Skip to main content

இரண்டாம்கட்ட அகழாய்வுக்கு தயாராகும் பொற்பனைக்கோட்டை

Published on 02/04/2023 | Edited on 02/04/2023

 

தமிழ்நாட்டில் சங்ககால கோட்டைகளில் எஞ்சியுள்ள கோட்டைகளில் ஒன்று பொற்பனைக்கோட்டை. கொஞ்சமும் சிதிலமடையாத வட்டக்கோட்டை என்ற சிறப்பையும் பெற்றுள்ளது இந்த பொற்பனைக்கோட்டை. இந்த கோட்டையை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் பார்த்து வியந்திருந்த நிலையில் 2012 ம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கோட்டைப் பகுதிக்குள் உள்ள நீராவி குளத்தில் பொதுமக்கள் துணி துவைக்கும் கல்லை மீட்டு ஆய்வு செய்த போது கி.பி. 2ஆம் நூற்றாண்டு சங்க கால தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட கல்வெட்டு இருப்பதை பார்த்துள்ளனர்.

 

படைத் தலைவானக இருந்து வீரமரணம் அடைந்த 'கணங்குமரன்' உள்ளிட்ட வீரர்களுக்காக நடப்பட்ட நடுகல் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து பதிவு செய்தனர். இந்த நடுகல் பொற்பனைக்கோட்டை சங்ககால கோட்டை என்பதற்கான மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தை சேர்ந்த ஆய்வுக் குழுவினர் பல்வேறு இடங்களில் செய்த கள ஆய்வில் சங்ககால பிரமாண்ட வட்டக்கோட்டை சிதிலமடையாமல் உள்ளது.

 

கோட்டைக்கு வெளியே ஆயுதங்கள் செய்யும் உருக்கு ஆலைகளாக செயல்பட்ட சென்நாக்குழிகள் இருப்பதையும், ஈட்டி போன்ற ஆயுதங்கள் செய்ய பயன்படுத்திய சுடுமண் குழல்கள், உருக்கு கழிவுகள் இருப்பதையும் கள ஆய்வில் தெரிவித்ததுடன் இந்த கோட்டை மற்றும் அரண்மனை திடல் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் மூலம் வழக்கு தொடுத்து அகழாய்வுக்கான தீர்ப்பையும் பெற்றனர்.

 

தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி கிடைத்த நிலையில் பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் பல இடங்களை தேர்வு செய்து முதல்கட்டமாக கோட்டையின் மையத்தில் நீராவி குளத்திற்கு வடக்குப் பக்கம் அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சங்ககால பெரிய செங்கல்கள், செங்கல் நீர் போக்கி தடம், வட்ட சில்லு, அப்போரா உள்பட ஏராளமான பொருட்களை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்கள்.

 

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பொற்பனைக்கோட்டையை தொடர்ந்து அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து. தமிழ்நாடு அரசு மத்திய அரசு அனுமதிக்கு கோப்புகள் அனுப்பி அனுமதி கேட்டிருந்த நிலையில் அனுமதி கிடைத்துள்ளது. 2 ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு செய்வதற்கான இடம் தேர்வு செய்யும் கள ஆய்வு பல நாட்கள் நடந்துள்ளது. இறுதியாக நீராவி குளத்திற்கு நேர் மேற்கில் 100 மீட்டர் தூரத்தில் உயரமான மேட்டுப் பகுதியை தேர்வு செய்துள்ளனர்.

 

அதாவது சுமார் 50 ஏக்கர் பரப்பளவை சுற்றியுள்ள வட்டக்கோட்டைக்குள் நீராவி குளம் அருகில் பழைய அரண்மனை இருந்ததற்கான அடையாளமாக அகழி அமைப்புடன் சுற்றிலும் வாய்க்கால், மேட்டுப் பகுதியில்  பழமையான சங்ககால செங்கல்கள், பானை ஓடுகள், இரும்பு உருக்கு கழிவுகள் சிதறிக் கிடக்கிறது. இதனை இப்போதுவரை அப்பகுதி மக்கள் அரண்மனை திடல் என்றே கூறுகின்றனர். இந்த பகுதி அகழாய்விற்கு சரியான இடமாக தேர்வு செய்து சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டக்கோட்டையின் அடித்தளம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறியும் அகழாய்வுகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

 

2 வது அகழாய்வின் முதல் கட்டமாக அகழாய்வுக்கான இடம் தேர்வு முடிந்து சுத்தம் செய்யப்பட்டு அடையாளங்கள் வைக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த அகழாய்வில் சங்க கால தமிழர்களின் வரலாறும், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் பற்றி அறிய முடிமும் என்கின்றனர். அப்பகுதி ஊராட்சி நிர்வாகம், நில உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களின் முழு ஒத்துழைப்பும் கிடைப்பதால் அகழாய்வுப் பணிகளும் சிறப்பாக நடக்கும் என்கிறார்கள்.

 


 

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Next Story

'இது பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை' - முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 'This is a warning given to BJP's machinations' - Chief Minister M. K. Stalin's opinion

அண்மையில் ‘சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தவை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்’ என உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில், சண்டிகர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 30-01-24 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

30-01-24 அன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம்சாட்டியது. இந்நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வீடியோ ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தன.

இன்று நடைபெற்ற விசாரணைக்குப் பின், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. 'தனது அதிகார வரம்பை மீறித் தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார். நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது எனச் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை' எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

 'This is a warning given to BJP's machinations' - Chief Minister M. K. Stalin's opinion

அதில், சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும். மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவின் தந்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நீதிக்கும் சட்டத்திற்கும் கலங்கரை விளக்கமாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நியாயத்தை நிலை நிறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம். ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான இந்த வெற்றி, இந்திய ஜனநாயகத்திற்கு மகத்தான செய்தியாகும்' என்று தெரிவித்துள்ளார்.