Skip to main content

பி.டி.ஆர். ஆடியோ; சிக்க வைத்த கூட்டணிக் கட்சி பிரமுகர்? 

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

PTR audio; Entangled alliance party leader?

 

தி.மு.க. மேலிடத்தின் கோபத்தைக் கிளறிய பி.டி.ஆரின் ஆடியோவுக்குக் காரணமானவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி என்கிற இண்டலெக்சுவல் திருடர் தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரத்தில் சிக்கியிருப்பவர். 

 

பி.டி.ஆரை குறி வைத்து, பா.ஜ.க. தரப்பு செய்த சதிதான் அந்த ஆடியோ என ஒட்டுமொத்த தி.மு.க.வும் நம்பி வந்த நிலையில், அதற்கு மாறாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிசிஸ்ட் பிரிவின் சேர்மனாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி என்பவர்தான் அந்த ஆடியோ வில்லன் எனத் தெரிய வந்திருக்கிறது. யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தின்னு இவரோட ஜாதகத்தை நாம் கிளறியபோது ஏகப்பட்ட திகீர் பகீர் தகவல்கள் நமக்குக் கிடைத்தது.

 

சர்வதேச லெவலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரவீன் சக்கரவர்த்தி சென்னையைச் சேர்ந்தவர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எப்படியோ ராஜஸ்தானில் உள்ள பிரபல பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்துவிட்டு, ஐ.பி.எம். மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய பெரிய சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள வார்ட்டன் ஸ்கூல் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள தாமஸ் வீசல் என்கிற நிதி முதலீட்டு நிறுவனத்தில் 2003-ல் சேர்ந்திருக்கார் சக்கரவர்த்தி. இவருடைய திறமையை நம்பிய அந்த நிறுவனம், ஒரு ரிசர்ச் டீமை உருவாக்கும் அசைன்மெண்ட்டோடும், ஏகப்பட்ட டாலர்களோடும் அவரை 2005-ல் மும்பைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. 

 

PTR audio; Entangled alliance party leader?

 

மும்பையில் சக்கரவர்த்தி தொடங்கிய அந்த ரிசர்ச் டீம் சற்று வளர்ந்த நிலையில், 2007-ல் அந்த முழு டீமையும் அழைத்துக் கொண்டு அப்படியே பி.என்.பி. பரிபாஸ் என்கிற பிரஞ்ச் நாட்டு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார். இதை அறிந்து ஷாக்கான தாமஸ் வீசல் நிறுவனம், சக்கரவர்த்தி தங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்கள் உட்பட தங்கள் நிறுவனத்தின் அனைத்து ரகசியங்களையும் திருடிச் சென்று விட்டதாகவும், இதனால் பல கோடி டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

 

சக்கரவர்த்தியோ, அந்த வழக்கை இந்தியாவுக்கு வந்து போடுங்கள். நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று பி.என்.பி. நிறுவன அட்வைசரான பிரபல சீனியர் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் மூலம் சொல்ல, அதை அந்த தாமஸ் வீசல் நிறுவனம் ஏற்கவில்லை.

 

இந்த வழக்கு ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, இதற்கு மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ‘நிதி ஆயோக்’ அமைத்த கமிட்டியுடன் சேர்ந்து, சில புராஜெக்டுகளிலும் பிரவீன் சக்கரவர்த்தி இறங்கி இருக்கிறாராம். இவ்வளவு ரணகளத்திற்குப் பிறகு, பா.ஜ.க.வின் எதிர்முகாமான காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிசிஸ்ட் பிரிவின் சேர்மனாக வந்து உட்கார்ந்திருக்கிறார் இந்த சக்கரவத்தி. இவருக்குச் சொந்தமாக மும்பையிலும் அரியானாவிலும் பங்களாக்கள் இருகின்றனவாம். இவருக்குப் பொழுதுபோக்கு என்றால், அங்கு ஆண், பெண் ஜர்னலிஸ்ட்டுகளை வரவழைத்து, அவர்கள் மூலம் பிரபல அரசியல் புள்ளிகளிடம் பேச வைத்து, அவர்கள் கக்கும் ஏடாகூடத் தகவல்களைப் பதிய வைப்பதுதானாம். அப்படி யாரோ ஒருவரை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் பேச வைத்துதான் அந்த வில்லங்க ஆடியோவை சக்கரவர்த்தி பதிவு செய்ததாகச் சொல்லுகிறார்கள்.

 

பிரவீன் சக்கரவர்த்தியின் இப்படிப்பட்ட தில்லாலங்கடி வேலைகள் பற்றி காங்கிரஸின் முக்கிய புள்ளிகள் பலருக்கும் தெரியும் என்கிறார்கள். இந்த பிரவீன் சக்கரவர்த்தியிடம், கூட்டணிக் கட்சியில் இருக்கும் ஒருவரைக் குறி வைத்து இப்படிச் செய்யலாமா? எனக் கேட்டபோது, ‘நான் அந்த ஆடியோவை வெளிப்படுத்தவில்லை. இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான பெகாசஸ் உளவுக் கருவியின் மூலம், மோடி அரசு என்னிடம் இருந்து இதைத் திருடி இருக்கலாம்’ என்று நம்ப முடியாத விளக்கத்தைத் தெரிவித்தாராம் சக்கரவர்த்தி. 

 

இந்த விவகாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கேரக்டரை டேமேஜ் பண்ணுவதற்காகத்தான், இதையெல்லாம் அவர் ஒரு பெண் ஜர்னலிஸ்ட்டிடம் பேசினார் என்று பொய்யாகத் திட்டமிட்டு செய்தியைப் பரப்பினாராம். இப்படிப்பட்ட ஒருவரை காங்கிரஸ் எப்படி விட்டு வைத்திருக்கிறது என்பது கேள்விக்குறி. காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள ராஜ்ய சபா சீட்டுகளில் ஒரு சீட்டைப் பெற பிரவீன் சக்கரவர்த்தி முயற்சித்து வருகிறாராம். இது குறித்தெல்லாம் தீர விசாரிக்காமல் தி.மு.க. தலைமை, இந்த விவகாரத்தில் எதனால் அவசர முடிவுகளை எடுத்தது? என்கிற டாக்கும் டெல்லி தரப்பில் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது.

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.