Skip to main content

பாஜகவின் பிரச்சார பீரங்கி ஆனார் ஆளுநர் ரவி; அரசியல் மேடை ஆனது பெரியார் பல்கலை!!    

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

 RN Ravi spoke  support of BJP at Periyar University graduation ceremony

 

'ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் எதற்கு' என சுயாட்சி பேசும் மாநிலங்கள் முழங்கி வரும் வேளையில், சேலம்  பெரியார் பல்கலைக்கழகத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களவை தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை  மறைமுகமாகத் தொடங்கி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.     

 

புது டில்லியில் கடந்த செப்டம்பர் திங்களில், 18வது ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தியது. அந்த மாநாட்டில் பேசப்பட்ட  சங்கதிகள் குறித்து, 'ஜி20 முன்னோக்கு பகுப்பாய்வு' என்ற தலைப்பில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 23 ஆம் தேதி கருத்தரங்கம்  நடந்தது. ஏற்கனவே, துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ள நிர்வாகிகள் சங்கப்பரிவாரங்களுக்கு ஆதரவு மனநிலையில், பல்கலைக்கழகத்தையே மாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 

 

இந்நிலையில்தான் ஆளுநர் வருகையையொட்டி,  அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களும் கண்டிப்பாக கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பல்கலை  நிர்வாகம். இதனால் பல்கலையில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கருத்தரங்கில் வேறு வழியின்றி கலந்து கொண்டனர். பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரை ஆற்றினார். 

 

 RN Ravi spoke  support of BJP at Periyar University graduation ceremony

 

அவர் பேசுகையில், “வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் பெண்களுக்கு மத்திய அரசு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு  வழங்கியுள்ளது. அதேபோல், பெண்களை தொழில்முனைவோராக்கும் நோக்கில்  முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கி வருகிறது. இத்திட்டங்களால் பெண்கள் பொருளாதாரம் மேம்படுகிறது. அவர்கள் அதிகாரம் பெற்றவர்களாக ஆகிறார்கள்” என்றார் ஆளுநர். மேலும் அவர் பேசுகையில், “இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2040 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இந்தியா மூன்றாவது  பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடு என்ற உயரத்தை எட்டும். வங்கிக் கணக்கு இல்லாத அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கில் 'ஜன் தன்' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வங்கிக் கணக்கு தொடங்கி  உள்ளது. 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' எனப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், 'ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது,'' என்ற ஆர்.என்.ரவி, முத்ரா திட்டத்தில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சிறு கடன் பெற்று, சின்னதாக தேநீர் கடையோ அல்லது சமோசா கடையோ போட்டால்கூட தொழில்முனைவோராகி விடலாம் என்றதுதான் பார்வையாளர்களையே கதிகலங்க வைத்தது. பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் இந்தியர்களின் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது. அதனால்தான் கொரோனா நோய்த்தொற்று  காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், பிற நாடுகளுக்கு இலவசமாக வழங்கி உதவ முடிந்தது என்றும் கூறினார் ஆர்.என்.ரவி.     

 

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோது, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில்  தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்திய அரசு, பிற நாடுகளுக்கு உதவி செய்த அதேவேளையில், உள்நாட்டிலேயே  கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள் பேராசிரியர்கள். இதையெல்லாம் ஆளுநர் பெரிய சாதனை போல பேசுகிறார் என்ற விமர்சனமும் கிளம்பியது.     சமோசா கடையும், தேநீர் கடையும் போடலாம் என்ற ஆளுநர், ஏனோ பானி பூரி கடையும், பான் பீடா கடையும் போடலாம் என்று சொல்ல  மறந்துவிட்டதாக கிண்டல் பேச்சுகளும் மாணவர்கள் மத்தியில் ஒலித்தன. 

 

ஆளுநர் ரவி, வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்க என்றுதான் பச்சையாக சொல்லவில்லையே தவிர, அக்கட்சிக்கு முழுநேர பிரச்சார  பீரங்கியாகி விட்டதாகவே சொல்கிறார்கள் பெரியார் பல்கலை பேராசிரியர்கள். கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி இறுதியாக, மத்திய அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் மக்களிடம் எடுத்துச் சொல்ல  வேண்டும் என்று அன்பாக வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆளுநரே பாஜ கட்சியின் நட்சத்திர பேச்சாளர் போல மாறி வருவது, அந்தப் பதவிக்கு அழகல்ல என பல தரப்பிலும் கண்டனங்களும்  எழுந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, நவம்பர் 24ம் தேதி, பெரியார் பல்கலையில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு விழாவை காலை 9 மணிக்கே  தொடங்கியது பல்கலை நிர்வாகம். இதுவும் பல தரப்பிலும் அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது. பட்டமளிப்பு விழா என்பது பகல் 11 மணியளவில் நடத்தப்படுவதுதான் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை. இந்த மரபுக்கு முரணாக  காலை 9 மணிக்கே பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளனர்.     

 

மேலும், பதிவாளர் நேர்காணலில் வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் விதிமீறல், துணைவேந்தரின் தன்னிச்சையான செயல்பாடு  உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து, செனட் உறுப்பினர்களும், கல்லூரி ஆசிரியர் கழகத்தினரும் மொத்தமாக புறக்கணித்தனர். அதேபோல் சிண்டிகேட் உறுப்பினர்களில் அரசுப் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ள நிலையில், தமிழக அரசின் பல்கலைக்குள் புகுந்து  பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகமாக பரப்புரை செய்துவிட்டுச் சென்றது ஆளுங்கட்சித் தரப்பிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு உள்ளது.     

 

'சந்திரமுகி' படத்தில், கங்கா பாத்திரத்தில் நடித்த ஜோதிகா, மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறியதுபோல், ஆளுநர் என்ற அந்தஸ்தில் இருந்து  ஆர்.என்.ரவி, மெல்ல மெல்ல தாமரைக் கட்சியின் பிரச்சார பீரங்கியாகவே மாறிவிட்டதாக அதிருப்தி கிளம்பியுள்ளது. கருத்தரங்கில் கலந்து கொண்ட முனைவர் பட்ட மாணவர்கள், 'என்ன கொடுமை ஆர்.என்.ரவி சார்?' என கிண்டலாக பேசியபடியே அந்த அரங்கத்தை விட்டு  வெளியேறினர். ஆளுநரின் கருத்தரங்கு பேச்சை ரகசியமாக பதிவு செய்த நுண்ணறிவுப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி ஆகிய உளவுப்பிரிவு காவல்துறையினர்,  தமிழக காவல்துறை மேலிடத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.  

 

 

Next Story

“அய்யா வைகுண்டருக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் ரவி” - அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Priest Trained Students Association Condemns  Ravi sticking a sticker on Ayya Vaikundar

“அய்யா வைகுண்டருக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் ரவி” என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் கடுமையாக சாடியுள்ளது. 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனீயப் பிடியிலிருந்து மீட்கப் போராடிவரும் மாபெரும்  திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அதன் ஒரு பகுதியாக சமத்துவ தமிழ் மரபுகளை கையகப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.

சிதம்பரத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை சனாதன சிமிழுக்குள் அடைப்பது, வைகுண்டரை பார்ப்பனிய மயமாக்குவது என்ற ஆன்மீக சித்து வேலைகளை பார்ப்பனிய அயோக்கியத்தனங்களை தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மீகம் உறுதியாக நிராகரிக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மாபெரும் சமத்துவ மரபு கொண்ட தமிழ் ஆன்மீக சமூகம், ஆர்.எஸ்.எஸ், பாஜக, ஆளுநர் ரவி, அண்ணாமலையின் ஸ்டிக்கர் ஒட்டும் அரசியலை மோசடியான ஆன்மீகத்தை கடுமையாக எதிர்க்கிறது. வன்மையாகக் கண்டிக்கிறது. 

Priest Trained Students Association Condemns  Ravi sticking a sticker on Ayya Vaikundar

பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போட்டு பார்ப்பனிய சிமிழுக்குள் அடைக்கும் ஆர்.என். ரவி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட பட்டியல் சமூகத்தை அனுமதிப்பாரா? தீட்சதர்களிடம் பேசுவாரா? தமிழகம் முழுக்க உள்ள சைவ, வைணவ கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர் தவிர மற்ற கவுண்டர், தேவர், நாடார், வன்னியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட இந்து தமிழ் சாதியினரை அர்ச்சகராக்க கோரிக்கை வைப்பாரா? உண்மையில் இந்துக்களுக்கான கட்சி பாஜக எனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பாஜக குரல் கொடுக்காதது ஏன்? தனது பார்ப்பனிய, சனாதன வைதீக ஆன்மீகத்தில் நம்பிக்கை அற்று, மாபெரும் தமிழ் சமய மரபை களவாடும் இக்கூட்டத்தை 2024 தேர்தலில் மொத்தமாக முறியடிப்போம். 

"அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் எனவும், ஆளுநர் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். சனாதனம் பேசுகிற உருவ வழிபாடு என்ற அடிப்படைக்கே எதிரானவர் அய்யா. அய்யாவை வணங்கும் இடங்கள் சனாதனம் சொல்கிற கோவில்கள் எனவும் அழைக்கப்படுவது இல்லை. நீ வணங்கும் இறைவன் என்பவன் உனக்குள்தான் இருக்கிறான் என்கிற தத்துவத்தைச் சொல்கிறவர் அய்யா வைகுண்டர். சனாதனத்தின் அடிப்படை அம்சங்களை அடியோடு நிராகரித்தவரே அய்யா வைகுண்டர்.

மண்ணின் பூர்வ குடிகள் மீது மனிதகுல விரோதமான அடக்குமுறைகள் ஏவப்பட்ட காலம். அதாவது, பெண்கள் மார்பு சேலை அணிய தடை பெண்கள் இடுப்பில் குடம் சுமக்கவும் தடை, பெண்கள் நகைகள் அணியவும் தடை, ஆண்கள் தலைப்பாக கட்டத் தடை, ஆண்கள் மீசை வளர்க்கத் தடை, ஆண்கள் வளைந்த கைப்பிடி குடை, பயன்படுத்தத் தடை, இப்படித்தான் சனாதன தர்மத்தின் பேரால் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், வன்கொடுமைகள், அய்யா வைகுண்டர் காலத்தில் நிகழ்த்தப்பட்டன. இவை அனைத்தையும் அதாவது ஆளுநர் ரவி சொல்வது போலவே சனாதன தர்மத்தின் பேராலான இக்கொடுமைகளை அய்யா வைகுண்டர் ஏற்றாரா? எதிர்த்தாரா? என்பதற்கு சரித்திரத்தில் பதில் உள்ளது.

ஏனெனில் சனாதன தர்மத்தின் பெயரால் மேலே இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க அய்யா வழி என சனாதனத்துக்கு எதிரான சமயத்தையே உருவாக்கியவர் அய்யா வைகுண்டர். அவரை இப்போது வலதுசாரிகள் கபளீகரம் செய்ய பார்க்கிறார்கள் என்பது தீவிர அய்யா வழி பக்தர்கள் கருத்தாக உள்ளது. இடுப்பில் துண்டும், தலையில் தலைப்பாகையும் கட்ட கூடாது என்றது சனாதனம். ஆனால் அய்யா வைகுண்டரோ துண்டை தலைப்பாகை கட்டு என கட்டளையிட்ட போராளி. அய்யா வழியில் இன்றும் தலைப்பாகை அணிவது இதற்குதான். ஒவ்வொரு அய்யா வழி பதியில் ஜாதி- மதம்- ஆண்- பெண் என ஒரு வேறுபாடும் இல்லை. 

சனாதனம் கற்பித்த அத்தனை ஒடுக்குமுறைகளையும் காலந்தோறும் தகர்க்கும் வகையில் வலிமையான அய்யா வழி எனும் சமயத்தை தந்தவர் அய்யா வைகுண்டர். அய்யா வழி வழிபாட்டு முறை ஏதேனும் சனாதனத்தின் உயிர்நாடி சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? சனாதனம் நீஷபாசை என சொல்லும் தமிழில் இருக்கிறதா? என்றெல்லாம் ஆராயாமல் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ‘ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன் பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே..’ என அய்யா வைகுண்டர் வலியுறுத்துவது எதனைத் தெரியுமா? 

சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சொன்ன சனாதனத்துக்கு எதிரான அய்யா வைகுண்டரின் சண்டமாருத முழக்கம் இது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்.. புரிந்தும் புரியாமல் பொய்யும் புனைபுரட்டுமாய் சனாதனம் பேசும் சக்திகளுக்கு எப்படி புரியும்? 2024 தேர்தலில் பாஜகவை மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் ஆர்.என். ரவியையும் வீட்டுக்கு அனுப்ப, தமிழ் ஆன்மீக உலகம் கோயில், கோயிலாகச் சென்று தனது பணியைச் செய்யும். தனது மரபை, ஆன்மீகத்தை பேணிப் பாதுகாக்கத் தவறிய எந்த ஒரு இனமும் வரலாற்றில் நீடிக்காது. நமது தனித்த சமத்துவ ஆன்மீக மரபை பாதுகாப்போம். ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவி கூட்டத்தை நிராகரிப்போம்!

ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்! கோயில்களில் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடுவோம்”  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

'தமிழக மக்கள் மோடியை வஞ்சிக்க தயார்' - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
MODI

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருப்பூர், தூத்துக்குடி வந்திருந்த பிரதமர் மோடி நேற்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். அதன்படி சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.  இதனையடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்  ‘நான் தமிழகம் வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மழை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க. அரசு சரிவர செயல்படுத்தவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக தி.மு.க. தெரிவித்துக் கொண்டிருந்தது. தி.மு.க. குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம். இது மோடியின் உத்தரவாதம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. குடும்பக் கட்சிகள் ஆண்ட காலத்தில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை'' என பேசியிருந்தார்.

'Tamil people are ready to deceive Modi'- Minister Shekharbabu interview

இந்தநிலையில் சென்னையில் நடந்த 'மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் மோடியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நரேந்திர மோடி அவருடைய கட்சி நோட்டாவிற்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார். இந்த ஆண்டு வரையில் இது ஆறாவது முறையாக தமிழகத்திற்கு ஒரு பிரதமர் வந்து கொண்டிருக்கின்றார். யாருக்கு வயிற்றில் புளியை கரைத்து கட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து வருகிறாரோ? அவருக்கு தான் திமுகவும்,  திராவிட மாடல் ஆட்சியும் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களுடைய கருத்து. நம்மிடம் இருந்து பெறப்படுகின்ற வரியில் இருந்து அவர்கள் திரும்பி கொடுக்கும் சதவிகிதத்தை பார்த்தால் நாம் அளிக்கிறது 100 என்றால், 25 சதவீதம் அளவிற்குதான் அவர்கள் திரும்பி நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கிறார்கள்.

ஒரே ஒரு கேள்வி அவர்களை பார்த்து கேட்பது என்னவென்றால் இத்தனை முறை வருகின்ற பிரதமர் வெள்ளத்தால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போதும் கூட ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத பிரதமர் தமிழகத்திற்கு இத்தனை முறை வருவது அவருடைய அரசியல் லாப நோக்கத்திற்காகத்தானே?  அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய துயர் துடைப்பதற்கு இதுவரை ஒரு சல்லிக்காசு கூட நிவாரண நிதியாக தமிழகத்திற்கு வழங்காமல் வஞ்சிக்கின்ற பிரதமரை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வஞ்சிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.