Skip to main content

மனைவி நடத்தை குறித்தே பொய் வழக்கு போட்டவர் அந்த இன்ஸ்பெக்டர்... அவரது மனைவியோ இவரது பெண்பித்து உள்ளிட்ட...

 

sathankulam police station

 

அப்பாவும் மகனும் அடித்துத் துவைக்கப்பட்ட வேளையில், அதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வேறொரு வழக்கிற்காக வந்திருந்த இரண்டு வழக்கறிஞர்கள் பற்றிய தகவல் கிடைக்கவே, பலகட்ட முயற்சிக்குப்பின் தொடர்பு கொண்டோம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மிகுந்த கவனத்துடனும், சட்ட அணுகுமுறையுடனும் நடந்ததை விவரித்தனர்.

 

ஒரு புகார் சம்பந்தமா அந்த வழக்கறிஞர்கள் க்ளையண்ட்டுடன் இரவு 7 மணிக்கு காவல் நிலையம் போயிருக்கிறார்கள். அப்போதுதான் ஜெயராஜை ஏற்றி வந்த போலீஸ் வாகனத்திலிருந்து அவரது சட்டையைப் பிடித்து, ஸ்டேஷனுக்குள் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தள்ள, தடுமாறிய ஜெயராஜ், கீழே விழாமல் சமாளித்துக் கொண்டார். அவரது பிடரியில் அடித்துள்ளார் எஸ்.ஐ.

 

சில நிமிடங்களில் உள்ளே வந்துள்ளார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். அப்போது அந்த வழக்கறிஞர்களில் ஒருவர், "என்ன சார், என்ன புகார்? ஏம் யிப்டி அடிக்கீக''ன்னு கேட்க, அந்த வழக்கறிஞரை முறைத்துப் பார்த்த இன்ஸ் ஸ்ரீதர், "வக்கீல்னா நீங்க வந்த வேலயப் பாக்கணும். இங்கல்லாம் கிராஸ் பண்ணக்கூடாது. அது வேற கேஸ். அவனுக போலீசையே அசால்ட் பண்ணுனவனுக. ஒங்களுக்குத் தெரியாது'' என வழக்கறிஞரிடம் சூடான வார்த்தைகளை விட்டிருக்கிறார் இன்ஸ். ஆனால், ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தை அறிந்த அந்த வழக்கறிஞர்கள், அவர்கள்மீது எந்த கேஸூம் இதற்கு முன் இருந்ததில்லை என்கிறார்கள்.

 

அப்பாவைப் போலீஸ் பிடித்துச் சென்றதால், பென்னிக்ஸ், தன் நண்பன் ரவிசங்கரோடு பைக்கில் வந்து இறங்கியிருக்கிறார்.

 

ஸ்டேஷனுக்குள் படபடப்பாக நுழைந்த பென்னிக்ஸிடம், ஏற்கனவே அங்கிருந்த இரு வழக்கறிஞர்களில் ஒருவர், "அந்த இன்ஸ்பெக்டர் எமோஷன்ல இருக்கார். இப்ப உள்ள போக வேணாம். நாம பேசிக்கலாம். அரைமணி நேரம் கழிச்சுப் போகலாம்'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

அதற்குள்ளாகச் சத்தம் கேட்ட எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், "அது யார்ல, அவன உள்ள கூப்டுலன்னு போலீஸ் முத்துராஜாவை அனுப்ப, யதார்த்தமா உள்ள போன பென்னி, "எங்கப்பாவ ஏம் அடிச்சீக''ன்னு கேட்க, உடனே பால கிருஷ்ணன் டேபிளை விட்டு ஆத்திரமா எழுந்திருக்க, கை எட்டவில்லை. சுற்றி வந்து பென்னிய அடிக்க முயற்சிக்க, பென்னி தடுக்க, அதில் பாலகிருஷ்ணன் தடுமாறி விழ, பென்னியும் நிலைகுலைந்து மேலே விழுந்துள்ளார். பென்னிக்ஸை பிடிக் கிறதுக்காக வந்த இரண்டு போலீஸ்காரர்கள் டேபிள் மேல விழ, அதிலிருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறியுள்ளன.

 

sathankulam police station

 

உள்ளே இருந்த ஸ்டேஷன் ரைட்டர் ஃபியூலா செல்வகுமாரி, "ஏய், போலீஸ் ஸ்டேஷன்ல வந்து போலீசயே அடிக்காம்ல. அவன வுட்றாதீங்க. அடிச்சித் தூக்குங்கல''ன்னு வெறித்தனமா டேபிளை ஓங்கி அடிச்சிருக்காரு. அப்புறம்தான் உள்ளே வச்சி இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.கள், போலீஸ்காரங்க எல்லாரும் சுத்தி நின்று அடிச்சிருக்காங்க. வக்கீல்கள் இருவரும் இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோதும், வேலையைப் பார்த்துவிட்டு போகும்படி சொல்லிவிட்டாராம். ஐயோ, அம்மா ஆத்தான்னு உள்ளாற ரெண்டு பேரும் அலர்ற சத்தம். இது மனிதச் செயலல்ல. மிருகத்தனமான செயல் என்கின்றனர் ஸ்பாட்டில் இருந்த வழக்கறிஞர்கள்.

 

இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், கேரளாவைப் பூர்வீகமாகக்கொண்டவர். தந்தை பி.டபிள்யூ.டி.யில் ஓர் அதிகாரி. வைகை டேம் கட்டிட வேலையின் போது அந்தப் பணிக்காகக் குடும்பத்துடன் தேனிப்பக்கமுள்ள ஆண்டிப்பட்டியில் குடியேறியிருக்கிறார்கள். போலீஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீதர் டைரக்ட் எஸ்.ஐ.யாக 2001இன் போது முதன்முதலாக நெல்லை மாவட்டத்தின் பனவடலிசத்திரம் காவல் நிலையத்திற்குப் போஸ்டிங் போடப்பட்டார். பின்னர் புளியங்குடிக்கு மாற்றப்பட்டு 2003இன் போது சங்கரன்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவர்.

 

ஸ்ரீதரின் மனைவிக்கும் பூர்வீகம் கேரளா தான். கல்யாணத்துக்காக சாதி உள்பட பலவற்றிலும் பொய் சொல்லி ஏமாற்றிய ஸ்ரீதரின் வண்டவாளத்தை, பெண்குழந்தை பிறந்த பிறகே அறிந்த மனைவி, வீட்டிற்குள்ளேயே தனி வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்.

 

விவாகரத்து பெற நினைத்த இன்ஸ்பெக்டரோ, தன் மனைவி நடத்தை குறித்தே பொய் வழக்கு போட்டிருக்கிறார். அவரது மனைவி சசிரேகாவோ, ஸ்ரீதரின் பெண்பித்து உள்பட பலவற்றையும் ஆதாரப் பூர்வமாக எடுத்து வைக்க, ஸ்ரீதர் போட்ட வழக்கு டிஸ்மிஸ் ஆகிவிட்டது. அதன்பின் வாழப் பிடிக்காத சசிரேகா தன் பெண்குழந்தையுடன் கேரளாவிற்கே திரும்பிப் போய் விட்டார்.

 

http://onelink.to/nknapp

 

ஸ்ரீதர் தேவர்குளம் மாற்றப்பட்டு பதவி உயர்வில் இன்ஸ் ஆகி சாத்தான்குளம் வரை வந்திருக்கிறார். இதற்குள்ளாக அனைத்துக் கெட்டப் பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள அதன் தாக்கமாக உடல்நலமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

 

பேரூரணி ஜெயிலில் ஸ்ரீதர் அடைக்கப்பட்டாலும் அங்குள்ள ஜெயிலர்களிடம், "நானும் காக்கிச் சட்டைதான். உன்னைவிட ரேங்க் கூடியவன். கொடுக்க வேண்டிய மரியாதையக் குடுக்கலைன்னா விட மாட்டேன். என் அரசியல் செல்வாக்கின் மூலம் மீண்டும் பொறுப்புக்கு வருவேன்'' என்று கெத்துக் காட்டியிருக்கிறார். இது ஜெயில் சூப்பிரடண்ட் வரை போக அவ்வளவு தெனாவெட்டா எனக் கறுவியவர், சிறைக் கைதிகளை விட்டு ஸ்ரீதரை வசமாகக் கவனித்து விட்டாராம்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்