Skip to main content

அதிமுகவில் இபிஎஸ் இடத்தில் ரஜினி!நெருக்கடியில் எடப்பாடி! 

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

எடப்பாடி தனது வீட்டில் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் மா.செ.க்கள் கூட்டம் முடிந்தபிறகு, எம்.எல்.ஏ.க்களை மட்டும் அழைத்து தனியாக பேசினார். ""நாம் இந்த முறை அமைத்த கூட்டணி சரியில்லை. பாராளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்தது... நடந்த தேர்தலில் பாராளுமன்றத் தொகுதியில் நமக்கு எதிராக வாக்களித்த மக்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்மை வெற்றிபெற வைத்தார்கள். இதே சூழ்நிலை 2021-ல் வரும் சட்டமன்றத் தேர்தலின் போது இருக்காது. அப்பொழுது கூட்டணிகள் மாறும், முடிவுகளும் மாறும். அம்மாவால் உருவாக்கப்பட்ட இந்த அரசுக்கு இன்னும் ஒன்றரையாண்டு காலம் ஆயுசு இருக்கிறது. இந்த அரசு நீடிப்பது உங்களுக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு வேண்டியதை செய்கிறேன். தி.மு.க.வின் சதி வேலைக்கு யாரும் பலியாகிவிடாதீர்கள்'' என உருக்கமாக பேசி ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் வைட்டமின் "ப'வை வெயிட்டாக கொடுத்திருக்கிறார்.

 

admk



அந்த கூட்டத்திற்கு வராத 15 எம்.எல்.ஏ.க்களிடம் இதே போல் உருக்கமாக பேசி வைட்டமின் "ப'வை அவர்களது வீட்டிற்கே அனுப்பி வைத்திருக்கிறார். அந்த "ப'வின் எதிரொலியாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர் "நான் என்றென்றும் இரட்டை இலைதான்' என அறிக்கையே வெளியிட்டார். இப்படி எடப்பாடி தடுப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை. ஆடிட்டர் மூலம் ஓ.பி.எஸ்.சை அழைத்து பேச வைத்தது.

 

ops son



காயிதே மில்லத் சமாதியில் அஞ்சலி செலுத்திய ஓ.பி.எஸ்., அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் மதுரை பகுதியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள், காஞ்சிபுரம் மா.செ.வான வாலாஜாபாத் கணேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் என தமிழகம் முழுவதுமிருந்து திரட்டப்பட்ட 50 பேருடன் தனது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யுடன் சேர்ந்து ஜெ.வின் சமாதி நோக்கி பயணமானார். "ஏற்கனவே இதே ஆடிட்டரின் அறிவுரையின் பேரில்தான் ஜெ.வின் சமாதியில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினேன்' என சொன்னார் ஓ.பி.எஸ்.

 

ops



அ.தி.மு.க.வின் தேர்தல் தோல்விக்குப் பிறகு நிர்வாகிகள் யாருமே எட்டிப் பார்க்காத ஜெ.வின் சமாதிக்கு இ.பி.எஸ். துணையில்லாமல் ஏன் ஓ.பி.எஸ். போனார் என்கிற விவாதம் எழுந்தது. அந்த நேரத்தில்தான் "இந்தியைப் போலவே தமிழையும் மற்ற மாநில மக்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கோரிக்கை வைத்தார் இ.பி.எஸ். மும்மொழித் திட்டத்துக்கு ஆதரவான அந்தக் கருத்தை திடீரென நீக்கினார். அமைச்சர் ஜெயக்குமார் மூலம், "அ.தி.மு.க. இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருக்காது' என பேட்டியும் கொடுக்க வைத்தார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.சின் ஜெ. சமாதி விஜயம் எடப்பாடிக்கு மத்திய பா.ஜ.க. கொடுத்த பதிலாகவே பார்க்கப்பட்டது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
 

ops



ஜெ.வின் சமாதி விசிட் முடிந்ததும் ஓ.பி.எஸ். நேராக சென்றது,. உடல்நலம் சரியில்லாமல் இருந்து மருத்துவமனையிலிருந்து திரும்பிய மதுசூதனன் வீட்டிற்குதான். மதுசூதனன்தான் இரட்டை இலையை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிக்கு வழங்கிய வழக்கின் மனுதாரர். மதுவுக்கு வயதாகிவிட்டது. நீங்கள் அவைத் தலைவராகுங்கள். எடப்பாடி பொதுச் செயலாளராகட்டும் என எடப்பாடி தரப்பில் சில காலமாக பேச்சு இருந்து வந்தது. அதே மதுசூதனன் தனக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மறுபடியும் வழக்கு போட்டால் மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆதரவுடன் இரட்டை இலை முடக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது. இதில் எதை மதுசூதனன் செய்ய வேண்டும் என அவரை நேரில் சந்தித்த ஓ.பி.எஸ். நினைக்கிறார் என்கிற விவாதமும் அ.தி.மு.க.வில் வேகமாக எழுந்தது.


பா.ஜ.க.விடமிருந்து விலகி நிற்க நினைக்கும் இ.பி.எஸ்., சசிகலாவுடன் இணைந்தால் இரட்டை இலை முடக்கப்படும், கட்சி உடைந்துவிடும். ஆட்சியும் கவிழும் என பா.ஜ.க. எச்சரிக்க விரும்புகிறது. அதனால்தான் ஓ.பி.எஸ். மதுசூதனனை சந்தித்து பேசினார் என்கிற விளக்கமும் அ.தி.மு.க. வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. அ.தி.மு.க.வை உடைத்து கபளீகரம் செய்துவிட்டு, அ.தி.மு.க. இடத்தில் தன்னை நிலைநிறுத்த விரும்புகிறது. அதற்காக ஜெ.வின் மரண காலம் தொடங்கி தொடர்ச்சியாக காய்களை நகர்த்தி வருகிறது. அந்த காய் நகர்த்தலில் முக்கியமானவர் ஓ.பி.எஸ். அவரை வைத்து தர்மயுத்தத்தை தொடங்கியது. அதை இ.பி.எஸ்.சுடன் இணைத்தது. தேர்தல் நேரத்துக்கு பிறகு மறுபடியும் தர்மயுத்தத்தை ஓ.பி.எஸ். மூலம் தொடங்கிவிட்டது.

இந்த ஆடுபுலி ஆட்டங்கள் 2021-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் வரை நடைபெறும். 2021 தேர்தலில் ரஜினியை பா.ஜ.க. ஹீரோவாக களமிறக்கும். ரஜினியின் தளபதிகளாக ஓ.பி.எஸ். தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வினர் இருப்பார்கள். ரஜினியின் வாக்குகளும் அ.தி.மு.க. வாக்குகளும் சேர்ந்தால் தி.மு.க.வுக்கு சவாலாக வரும். அதற்குள் ஊழல் புகார் நிறைந்த இ.பி.எஸ். வகையறாக்களை ஒரு கை பார்த்து விடுவது, முழுக்க அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சின் கையை ஓங்க வைப்பதுதான் பா.ஜ.க.வின் பிளான். இதற்காகவே ஆடிட்டர் ஒருபக்கம் ஓ.பி.எஸ்.சையும் மறுபக்கம் ரஜினியையும் சமமாக கையிலெடுக்க நினைக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சம் ஆட்சியை காப்பாற்றுவதும், ஒருவேளை 2021 தேர்தல் முடிவு அ.தி.மு.க. வுக்கு தோல்வி என வந்தால் 2024 வரை மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. உதவியுடன் தப்பித்துக் கொள்வதை தவிர எடப்பாடிக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என கணக்கிடுகிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

  rajini



ஓ.பி.எஸ்.சின் அசைவுகளில் பா.ஜ.க. வின் கை இருக்கிறது. அதை எதிர்த்தால் எடப்பாடியை குறிவைத்து மத்திய அரசின் ரெய்டுகள் பாயும். அது மட்டுமல்ல எடப்பாடியை கொடநாடு கொலை வழக்கில் சிக்க வைத்து, கைது வரையிலான நெருக்கடி உருவாகும். ஏனென்றால் எடப்பாடி மீது கொடநாடு கொலைகள் தொடர்பாக புகார் கூறிய மாத்யூ சாமுவேல்தான் மம்தா பானர்ஜிக்கு எதிரான சாரதா சிட்பண்ட் வில்லங்கத்தை கண்டு பிடித்தவர். அவர்தான் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அடைந்த வெற்றிக்கான சூத்ரதாரிகளில் ஒருவர் என ஒரு அதிர்ச்சித் தகவலையும் பகிர்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.