றார்.

 

 

Next Story

புதிய சின்னத்துடன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நாம் தமிழர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Naam Tamilar Party to introduce candidates and new  Symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். வழக்கம்போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'கடலில் கலந்த எண்ணெய்யை மீனவர்களை விட்டு அள்ள வைப்பதா' - சீமான் கண்டனம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
'Don't keep the fishermen clean  the oil mixed in the sea'-seaman condemned

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணூரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய்யாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் கலந்திருக்கும் எண்ணெய் கழிவுகள் பல இடங்களில் மீனவர்களை வைத்து அள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மீனவர்களை வைத்து ஆபத்தை ஏற்படுத்தும் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில், 'சிபிசிஎல் நிறுவனத்தின் தவறால் வெளியேறி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை மீனவ மக்களை வைத்து அள்ளுவது கண்டனத்திற்குரியது. அவ்வாறு செய்யக்கூடாது. உரிய பாதுகாப்பு கருவிகளுடன், முறையான பயிற்சி பெற்றவர்களை பணியில் ஈடுபடுத்தி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.