Skip to main content

மனுதர்மம் எழுதியபோது குஷ்பு கூட இருந்து எழுதினாரா..? - சீமான் தடாலடி!

 

h

 

பெண்கள் தொடர்பாக மனுவில் கூறிய சில கருத்துகளைச் சமூக ஊடகம் வாயிலாக திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு இந்து அமைப்புக்கள், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைதொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு திருமாவளவனின் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து குஷ்பு தலைமையில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டார்.

 

இது தொடர்பான பிரச்சனைகள் சர்ச்சையான நிலையில், திருமாவளவனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "திருமாவளவன் பேசியது தொடர்பாக இன்று பெரிய அளவில் சர்ச்சை எழுப்பப்பட்டு வருகிறது. அவர் இல்லாத ஒன்றை எந்த இடத்திலும் கூறவில்லை. இருப்பதை அப்படியே ஊடகம் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அது தவறு என்றால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். மனுவை எழுதியது யார், எங்கள் அண்ணன் திருமாவளவனா? எழுதி இருப்பதைக் கூறியது தவறா? எங்கள் அம்மாவை, எம்குலப் பெண்களை இழிவுப்படுத்துகின்ற எதுவுமே வேதமாகவோ, புனிதமாகவோ இருக்க முடியாது என்பது எங்கள் அனைவரின் ஒருமித்தக் கருத்து. அதைத்தான் அவர் கூறுகிறார்.

 

இப்போது திடீர் என்று வேலை தூக்கிக்கொண்டு ஓடுகிறீர்கள். நான் வேல் வைத்திருந்த போது கிண்டல் அடித்த கூட்டம், தற்போது எனக்கு முன்பே வேலை எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள். நான் முருகன் முப்பாட்டன் என்று சொன்ன போது சிரித்தவர்கள், இன்று வேல் பூஜை செய்கிறார்கள். நான் ஆடு, மாடு வளர்த்தல், பசுமை, தற்சார்பு என்று கூறிய போது அதனைப் பற்றி சிந்திக்காமல் அதனைக் கிண்டல் அடித்தீர்கள். ஆனால், இன்றைக்கு கர்நாடகாவில் இருந்து ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு தற்சார்பு பொருளாதாரம் என்று பேசுகிறார் ஒருவர். நம்மை இல்லாமல் செய்ய முயற்சிப்பது அல்லது நம் திட்டங்களை காப்பி அடிப்பது என்ற வேலைகளை அவர்கள் மிகத் தீர்க்கமாகச் செய்து வருகிறார்கள். உங்களுக்கு என்று ஏதாவது கொள்கை இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை. நம்முடைய பிள்ளைகள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் பால் கொட்டப்படுகிறது, நெய் எரிக்கப்படுகிறது, மூத்திரம் குடிக்கப்படுகிறது என்கிறார்கள். இதுதான் இவர்களின் கோட்பாடாக இருக்கிறது. 

 

மாட்டுக்கறி சாப்பிடுகின்ற நான் இழிமகன், தீண்டத்தகாதவன், ஒதுக்கப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன். ஆனால் மாட்டு மூத்திரம் குடிக்கின்ற நீ உயர்ந்தவனா? மூத்திரம் குடிக்கின்ற உன்னை விட மாட்டுக்கறி சாப்பிடுகின்ற நான் எவ்வளோ உயர்ந்தவன். எனவே அவர் இல்லாத ஒன்றைச் சொல்லவில்லை. நானே பலமுறை அப்படிச் சொல்லியிருக்கிறேன். என்ன ஆட்டம் போட்டாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் இப்படிச் செய்வதால் அவரும் பயந்து பின்வாங்கப் போவதில்லை. எங்க அண்ணனே விட்டாலும் நாங்கள் அதனை விடுவதாக இல்லை. குஷ்பு இதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதைப் பற்றி கேட்கிறீர்கள், அவர்கள் மனுதர்மத்தை எழுதியபோது உடன் இருந்து எழுதியவரா? குஷ்புவையும் சேர்த்து அந்த நூல் இழிவாகச் சொல்கிறது என்பதுதான் அண்ணன் திருமாவளவனின் வருத்தம் எனவே முதலில் அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்