Skip to main content

சதமடித்த ஒற்றுமை பயணம்; கவனிக்கப்பட்ட ராகுலின் நிகழ்வுகள்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

rahul gandhi bharath joda yatra 100th day celebrations 

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து இந்த யாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தி, இன்று 100வது நாளாக நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

 

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இந்த 100 நாட்களில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள்: 

3750 கிலோமீட்டரை 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் எனக் கடக்கும் வகையில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணம் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு கன்னியாகுமரியில் ராகுல் தொடங்கினார். இந்தப் பயணத்தின் 8வது நாளான 14ம் தேதி கொல்லம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கால்களில் கொப்பளங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஒருநாள் அவரது பயணம் தடைப்பட்டது.

 

rahul gandhi bharath joda yatra 100th day celebrations 

 

ராகுல் மேற்கொண்ட இந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சமூக ஆர்வலர் மேதா பட்கர், மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி போன்ற ஆளுமைகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், அவர்களும் ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டு நடைப் பயணத்தை மேற்கொண்டனர். தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவில் நடைப் பயணம் மேற்கொள்ளும்போது, வயதான பாட்டி ஒருவர் ராகுலை கட்டித்தழுவி முத்தமிட்டு ஆசீர்வாதம் செய்ததைக் கண்டு ராகுலும் அங்கிருந்த தொண்டர்களும் நெகிழ்ந்து போனார்கள்.

 

தெலுங்கானாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி சாலையில் நடந்து செல்கையில் அங்கிருந்த சிறுவர்களுடன் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மாணவர்களுடன் சேர்ந்து ரன்னிங் ரேஸில் ஈடுபட்டார். அவர் ஓடிய நிலையில் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைவருமே சேர்ந்து ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டனர். இது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அதேபோல், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 56வது நாள் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். அவருடன் இணைந்து ம.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ சுமார் இரண்டரை மணி நேரம் நடைப்பயணம் மேற்கொண்டார்.

 

rahul gandhi bharath joda yatra 100th day celebrations 

 

இந்நிலையில் 29ம் நாளான கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியில் இருந்து காலை தனது நடைப் பயணத்தை ராகுல் காந்தி துவங்கினார். இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் அன்றைய தினம் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். உடல்நிலை காரணமாக நீண்ட நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நிலையில் அவர் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளார். அப்போது ராகுல் தனது அம்மாவிடம் கனிவாக நடந்து கொண்டதும், அவரது ஷூவின் லேசை கட்டிவிட்ட காட்சிகளும், நடைப் பயணத்தின்போது, ‘நடந்தது போதும்’ என்று சொல்லி அவரை காரில் ஏற்றிவிட்ட சம்பவங்கள் எல்லாம் அனைவரையும் கவனிக்க வைத்தது. ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

 

நவம்பர் 27 ஆம் தேதி காலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணம் மேற்கொண்டபோது புல்லட் ஓட்டியது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. இந்த வீடியோவானது வைரல் ஆன நிலையில் பயணத்தின்போது சைக்கிள் ஓட்டியதும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின்போது விலங்குகள் நல  ஆர்வலர் ரஜத் பிரசார் மற்றும் சர்தாக் ஆகியோர் வளர்க்கும் நாய்களுடன் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டபோது, நாய்களுடன் நெருங்கிப் பழகினார். சிறிது தூரத்திற்கு நாய்களும் ராகுலுடன் பயணத்தைத் தொடர்ந்தது.

 

rahul gandhi bharath joda yatra 100th day celebrations 

 

ராஜஸ்தானில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை பொருளாதார அறிஞரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் சந்தித்து சிறிது நேரம் நடைப் பயணம் மேற்கொண்டதுடன் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியும் விவாதித்து உள்ளார்.

 

 

Next Story

மாநிலங்களவைத் தேர்தல்; சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Sonia Gandhi contest in Rajya Sabha elections

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

அதே சமயம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி மற்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின் போது ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“பாஜக இன்ஸ்டன்ட் அரசியல் செய்கிறது” - அமைச்சர் உதயநிதி விமர்சனம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

  BJP does instant politics says Minister Udhayanidhi

 

அவதூறு பரப்பி நாளையே கோட்டைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறியில் பாஜக 'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்வதாக அமைச்சர் உதயநிதி கடுமையாகச் சாடியுள்ளார்.

 

தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டதை வைத்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, அதில் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில மாநாட்டையொட்டி, இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் & கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்குகிற நிகழ்வு ஆகியவற்றில், தேனி - விருதுநகர் - நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த வாரம் பங்கேற்றோம். செல்லும் இடமெல்லாம் கழக இளைஞர்களின் உற்சாகம், மூத்த முன்னோடிகளின் வாழ்த்து ஆகியவை ‘இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.வும் ‘ஏமாற்று அரசியல்’ செய்யும் அ.தி.மு.க.வும் 2024 மக்களவைத் தேர்தலில் வீழப் போவதை உறுதி செய்தன. போலி அரசியலை வீழ்த்தி, மாநில உரிமையை உயர்த்திப் பிடிக்க அயராது உழைப்போம்.

 

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி -மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. ‘யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்' என்று நினைக்கையில், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது. தங்களின் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்வதுதானே சிறந்த அரசியலாக இருக்க முடியும். அந்தக் கொள்கைப் பயணத்தில் இளைஞர்களைக் கொள்கை ரீதியாக வளர்த்தெடுத்து, அவர்களைத் தலைவர்களாக உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்தி, அவர்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி என அது ஒரு நீண்ட நெடிய பயணம்.

 

அதைத்தான் பெரியார் - அண்ணா - கலைஞர் போன்றோரெல்லாம் பின்பற்றிச் சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலைக் கையிலெடுத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தனர். அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நம் தலைவர் அவர்கள் இன்று கழகத்தையும் தமிழ்நாட்டையும் வழிநடத்தி வருகிறார். ஆனால், 'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி நாளையே கோட்டைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது. இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப் போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில அத்தியாயங்கள் தான்” என்று 8 பக்கங்கள் கொண்ட நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.