Skip to main content

“குதிரையை விரட்டிவிட்டு எப்படி சவாரி செய்யப் போகிறார் அண்ணாமலை” - புதுமடம் ஹலீம்  கேள்வி!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Pudhumadam Haleem - ADMK - BJP - Edappadi - Annamalai

 

அ.தி.மு.க. - பாஜக கூட்டணி முறிவு குறித்து தன்னுடைய கருத்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அ.தி.மு.க.வின் கூட்டணி முறிவை இன்றளவும் சில கட்சித் தலைவர்கள் ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். இதற்கு காரணம் பாஜக இதுவரை அண்ணா, ஜெயலலிதா மீது வைத்த விமர்சனங்களுக்கு அதிமுக பணிந்து தான் சென்றுள்ளது என்பது தான். ஏன், இவர்களின் தலைவி ஜெயலலிதா இறப்பதற்கு முன் பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்றார். அந்தக் காணொளியை அதிமுகவினர் அப்போது மறந்துவிட்டு இப்போது ஏன் பரப்புகிறீர்கள். மூங்கிலைக் கூட ஓரளவுக்குத் தான் வளைக்க முடியும், அதுபோல் தான் கூட்டணியும். இன்றைக்கு, அனைத்திற்குமே அண்ணாமலை தான் காரணம் எனும் அளவிற்கு நிலை மாறிவிட்டது. அண்ணாமலை தோற்றுப் போவதை பாஜகவினரே விரும்புகின்றனர். 

 

மேலும், கூட்டணி உடைய அண்ணாமலை மட்டும் காரணம் எனவும் நான் பார்க்கவில்லை. ஏனென்றால், எடப்பாடி விரும்பாத சில நபர்களை கட்சியில் இணைக்கும் வேலையை அண்ணாமலை செய்தார். பாஜக செய்ய முயற்சித்தது. இதனால், கட்சியை கட்டுக்குள் வைத்து 2026 தேர்தலை சந்திப்பது தான் எடப்பாடியின் திட்டம். ஆனால், அதிமுகவிலே ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றோர் கூட்டணியை விரும்பாமலும், செல்லூர் ராஜு போன்றோர் கூட்டணியை விரும்புகின்றனர். 

 

சில அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாலும் பயந்துள்ளனர். அண்ணாமலை கூட எங்களிடம் விசாரணை குழுக்கள் இருக்கிறது என்றாரே. அதேபோல், எச்.ராஜாவும் நாங்கள் தான் அ.தி.மு.க.வை காப்பாற்றினோம். இல்லை என்றால் உடைந்திருக்கும் என்றார். அதிமுகவில் சசிகலா, தினகரன் ஆகியோரை இணைத்து விடுவார்கள் என்றதால் தான் இந்த கூட்டணி முடிவை எடப்பாடி எடுத்துள்ளார். மாறாக, கொள்கை முரண் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

 

தொடர்ந்து, என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய கட்சியான அ.தி.மு.க. பிரிந்துவிடும் என பாஜகவும், இடதுசாரி அமைப்புகள் கூட நினைக்கவில்லை. மோடி அவர்களுக்கே இது களங்கம் விளைவிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. ஒருவேளை, எடப்பாடி தனித்து நின்று 8 இடங்கள் வரை வென்றாலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. இதனால், சின்ன மாநிலத் தலைவர் பிரச்சனைக்காக கூட்டணியை இழக்க வேண்டுமா என்று பாஜக யோசிக்கலாம். எனவே, அதிமுக கூட்டணி உடைய அண்ணாமலை தான் முக்கிய காரணம் என சொல்வேன். காரணம், இவர்களுக்கு தேசிய தலைமை மோடி, அமித்ஷா விடம் எந்த பிரச்சனையும் இல்லை . எனவே, எடப்பாடி வென்றாலும் யாரை ஆதரிப்பார் என்பதே சந்தேகம்.

 

பாஜகவின் கூட்டணியால் கடந்த காலங்களில் அதிமுகவை சார்ந்தவர்களே அவர்களுக்கு வாக்களிக்காமல் இருந்துள்ளனர். அதனை, ஈரோடு இடைத் தேர்தலிலே நாம் பார்த்தோம். எடப்பாடியும், இந்த கூட்டணி முறிவு குறித்து சிறுபான்மையின மக்களிடம் சென்று சேருங்கள் என்றுள்ளார். இதனால், ஓரளவு அவர்களின் வாக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், திமுகவை விரும்பாதவர்கள் சேர்ந்து சிறிது சதவீதம் வாக்கு உயரலாம் இதனை மறுக்க முடியாது. ஆனால், இதன் மூலம் முழுமையான நம்பிக்கையை எடப்பாடி பெற்றுவிட்டாரா? 

 

கூட்டணியிலிருந்து இவர்கள் வெளியே வந்ததால் பரிசுத்தமாகிவிட்டதா அ.தி.மு.க.? திமுக கூட்டணி கட்சிகள் பாஜகவை விமர்சிப்பது போல, அதிமுக விமர்சிக்குமா? பிரதமர் மோடியை நாங்கள் ஆதரிக்கவில்லை என சொல்வார்களா? பாஜக பாசிச கட்சி என விமர்சிக்க முடியுமா? எனவே, கொள்கை, சித்தாந்த ரீதியாக அல்லது நட்பு ரீதியாக கூட இந்த கூட்டணி பிரியவில்லை. ஊழலின் அடிப்படையில் பிரிந்திருக்கலாம். இதனால், மீண்டும் இருவரும் சேரவும் வாய்ப்புள்ளது. இன்றைக்கும் வானதி போன்றவர்கள் எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். தொடர்ந்து, பாஜக தனிக் கூட்டணி அமைத்தாலும் கிருஷ்ணசாமியை தவிர எவரும் செல்லமாட்டர்கள். இதேசமயம் சிலர் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிந்துவிடும் எனவும் சொல்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை அகில அளவில் இ.ந்.தி.யா. கூட்டணியில் இவர்கள் இருப்பதால், சிறு சேதாரம் கூட ஏற்பட வாய்ப்பில்லை. இருந்தும், அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் சற்று உயரும் என்பதில் ஐயமில்லை. இதனுடன், உண்மையான அ.திமு.க தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறொருவரை நியமித்தால் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். எனவே, சில வலதுசாரி அமைப்புகள் கூட அண்ணாமலை பேசியதை ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜக சவாரி செய்ய அதிமுக என்ற குதிரை தேவை என்பதே இதன் அர்த்தம். குதிரையை விரட்டிவிட்டு எப்படி சவாரி செய்யப் போகிறீர்கள். அண்ணாமலையும் இந்த விவகாரம் கூட்டணி முறிவு அளவு செல்லும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். அதேபோல், ஒரு அடிமைக்கும் சில எல்லைகள் உண்டு. அதற்கு மேல் அவர்கள் விலங்கை உடைத்துக் கொண்டு வரத்தான் செய்வார்கள். 

 

தொடர்ந்து, அதிமுக வென்றாலும் மத்தியில் மோடியை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதால் சிறுபான்மையினரின் வாக்குகள் விழுவதில் சந்தேகம் தான். இவர்களும், கொள்கை முரணாக வெளியே வரவில்லை. பாஜகவின் கொடுமை தாளாமல் வெளிவந்தனர். எனவே, இந்த பிளவு 2024 தேர்தலில் அ.தி.மு.க.விற்கு உதவும் என சொல்ல முடியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
ADMK Executive Committee, General Committee meeting date announcement

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii) படி, வருகின்ற செவ்வாய் கிழமை (26.12.2023) காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடி அரசு” - சு.வெங்கடேசன் எம்.பி.

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Modi government has staged another injustice Su Venkatesan MP

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி இருந்து. இந்த நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி இருந்தனர். மேலும் நன்னடத்தை குழுவின் இந்த பரிந்துரை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். 

Modi government has staged another injustice Su Venkatesan MP

இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்” எனப் பதிவிட்டுள்ளார்.