Skip to main content

Exclusive: பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு மிரட்டல்... ஹத்ராஸில் ஜோதிமணி கண்டனம்

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

jothimani

 

உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியினருடன் சென்றனர். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் ஹத்ராஸ் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறை தடையை மீறி சென்றதாக ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.

 

பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் குழுவுடன் தான் செல்ல இருப்பதாகவும், ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரை தான் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி வருகை தருவதாக கூறியுள்ளதால், உத்தரபிரதேச நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

rrr

 

ராகுல்காந்தியுடன் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் சென்றுள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்களுடன் வேனில் சென்றுகொண்டிருந்தபோது நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர், 

 

''இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்தவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை. மருத்துவ வசதிகள் செய்துதரப்படவில்லை. அவருக்கு வாழும்போது மறுக்கப்பட்ட கண்ணியம் மரணத்திலும் மறுக்கப்பட்டுள்ளது.

 

 

Rahul Gandhi

 

தனது மகளின் உடலை கடைசியாக ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன் என்று அவரது பெற்றோர் எவ்வளவோ கெஞ்சியும் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. பெற்றோரின் அனுமதி இல்லாமல், பெற்றோரும் உடனில்லாமல் அந்த இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அரசு எரியூட்டியுள்ளது. 

 

அதற்கு பிறகு அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் அந்த குடும்பத்தினரை சந்தித்து, இன்னும் இரண்டு, மூன்று நாட்கள்தான் இந்த மீடியாக்கள் இருக்கும், அரசியல் கட்சியினர் வருவார்கள், அதற்கு பிறகு நாங்கள்தான் இருப்போம். அதனால் உங்கள் வாக்கு மூலத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். 

 

பாதிக்கப்பட்ட அந்த பெண், தான் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறிவிட்டுத்தான் உயிரிழந்திருக்கிறார். இந்த சூழலில் அந்த குடும்பம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கிராமமே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை வெளிக்கொண்டு வந்தவர்கள் மிரட்டப்படுகிறார்கள். அவர்கள் மீது அரசு அடக்குமுறைகள் ஏவப்படுகிறது.

 

இதற்கு முன்பு எங்கள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அந்த குடும்பத்தை சந்திக்க போனார்கள். ராகுல்காந்தி மீதே போலீசாரின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ராகுல்காந்திக்கே இந்த நிலைமை என்றால் அந்த குடும்பம் என்னனென்ன சித்ரவதைக்கெல்லாம் உள்ளாகியிருக்கும். அந்த கிராமம் எந்த வகையில் சித்ரவதைக்கு உள்ளாகியிருக்கும். 

 

Rahul Gandhi

 

ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு பலிகொடுத்துவிட்டு, அந்த பெண்ணை இவ்வளவு வருடமாக வளர்த்த பெற்றோரை எரியூட்டும்போது கூட அனுமதிக்கப்படாத சூழலில் அந்த குடும்பம் இவ்வளவு சித்ரவதைக்கு உள்ளானால் அந்த பெற்றோரின் மனது என்ன பாடுபடும். 

 

இந்த நேரத்தில் நமக்கு யாராவது துணையாக நிற்க வேண்டும், ஆறுதல் சொல்ல வேண்டும் என்று மனிதனாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்பார்ப்பார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அந்தக் குடும்பத்திற்கு துணையாக இருப்பார்கள், அந்த குடும்பத்திற்காக நியாயம் கேட்பார்கள். 

 

அதற்காகத்தான் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேச எல்லையில் கடுமையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசின் அடக்குமுறைக்கு காங்கிரஸ் எம்பிக்களும், காங்கிரஸ் கட்சியினரும் அஞ்சக்கூடியவர்கள் அல்ல.  கண்டிப்பாக, நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி, நியாயம் கேட்போம்.

 

rahul-priyanka

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமை நடந்த பின்னரும் ஒரு முறைகூட கண்டிக்கவில்லை. எங்கள் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும், அரசு உரிய தண்டனை அளிக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி, நியாயம் கிடைக்கும், அந்த குடும்பத்திற்கு துணையாக நிற்போம் என்று சொல்லவில்லை. அந்த அளவுக்கு குற்றவாளிகளை ஆதரிக்கும் அரசாக உள்ளது. 

 

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. ஹத்ராஸில் நடந்த இந்த சம்பவம் நாளைக்கு நம்ம ஊரிலும் நடக்கலாம். இந்த ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதுதான் கதி. அதற்கு அனுமதிக்கக்கூடாது என்று ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் மோடி அரசின் அடக்கு முறைக்கு அஞ்சாமல் தனது நீதி கேட்கும் பயணத்தை தொடர்ந்து நடத்துகிறார்.

 

up police

 

ராகுல் காந்தி அரசியலுக்காவே ஹத்ராஸ் வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி விமர்சித்துள்ளாரே...

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்கக்கூடாதா? சித்ரவதைக்கு ஆளான குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவது தவறா, இதை செய்யக்கூடாதா? இதை செய்யாமல் நரேந்திரமோடி அரசுபோல் குற்றவாளிகளை ஆதரிக்க வேண்டுமா? அப்படியென்றால் அந்த குடும்பத்திற்கு யார் நீதி கேட்பார்கள்? யார் பாதுகாப்பாக இருப்பார்கள்? இதையெல்லாம் ஒரு அரசியல் கட்சி செய்யவில்லையென்றால் அந்த கட்சியை எதற்கு மக்கள் ஆதரிக்க வேண்டும்?

 

மத்திய மாநில அரசு இந்த சம்பவத்தில் எப்படி நடந்து கொள்கிறது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி கண்டிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் நினைப்பதைத்தான் காங்கிரஸ் கட்சி செய்துகொண்டிருக்கிறது என்றார். 

 

 

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.