Skip to main content

அதிமுக வேட்பாளருக்கு வாய்ப்பூட்டு போட்ட பாமக! ஆரம்பத்திலேயே அரெஸ்ட்!!

Published on 25/03/2019 | Edited on 26/03/2019

சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். ஒவ்வொரு வேட்பாளரும் அவரவர் ராசி, நட்சத்திரத்தின்படி நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்யும்படி கட்சித் தலைமை அறிவுறுத்தி இருந்தது. அதனால் அதிமுகவில் சில வேட்பாளர்கள் கடந்த 22ம் தேதி மனுதாக்கல் செய்திருந்தனர்.
 

salemஇந்நிலையில், சேலம் தொகுதியில் போட்டியிடும் கே.ஆர்.எஸ்.சரவணன், திங்கள்கிழமை (மார்ச் 25, 2019) மாலை 2.40 மணியளவில் சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி  ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலம் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அருள் (பாமக), ராதாகிருஷ்ணன் (தேமுதிக), கோபிநாத் (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்தனர்.


முன்னதாக, சேலம் 5 ரோடு அருகே, அதிமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பொன்னையன் திறந்து வைத்தார். பின்னர், அண்ணா பூங்கா அருகில் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் அதிகபட்சம் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், ஊர்வலமாக வந்தவர்களை ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவாயில் பகுதியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த ஊர்வலத்தால், இதனால் ஓமலூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நகரின் முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தக்கூட அனுமதிக்கூடாது என உயர்நீதிமன்றம் கடந்த நான்கு நாள்களுக்கு முன் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 


இதற்கிடையே, அண்ணா பூங்கா அருகே அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலத்தின் கார், சாலையில் நீண்ட நேரம் நின்று இருந்தது. இதைப்பார்த்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், கார் ஓட்டுநரிடம் சென்று, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உடனடியாக காரை அப்புறப்படுத்துமாறு கூறினார். அதற்கு கார் ஓட்டுநர், காரை எடுக்க மறுத்ததோடு, சீருடையில் இருந்த காவல் ஆய்வாளரிடம் கைகளை நீட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
 

salemபின்னர் சக கட்சியினர் மற்றும் காவல்துறையினர் கூடியதால், சமாதானம் அடைந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து வாகனத்தை நகர்த்தினார். ஆளுங்கட்சியினரின் பொறுப்பற்ற செயல்களால் ஓமலூர் பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டது.


இது ஒருபுறம் இருக்க, வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்கு வந்த வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனிடம் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, பேட்டி அளிக்கும்படி கேட்டனர். 


அப்போது வேட்பாளர் சரவணன், ''மறைந்த அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களில் தொடங்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாக தலைவர் வாசன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். தான் இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.


பாமகவின் அன்புமணி ராமதாஸை அவர், 'சின்ன அய்யா', தேமுதிக தலைவரை 'கேப்டன்' என்றும் பவ்யமாக குறிப்பிட்டார்.


அவரிடம், 'எதை முன்னிறுத்தி பரப்புரை செய்வீர்கள்?' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'சேலம் தொகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். சிறப்பான முறையில் பணியாற்றுவேன்,' என்றார். மேலும் அவரிடம், 'கட்சிக்குள் உங்களின் அணுகுமுறை சரியில்லை என்று பரவலாக கூறப்படுகிறதே?' என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 


அதற்கு பதில் சொல்ல சற்று தயங்கிய சரவணனை, அருகில் இருந்த பாமக நிர்வாகி அருள், 'அதெல்லாம் பிறகு பேசலாம். வாருங்கள் போகலாம்' என அரவணைத்து அழைத்துச்சென்றுவிட்டார். கிட்டத்தட்ட ஆளுங்கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பூட்டு போட்டதுபோல் பாமக நிர்வாகி அவரை கட்டுப்படுத்தி அழைத்துச்சென்றது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தபோது, ''அதிமுக வேட்பாளருக்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய அனுபவம் இல்லை. அதனால் ஏதாவது உளறிக்கொட்டிவிடக்கூடாது என்பதற்காக பாமக அருள், அப்படி அழைத்துச்சென்று இருக்கலாம். மற்றபடி ஆளுங்கட்சியினரை பாமகவினர் கட்டுப்படுத்துகிறார்கள் என்று சொல்லி விட முடியாது,'' என்றார்.

 

 

Next Story

'சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக இணையும்'-ஓபிஎஸ் நம்பிக்கை

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
'AIADMK will merge before assembly elections' - OPS hopes

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை நேற்று சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி பொதுமக்களிடம் திறந்த வெளி வாகனத்தில் பேசி இருந்தார்.

'AIADMK will merge before assembly elections' - OPS hopes

சசிகலாவின் சுற்றுப்பயணத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'கறந்த பால் மடி புகாது; மீன் கருவாடு ஆகலாம். ஆனால் கருவாடு மீன் ஆகாது. இப்போது இருக்கின்ற நிலைமை 'கறந்த பால் மடி புகாது; கருவாடு மீன் ஆகாது என்ற நிலைமை தான் உள்ளது. இந்த மாதம் அனைத்திந்திய அதிமுகவின் தொண்டர்கள் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வுடன் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டிய தருணம் இது'' என தெரிவித்திருந்தார்.

nn

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக கட்சி இணைவது உறுதி ஆகிவிடும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கட்சியை இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதிமுக ஒன்றிணையும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைந்து விடும்'' என தெரிவித்துள்ளார்.

Next Story

நெருங்கி வரும் விநாயகர் சதுர்த்தி - மனுகொடுத்த களிமண் மண்பாண்ட சங்கத்தினர்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 'Plaster of Paris Ganesha idols should be banned'- clay potters petition

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள் தற்போது துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிவடைந்து சிலைகளுக்கு வண்ணம் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளாகவே இரசாயனம் கலந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்  உள்ளிட்ட பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க அரசு தடை விதித்ததோடு, விநாயகர் சிலை தயாரிப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் உள்ள இடங்கள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை மூடிய சம்பவங்களும் நிகழ்த்திருந்தது.

இந்நிலையில் வடமாநிலத்தவர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிலை தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சேலத்தில் களிமண் மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குலாலர் மண்பாண்டம், களிமண் பேப்பர் கூழ் விநாயகர் சிலை பொம்மைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளுடன் மனு அளித்தனர். மேலும் சிலை தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளை விரைவாக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.