Skip to main content

ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்தார் வல்லபாய் படேலின் பார்வை...

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

sardar

 

காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்தியச் சுதந்திரத்திற்காக போராட வந்தவர், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து, பல தனி ராஜ்யங்களை ஒன்றிணைத்து இன்றைய நவீன இந்தியாவை உருவாக்கியதில் மிகப்பெறும் பங்காற்றியவர்  ‘இரும்பு மனிதர்’  சர்தார் வல்லபாய் படேல். காங்கிரஸில் முக்கியஸ்தராக இருந்து வந்த இவரை, தற்போது ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் அவர்களுடைய தலைவராகவே சொந்தம் கொண்டாடி வருகின்றனர். சுதந்திரத்திற்கு பின், ஜவஹர்லால் நேருவை கொண்டாடும் காங்கிரஸ் கட்சியினர் சர்தார் வல்லபாய் படேலை மறந்துபோனதும் இதற்கான காரணமாக எடுத்துக்கொள்ளலாம். 

 

சர்தார் வல்லபாய் படேலை காங்கிரஸ்காரர்கள் கொண்டாடவில்லையென்றாலும் பேசவாவது செய்திருக்கலாம் என்பது பலரின் கருத்து. அவர்கள் அவரை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல மறந்தபோது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அதனை தற்போது பயன்படுத்தி வருகின்றன. இதனால் பலரும் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ்-காரரா? மதவாதியா? போன்ற பல கேள்விகளால் குழம்பியிருக்கின்றனர். இந்திய தேசத்தை உருவாக்கப் பாடுபட்டவர்களில் ஒருவர், காந்தியை நம்பியவர், அதே வேளையில் தன் துணிவைக் காட்டவும் பயப்படாதவர் சர்தார் வல்லபாய் படேல். 

 

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியா என்னும் நாட்டை ஒன்றிணைப்பதில் பல சிக்கல்கள், கொள்கை முரண்கள் எனப் பற்பல காரணிகள் பிரச்சனைகளாகவே இருந்து வந்தது. அவை அப்போதைய இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தமாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தன. 1949ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், இந்தியா சுதந்திரம் பெற்று மூன்றரை வருடங்களான நிலையில் சென்னை தீவுத்திடலில் சர்தார் வல்லபாய் படேல் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவர்களின் கொள்கையான ஹிந்துராஜ்யம் குறித்தும் இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் குறித்தும் பேசியது பின்வரும்படி... 

 

“நம்முடைய முதல் பாடத்தையே மறந்ததால், நம்முடைய தலைவரை இழந்துவிட்டோம். ஒற்றுமைதான் நம்முடைய வலிமை என்பதை அவர் போனபிறகும் கூட உணரவில்லை என்றால் துரதிர்ஷ்டம் நம்மைப் பிடித்துக்கொள்ளும். 

 

ஒற்றுமையாக இருக்க சாதி, மத வேறுபாடுகளை மறந்து, அனைத்து இந்தியர்களும், அனைவரும் சமமானவர்கள் என்பதை நினைவுகூர வேண்டும். ஒரு சுதந்திரமான நாட்டில் இரண்டு மனிதர்களுள் ஒருவர் மட்டும் உயர்ந்தவராக இருக்க முடியாது. அனைவருக்கும் சமமான பொறுப்புகள், உரிமைகள், வாய்ப்புகள் இருக்க வேண்டும். இது நடைமுறைக்கு மிகவும் கடினமான ஒன்றுதான், ஆனால் இறுதிவரை இதை போராடி எடுத்துச் செல்ல வேண்டும். 

 

இந்த நாட்டில் அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கிய விஷயமாக இருக்கிறது. நம்முடைய சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு வளரும் வரையாவது, நம்முடைய அரசாங்கத்தை மிரட்ட முடியும் என்பதை மறந்துவிட வேண்டும். ஒவ்வொரு கூட்டத்தாலும் இப்படி தினசரி மிரட்டப்பட்டால் அரசாங்கத்தால் சரியாகச் செயல்பட முடியாது. 

 

இப்படியான கூட்டங்கள் விரும்புவது அவர்களின் சொந்த நேர்மையான சிந்தனைப்படி நல்லதாக இருக்கலாம். ஆனால் காந்தி நாம் விரும்புவதைப் பெறுவதற்காகவும் நமது இலட்சியத்தை அடையவும், உண்மை மற்றும் அகிம்சை போன்ற வழிகளை நம் முன் வைத்து சென்றுள்ளார். அரசாங்கத்தின் அதிகாரத்தை அச்சுறுத்தவும் சவால்விடவும் தொடங்கி, ஒரு சில கூட்டம் தங்கள் நோக்கங்களை அழுத்தத்தினால் வலுக்கட்டாயமாகத் திணித்தால், அரசாங்கத்தால் ஆக்கப்பூர்வமான எதையும் செய்ய முடியாது. இந்த நாட்டில் ஏற்படும் அழுத்தங்கள் குழப்பத்தையும் கோளாறையும் உருவாக்கும், அது நாட்டை வலுப்படுத்துவதற்குப் பதிலாகப் பலவீனப்படுத்தும்.

 

எங்களது அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கவனித்து வருகிறோம். தங்கள் வலிமையைக் காட்டி இந்து ராஜ்யத்தைக் கட்டாயமாகக் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதை எந்த அரசாங்கமும் பொறுத்துக்கொள்ள முடியாது. பிரிக்கப்பட்ட (பாகிஸ்தான்) பகுதியைப் போலவே இந்த நாட்டிலும் கிட்டத்தட்ட இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ளனர். நாங்கள் அவர்களை விரட்டப் போவதில்லை. அவ்வாறு நாங்கள் செய்தால் அது ஒரு கொடுமையான நாளாக இருக்கும். அவர்கள் இங்கேதான் இருக்கப் போகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் நாடு என்று அவர்களை உணரச் செய்வது நமது கடமையும் நமது பொறுப்பாகும். மறுபுறம், இந்த நாட்டின் குடிமகன்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் பொறுப்பும் கூட” என்று பேசியிருந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தை ஏற்றுக்கொண்டு இந்தியக் கொடியை மதித்தால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

 

இதேபோல, அப்போது கம்யூனிஸ கொள்கையில் தீர்க்கமான நம்பிக்கை கொண்ட சிலர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கியதையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். ஒரு பேட்டியில்கூட,  “நான் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்று ஒரு சமயத்தில் பலரும் என்னைக் கூறினார்கள். ஒரு வகையில் அதுவும் உண்மைதான். ஏனென்றால் அந்த இளைஞர்கள் தைரியமானவர்களாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் பயமில்லாதவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், கொஞ்சம் கோப குணமுடையவர்கள். அவர்களின் துணிச்சல், சக்தி மற்றும் தைரியத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும், அவர்களின் உண்மையான பொறுப்புகளையும் கடமையையும் உணர வைத்து அவர்களின் கோபக்காரத்தனத்தை குணப்படுத்தவும் நான் விரும்பினேன்” என்று கூறியிருந்தார். அவர் சொல்வதைப்போல நடந்துக்கொண்டால் காங்கிரஸிலும் இணைத்துக்கொள்வதாகவும் பேசியிருக்கிறார். 

 

 

 

Next Story

திமுக பிரமுகர் அடித்த காலண்டர்; போலீசில் புகாரளித்த இந்து முன்னணி

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Calendar scored by DMK person; Hindu Front reported to police

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்தவர் காயத்ரி இளங்கோ. இவர் 2024 க்கான மாத காலண்டர் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக 2024 ஜனவரி 30 ஆம் தேதி 'ஆர்.எஸ்.எஸ் மதவெறிக்கு உத்தமர் காந்தி படுகொலை' (1948) என்று அச்சிடப்பட்டிருந்தது.  

'காந்தி படுகொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தும் வேண்டுமென்றே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கும் விதமாக, காழ்ப்புணர்ச்சியுடன் அமைதியை சீர்குலைத்து மதக்கலவரம் ஏற்படுத்தும் விதமாக காலண்டர் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகிறார்' என இந்து முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது தேசபக்தி மிக்க நல்ல பண்புள்ள மனிதர்களை உருவாக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையிலும், மக்களிடம் பிளவு ஏற்படுத்தி கலவரம் உருவாக வேண்டும் என்ற தீய எண்ணத்தில் காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் காயத்ரி இளங்கோ என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் பா. ஜெகதீசன் தலைமையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Next Story

சனாதன தர்மம் கெட்ட வார்த்தையா? - ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் விளக்கம்!

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

  RSS Explanation Sanatana Dharma in the meeting!

 

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம், சேலம் மறவனேரியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) நடந்தது. மாலையில், பொதுக்கூட்டம் நடந்தது. 

 

மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், “ஒரு சமுதாயம், தான் யார் என்பதை மறந்து போனால் அந்த சமுதாயம் அழிந்து போய்விடும். நம்முடைய முன்னோர் யார்? நம் மொழி என்ன? உணவுப் பழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து விடக்கூடாது. 

 

  RSS Explanation Sanatana Dharma in the meeting!

 

நம் நாட்டில் எத்தனையோ பண்பட்ட மொழிகள் இருந்தும், பள்ளியில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்ற அந்நிய மொழியைத்தான் கற்றுக் கொடுக்கிறோம். நாம் நம்முடைய சொந்த மொழியை மறந்து கொண்டிருக்கிறோம். மேலாண்மையைக் கற்றுக்கொள்ள நாம் அமெரிக்காவின் மேலாண்மை புத்தகங்களை பயில வேண்டிய தேவை இல்லை. பகவத் கீதையிலும், மஹாபாரதத்திலும் மேலாண்மைக் கோட்பாடுகள் நிறைய உள்ளன. இப்படி நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது. 

 

சனாதன தர்மம் இப்போது பெரிய சர்ச்சை ஆகிவிட்டது. சனாதன தர்மம் இந்த தேசத்துடன் பிறந்தது. அதனோடு வளர்ந்தது. சனாதன தர்மத்தை பாரதம், உலகத்திற்கே அளிக்க வேண்டும் என்றார் அரவிந்தர். நாம் நம் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகளைக் கூறுவதுதான் சனாதன தர்மம். 

 

  RSS Explanation Sanatana Dharma in the meeting!

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்னார் அவர் இந்துதான். இன்றைக்கு இருக்கும் கொந்தளிப்பான நிலையில் இருந்து மீண்டு பாதுகாப்பான வாழ்க்கையை அளிப்பதற்கு சனாதன தர்மம்தான் தேவை. அது எப்போதைக்கும் பொருத்தமானது. 

 

மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ்.க்கு மிகவும் நெருக்கமானவர். அவரை ஏதோ நமக்கு வேண்டாதவர் போல் சிலர் சித்தரிக்கின்றனர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அன்று அவர் இருந்த இடம் கொல்கத்தா. அன்று நடந்த கலவரங்களால் அவர் மனம் வெறுத்துப் போய், சுதந்திரத்தைக் கொண்டாடாமல் உண்ணாவிரதம் இருந்தார்.

 

அங்கிருந்து டெல்லிக்கு வந்தார் காந்தி. அங்கும் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது காந்தியின் உதவியாளர் ஒருவர் வந்து, பக்கத்துல முஸ்லிம் லீக் ஆட்கள் நடமாட்டம் இருக்கு. அதனால் காந்தியின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று பயமாக இருக்கிறது என்று கூறினார். அதையடுத்து, ஸ்வயம் சேவகர்கள் ராத்திரியும், பகலுமாக காந்திக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள். 

 

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட காந்தி, பேச்சை துவங்கும்போதே, நான் ஒரு சனாதனி ஹிந்து என்று சொல்லித்தான் பேசத் தொடங்கினார். சனாதனி என்பதை இன்றைக்கு ஏதோ கெட்ட வார்த்தை போல பேசுகிறார்கள். அப்போது, சனாதனி என்று கூறிய காந்தி கெட்டவரா? அரவிந்தர் கெட்டவரா? சனாதனம் என்பதை தப்பானது போல இங்கு சிலர் கருத்துருவாக்கம் செய்ய முயலுகின்றனர். எக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துகளைச் சொல்வதுதான் சனாதன தர்மம்” என்றார் விவேகானந்தன்.  

 

திடீர் சர்ச்சை: 


ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் மறவனேரி பகுதியில் சாலையை முற்றாக ஆக்கிரமித்து நடத்தப்பட்டது. அரசியல் கட்சியினர், இதர சமூக இயக்கங்கள் இதுபோன்ற நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. கூட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மறவனேரி சாலையில், வழக்கத்திற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு மட்டும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்திருப்பது பொதுப் பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

 

இக்கூட்டத்தையொட்டி, நிகழ்ச்சி நடந்த சாலையில் பகல் முழுவதும் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாகச் செல்ல வேண்டிய பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. 

 

  RSS Explanation Sanatana Dharma in the meeting!

 

இது ஒருபுறம் இருக்க, மாநகர நுண்ணறிவுப் பிரிவு, கியூ பிராஞ்ச், எஸ்.ஐ.யூ., எஸ்.பி.சி.ஐ.டி. ஆகிய அனைத்து வகை உளவுப்பிரிவு காவல்துறையினரும் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முழுமையாக வீடியோ கேமராவில் பதிவு செய்தனர். 

 

வரும் காலங்களில் இதர அமைப்புகளுக்கும் அந்த சாலையில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதிக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.