Skip to main content

சசிகலாவை திணறடித்த தினகரன்! - அவசரகதியில் அறிக்கை!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

 AIADMK

 

‘என்னை எதிர்த்தால் மீண்டும் 1989’ என்பதில் உறுதியாக இருந்த சசிகலா, ‘அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து..’ என அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது ஏன்? என்ற நமது கேள்விக்கு சற்று விரிவாகவே பதிலளித்தார் அந்த ‘சின்னம்மா’ விசுவாசி –

 

“ஜெயலலிதாம்மா சொல்லாததையா சின்னம்மா சொல்லிட்டாங்க? 1989-ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரா அம்மா இருந்தப்ப.. அவர் எழுதிய ராஜினாமா கடிதம் ‘லீக்’ ஆகி பரபரப்பாச்சு.. அந்த லெட்டரில் என்ன சொல்லிருந்தாங்க? ‘அரசியலில்,  எனது ஏழாண்டு கால பொதுவாழ்வில் நான் கண்ட ஒரே லாபம் – அவமானமும் கீழ்த்தரமான இழிசொற்களும்தான். அரசியலில் ஈடுபட்ட ஒரே காரணத்திற்காக, இதுவரை வேறு எந்தப் பெண்ணிற்கும் நேர்ந்திராத கொடுமையெல்லாம் எனக்கு நடந்திருக்கிறது.’ என்று தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, ‘அரசியலைவிட்டு விலகுகிறேன்’ என்று எழுதியிருந்தாங்க. அம்மா அரசியலை விட்டு விலகவா செய்தார்கள்? சாகும் வரையிலும் முதலமைச்சராக அல்லவா இருந்தார்கள்?

 

 AIADMK

 

சின்னம்மாவுக்கும் அந்தமாதிரி ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனநிலையில் இருக்காங்க. மனுஷன்னா சூழ்நிலைக்கு ஏற்ப மனசு மாறும் இல்லையா? அதுதான் நடந்திருக்கிறது. அறிக்கை வெளியிடறதுக்கு முன்னால சின்னம்மா வீட்டு வாசல்ல எந்த போலீசும் நிற்கல. இப்ப பாருங்க.. நூற்றுக்கணக்குல போலீஸை குவிச்சிருக்காங்க. 

 

ஜாதி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நான் தேவருன்னு சொல்லிக்கிட்டு, மக்கள்ட்ட ஓட்டு கேட்டுப் போறதுல, சின்னம்மாவுக்கு சுத்தமா விருப்பம் இல்ல. அதிமுகவுக்கு போறதும் நடக்கிற மாதிரியில்ல. தினகரனுக்குப் பின்னாலயோ, முன்னாலயோ போனா, அதிமுக தோற்றதுக்கு காரணம் சசிகலாதான்னு ஊரு உலகம் பேசும். அம்மா இறந்தப்ப.. கட்சியோட பொதுச்செயலாளரா இருக்கேன்னு சின்னம்மா சொன்னாங்க. தினகரன்தான் சின்னம்மாவ முதலமைச்சர் ஆயிடலாம்னு மண்டைய குழப்பினாரு. இப்ப தினகரனுக்கு முதலமைச்சர் ஆகணும்கிற வெறி வந்திருச்சு. 

 

‘எனக்கு ஓட்டு கேட்டு களத்துக்கு வரணும். இல்லைன்னா வெளிப்படையா எங்களுக்கு (அமமுக) ஆதரவு தெரிவிச்சு அறிக்கை விடணும். ஆளும்கட்சியா இருந்தும் அதிமுகவுல ஏழு நாள்ல 6,000 பேர் கூட விருப்பமனு கொடுக்கல. எனக்காக ஒரு தடவை நீங்க வாய்ஸ் கொடுத்தா போதும். 234 தொகுதிக்கும் இருபதாயிரம் பேரை விருப்பமனு கொடுக்க வைக்கிறேன்.’ என்று டிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடியில், சின்னம்மாவால் என்ன பண்ண முடியும்? ஒதுக்கியிருந்து அதிமுக வெற்றிக்காகப் பிரார்த்தனை பண்ணுறேன்னு அவசர அவசரமா அறிக்கை வெளியிட்டுட்டாங்க. 

 

 AIADMK

 

அமமுகவுக்கு சசிகலா ஓட்டு கேட்டதுனால அதிமுக தோற்றுப்போச்சுன்னு வரலாறு சொல்லிடக்கூடாதுல்ல. அதே நேரத்துல, சசிகலாவ அதிமுகவுல சேர்த்துக்கிடாததுனால, அந்தக் கட்சி தோற்றுப்போனதுன்னு வரலாறு பதிவு பண்ணுறதுதான் சரியா இருக்கும்கிற மனநிலைலதான் சின்னம்மா இருக்காங்க.   

 

நேற்று (3-ஆம் தேதி) வீட்டுக்குள்ள சின்னம்மாவோட கடுமையா டிடிவி சண்டை போட்டாரு. வீட்ல சசிகலா - பொதுச் செயலாளர்ங்கிற லெட்டர் பேடு இருக்கு. அதுல எக்ஸ்-ன்னு போட்டுகூட அறிக்கை விட்டிருக்கலாம். ஆனாலும், கடகடன்னு டைப் அடிக்க வச்சி, வெள்ளை பேப்பர்ல சின்னம்மா அறிக்கை தயார் பண்ணுனாங்க. அதுவும் கீழேயிருந்து மேல வர்ற மாதிரி, அவசர அவசரமா அறிக்கை வாசகத்த அவங்களே சொன்னாங்க.    

 AIADMK


 
எடப்பாடி மேல கோபமும் விரக்தியும் சின்னம்மாவுக்கு ரொம்ப இருக்கு. ஆனாலும்.. அக்கா வளர்த்த கட்சியேன்னு பார்க்கிறாங்க. சின்னம்மா வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிக்கிட்ட எடப்பாடியால தேர்தல்ல ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகக்கூட முடியாது. அந்த தொகுதில அதற்கான வேலையெல்லாம் சத்தமில்லாம நடந்துக்கிட்டிருக்கு. 

 

 AIADMK

மொத்தத்துல அரசியல்ல இருந்து ஒதுங்குறேன்னு சின்னம்மாகிட்ட இருந்து அறிக்கை வந்ததுக்கு காரணமே டிடிவி-தான். ஒதுங்கிறேன்னு சொல்லிருக்காங்க. விலகுறேன்னு சொல்ல. தேர்தல் முடிவுகள் வெளியானதும், என்னென்ன நடக்கப்போகுதுன்னு பார்க்கத்தானே போறோம். அதுவரைக்கும், தன்னுடைய கோபதாபங்களை உள்ளுக்குள்ளே அடக்கிவைத்து, தான் நினைத்தது நிறைவேறுவதற்காக, கடுமையான பிரார்த்தனையில் சின்னம்மா ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்.” என்று பெருமூச்சுவிட்டார். 

 

‘அக்கா’ ஆசி சசிகலாவுக்கு கிடைக்குமா? வேண்டுதல் நிறைவேறுமா? 

 

 

 

Next Story

'செல்லூர் ராஜு சொன்னது உண்மை; எடப்பாடிக்கு தான் புத்தி வரவேண்டும்'-புகழேந்தி பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'What Sellur Raju said is true; "Edappadi should come to his senses" - Pugahendi interview

காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15 தேதியான இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஓசூரில் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புகழேந்தி காமராஜர் சிலைக்கு மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ''குழந்தைகளுக்கான இலவச உணவு திட்டத்தை அமுல்படுத்தி, இலவச கல்வியை தோற்றுவித்த ஏழை பங்காளனாக, கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரராக விளங்கியவர் காமராஜர். அவருடைய பிறந்தநாளை இன்றைய தினம் நான் இங்கே உள்ள நிர்வாகிகளோடு கொண்டாடி உள்ளேன். அதிமுகவில் ஒற்றுமை வரவேண்டும் என்பது மனதார வரவேண்டும் வாயிலேயே பேசிக்கொண்டு இருந்தால் ஆகாது. கூப்பிட்டு சேர்த்து வைத்து விடுவேன் என்று ஒருவரும்; எந்த தியாகமும் செய்ய தயார் என்று இன்னொருவரும்; முடியவே முடியாது என்று இன்னொருவரும்; கட்சி நாசமாக போகட்டும் என நினைக்கும் பழனிசாமியும் என இப்படிப்பட்ட நிலைப்பாடுகள் மாற வேண்டும்.

எல்லோரும் ஒருங்கிணைந்தால் தான் அதிமுக காப்பாற்றப்படும் என்பது என்னுடைய கருத்து அல்ல தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து. அதற்கு வழி வகுக்க வேண்டும். அதற்கு தான் பாடுபடுகிறோம். இதில் சரியாக வரவில்லை என்றால் மக்கள் மத்தியில் அவர்கள் யார் என்பதை தோலுரித்துக் காட்டுவதற்கு இந்த ஒருங்கிணைப்பு குழு தயங்காது. மனதார காமராஜர் பிறந்தநாளில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மதுரையில் இருந்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். என்ன தெரியுமா சொல்லி இருக்கிறார் 'நாங்கள் என்ன காமராஜரா? நாங்கள் என்ன எம்.ஜி.ஆரா? நாங்கள் என்ன ஜெயலலிதாவா? கூவி கூவி ஓட்டு கேட்டாலும் போட மாட்டேன் என்கிறார்கள். அதனால் தான் மூன்றாவது இடத்துக்கு போய்விட்டோம். மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. கூவி கூவி ஓட்டு கேட்டும் ஓட்டு போடவில்லையே' என்று செல்லூர் ராஜூ சொல்கிறார்.

அப்பொழுது அவருடைய தலைமை யார்? அவர் தலைமையாக ஏற்றுக் கொண்டிருப்பவர் பழனிசாமி. இப்பொழுதாவது பழனிசாமிக்கு புரியுமா? செல்லூர் ராஜு சொன்னது உண்மை. சென்ற மாதம் ராகுல் காந்தியை பாராட்டினார் மனதார வரவேற்றோம். இப்பொழுது இன்னொரு உண்மையை சொல்லி விட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூவி கூவி ஓட்டு கேட்டாலும் 'தூ..' என துப்பி விட்டு போகிறார்களே தவிர ஓட்டு போட மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக செல்லூர் ராஜு சொல்லி இருக்கிறார். இனி பழனிசாமிக்கு தான் புத்தி வரவேண்டும். தோற்றுப் போனதற்கு அவர் காரணம் சொல்ல வேண்டும். ஜெயலலிதா சொல்லுவார் இந்த தோல்வியை நானே ஒப்புக்கொள்கிறேன். இந்த தோல்வியை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வார். கலைஞர் கடிதம் எழுதுவார் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்று. ஆனால் எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறாராம். உன்னால் தான் அதிமுக தோற்றே போய்விட்டது. இதில் என்ன ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி செய்த தப்புக்கு யார் ஆய்வு செய்வது. செல்லூர் ராஜு உண்மையை சொல்லி உள்ளார் பாராட்டுகிறோம். ஏன் சி.வி.சண்முகம் இன்னும் அமைதியாக இருக்கிறார். நான் எதிர்பார்த்தது நியாயம், தைரியம் எல்லாம் சி.வி.சண்முகம் இடத்தில் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த தைரியம் எங்கோ ஒரு மதுரை மண்ணிலிருந்து வருகிறது. ஏன் விழுப்புரம் மண்ணில் இருந்தது வரவில்லை என்பது தான் எனக்கு புரியவில்லை'' என்றார்.

Next Story

ஜெயலலிதாவுக்கான சிகிச்சை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Treatment for Jayalalithaa High Court action order

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இத்தகைய சூழலில் தான் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக தொண்டர் ராம் குமார் என்பவர் சென்ன உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

Treatment for Jayalalithaa High Court action order

இந்நிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) வேலை செய்யவில்லை. மருத்துவமனை தரப்பில் இரண்டு பேட்டிகள் அளிக்கப்பட்டன. இந்த இரு பேட்டிகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அளித்த பேட்டிகளுக்கும், ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கைக்கும் முரண்பாடுகள் உள்ளன. தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்தவற்றை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை” என வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் இரண்டு வாரங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.