Skip to main content

எங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்!

2012-ல் நடந்த நிர்பயா பாலியல் வழக்கில், குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டும்கூட, இன்று வரை குற்றவாளிகள் கருணை மனு, தூக்குக்கெதிராக மேல் முறையீடென ஒவ்வொரு கதவாகத் தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கோவில் நகரமான கும்பகோணத்தில் நான்கு இளைஞர்களால் டெல்லிப் பெண் சீரழிக்கப்பட்ட வழக்கில், தஞ்சாவூர் மகளிர் நீதி மன்றம் விரைந்து விசாரித்து, நான்கு இளைஞர்களுக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்திருப்பது பலரிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 

incidentஇதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான விசாரணைக் குழுவிலுள்ளவர்களிடம் கேட்டோம், "ஆதாரங்களை முறையாகச் சேகரித்து, குற்றவாளிகள் தப்பிவிடாமல் அரசுத் தரப்பின் மூலம் சமர்ப்பித்தோம். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது' என்றவர்கள் வழக்கின் பின்னணியை விவரித்தார்கள். "டெல்லியைச் சேர்ந்த 27 வயது கீர்த்தனாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிட்டி யூனியன் வங்கியில் வேலை கிடைத்தது. அதற்கான பயிற்சி கும்பகோணத்தில் அளிக்கப் படவிருந்ததால், டெல்லியிலிருந்து கடந்த 2018 டிச, 1-ஆம் தேதி இரவு 11:00 மணியளவில் கும்பகோணம் வந்திறங்கினார். அந்நேரம் லேசான மழையும் பெய்ததால் தடுமாறியபடி இரயில்வே நிலையத்திலிருந்து காமராஜர் சாலைக்கு வந்தார். அப்போது அந்தவழியாக வந்த ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி செல்ல வேண்டிய இடத்தைக் கூறினார். அந்தப் பெண் கொண்டுவந்த டிராவல் பேக்கும், போட்டுவந்த நகைகள்மீது ஏற்பட்ட ஆசையாலும் ஆட்டோவை போகவேண்டிய இடத்திற்கு விடாமல், வழியை மாற்றி நாச்சியார்கோயில் பை-பாஸ் பக்கமாக அழைத்துச் சென்றுள்ளார் டிரைவர்.
 

incidentகீர்த்தனாவிடம், அவள் வரவேண்டிய தங்கும்விடுதி பத்து நிமிடத்தில் வந்துவிடும் தொலைவுதான் என நண்பர்கள் கூறியிருந்ததால், ஆட்டோக்காரர் திசைமாறிச் செல்வதை தெரிந்துகொண்டு, "எங்கே போறீங்க?', என ஆங்கிலத்தில் கத்திக்கொண்டு, ஆட்டோவிலிருந்து பேக்கை தூக்கி கீழே போட்டு குதித்து விட்டார். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் நள்ளிரவு என்றுகூட பார்க்காமல் ஆள்நடமாட்டமே இல்லாத பகுதியில் கீர்த்தனாவை விட்டுச் சென்றுவிட்டார்.
 

policeகீர்த்தனா டிராலி பேக்கை இழுத்துக் கொண்டு முக்கால் கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கிறார். வழியில் மது அருந்திக்கொண்டிருந்த வசந்தகுமார், தினேஷ்குமார், புருஷோத்தமன் மூவரும் கீர்த்தனாவைப் பார்த்து, "எங்கே போகணும்' எனக் கேட்க... அந்த பெண்ணோ வெங்கட்ராமன் ஹோட்டல் பெயரைக் கூற, "இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே' எனக் கூறி, ஹோட்டலில் விடுவதாகச் சொல்லி முன்வந்தனர். பைக்கில் ஏற்றிக்கொண்டு, நாச்சியார்கோயில் பை-பாஸ் ரோட்டுக்குச் சென்ற காமக்கொடூர இளைஞர்கள் அந்த பெண்ணை ஆள் நடமாட்டமில்லாத புதர் மண்டிய பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இன்னொரு நண்பன் அன்பரசனுக்கும் போன்செய்து வரவழைத்து சீரழித்துள்ளனர்.

நடமாடமுடியாத நிலையிலிருந்த கீர்த்தனாவை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வந்து அந்தவழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஏற்றியுள்ளார் வசந்தகுமார். அந்த ஆட்டோக்காரரின் செல்போனை வாங்கி சக நண்பர்களிடம், "அந்தப் பெண்ணை கும்பகோணத்தில் விட்டுவிட்டு வருகிறேன்' என கூறியுள்ளார். அந்த செல்போன் நம்பர்தான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க துருப்புச்சீட்டாக அமைந்தது.


இறங்கும்போது கீர்த்தனா ஆட்டோவின் பதிவெண்ணை குறித்து வைத்துக்கொண்டார். விடுதி அறைக்குச் சென்றதும் உடல்நிலை சரியில்லாமல் போனதால், மறுநாள் தன்னுடைய தோழிகளிடம் நடந்த சம்பவங்களைக் கூறினார், அதன்பிறகே தகவல் வெளியே பரவியது.

ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து தாராசுரத்தைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநரை தூக்கி வந்து விசாரித்தோம். தன்னிடம் செல்போனை வாங்கி ஆட்டோவில் வந்த இளைஞன் பேசியதை டிரைவர் கூறியதும், அந்த செல்போன் யாருக்கு சென்றது என்பதை வைத்து துப்புத் துலக்கி, கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த தினேஷ்குமார், மோதிலால் தெருவைச் சேர்ந்த வசந்த்குமார், மூப்பனார் நகர் புருஷோத்தமன், ஹலிமா நகர் அன்பரசன் ஆகிய நான்குபேரையும் தூக்கிவந்து விசாரித்தோம். அதோடு நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆட்டோக்காரர் குருமூர்த்தி மீதும் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தோம்''’என்கிறார்கள்.


வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, "அரசுத் தரப்பு சாட்சியங்கள் சந்தேகமின்றி நிரூபணம் செய்யப்பட்டதால் 5 பேரும் குற்றவாளி'' என தீர்ப்பளித்தார்.

தனி வேனில் திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்ட இளைஞர்களிடம் நீதிபதி, "உங்கள் மீது தவறு உறுதியாகிறதே… ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா'' என கேட்ட பின், குற்றவாளிகளான தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய நால்வருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனையும், தலா 65 ஆயிரம் அபராதமும் விதித்தார். ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

"கீர்த்தனா தஞ்சாவூருக்கு நான்குமுறை நேரடியாக வந்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்ததும், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைத்ததும் சிறப்பான தீர்ப்பு வழங்க துணைபுரிந்திருக்கிறது. கீர்த்தனாவின் தந்தை டெல்லியில் மிகப்பெரிய தொழிலதிபரானாலும், விசாரணைக்கு ஒத்துழைத்து அடையாள அணி வகுப்பில் குற்றவாளிகளை அடையாளம்காட்ட அழைத்துவந்தார். பாலியல் கொடுமையில் பாதிக்கப்படுபவர்கள் இத்தகைய துணிச்சலோடு இருந்தால் குற்றவாளிகள் நிச்சயம் தப்பமுடியாது' என்கிறார் அரசு வழக்கறிஞர் தேன்மொழி.

இது ஒருபுறமிருக்க, 2019 பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி விளக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பூதம்போல் ஒரு பிரமாண்டமான பாலியல் ஸ்கேம் வெளிவந்தது. பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவியொருவர், சபரி ராஜன் மற்றும் நண்பர்கள் மீது கொடுத்த புகார்தான் அதற்குத் தூண்டுதலாக அமைந்தது. புகார் கொடுத்த மறுநாள் புகார்கொடுத்தவரின் சகோதரரை திருநாவுக்கரசு, சபரியின் நண்பர்கள் தாக்கினர். இதையடுத்து திருநாவுக்கரசு தவிர்த்த சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் என்ற மூவரையும் காவல்துறை கைதுசெய்தது. பின் மணிவண்ணன் என்பவர் கூடுதலாக இவ்வழக்கில் இணைக்கப்பட்டார். புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் "பார்' நாகராஜ் மட்டும் கைது செய்யப்படாமலிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தப் பிரச்சனையில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வீடியோ எடுத்து மிரட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. நக்கீரன் வலைத்தளத்தில் "அண்ணா என்னை விட்ருங்கண்ணா' என பெண்ணொருவர் கெஞ்சும் வீடியோ வெளியாகியபின்பே மாநிலம்தழுவிய கவனம் இவ்வழக்குக்குக் கிடைத்தது.

மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு போராட ஆரம்பித்ததும் வழக்கை விசாரித்த கோவை டி.எஸ்.பி. பாண்டியராஜன், "இந்த வழக்கிலுள்ளவர்கள் யாருக்கும் அரசியல் கட்சியோடு தொடர்பில்லை'' என தன்னிச்சையாக ஊடகங்களிடம் விளக்கமளித்தார். இதையடுத்து இந்த வழக்கை இவர் தலைமையில் விசாரணை செய்யக்கூடாதென கண்டனம் கிளம்பியது.

ஊடகங்களிடம் பேசும்போது, புகார் அளித்தவரின் பெயர், அவரது சகோதரர் பெயர், அவர் படித்த கல்லூரி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு, புகார் கொடுக்க முன்வரும் பெண்களின் தைரியத்தை மட்டுப்படுத்தினார் என இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. முதல் தகவலறிக்கையிலும் புகார் கொடுத்த பெண்ணின் அடையாளங்களையும் விவரங்களையும் வெளியிட்டது, நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்படும் அளவுக்குப் போனது.

இதையடுத்து இந்த வழக்கு மார்ச் 12-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. எனினும், சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்தவேண்டுமென பலராலும் கோரிக்கைவிடுக்கப்பட்டது. தமிழக அரசும் மார்ச் 13-ஆம் தேதியே வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தது. ஆனாலும் "மத்தியப் புலனாய்வுத் துறை வழக்கை எடுக்க சற்று தாமதமாகும். அதுவரை மாநில புலனாய்வுத்துறையே இந்த வழக்கை விசாரிக்கு மென ஜாஃபர் சேட் அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் ஏப்ரல் 26 ஆம் தேதி சி.பி.ஐ. முறையாக இந்த வழக்கைக் கையிலெடுத்தது.

2019, ஏப்ரல் மாதம் பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்ட நால்வர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. ஆவணங்கள் சரிவர இல்லாததால் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய இருவரையும் நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்தது.

2019 நவம்பரில், மகளிர் அமைப்பொன்று பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையைக் கண்காணிக்கும் எனவும் ஒவ்வொரு கட்ட விசாரணையின் முடிவிலும் வழக்கில் ஏற்படும் முன்னேற்றத்தை உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டுமெனவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரே மாநிலத்தில் இரு வேறு பாலியல் சம்பவங்களில், ஒன்றில் 14 மாதங்களில் விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாகிவிட்டது. மற்ற வழக்கிலோ, வழக்கு விசாரணை நிலையிலேயே இருக்கிறது. கும்பகோணம் வழக்கில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்கை முறையாகப் பதிவுசெய்து, ஆதாரங்களை முறையாகச் சேகரித்து நீதிமன்றத்தில் வழக்கை சரிவர நடத்தி சாதித்துக் காட்டிவிட்டார். பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஆளுந்தரப்பினர் தொடர்பு இருப்பதால், வழக்கை யார் நடத்துவது என்பதிலே முதலில் குழப்பம். வழக்குப் பதியும் உயரதிகாரியே பாதிக்கப்பட்டவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்காமல் வெளிப்படுத்துகிறார். ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரபலத்தின் மகன் மீதான நடவடிக்கை தடைபடுகிறது.

இத்தனை குளறுபடிகளுக்கு அப்பால், வழக்கு விசாரணையின்போது ஆதாரங்கள் எப்படி சமர்ப்பிக்கப்படப் போகின்றன, சாட்சிகள் பல்டியடிக்குமா, சி.பி.ஐ. எப்படி சாதிக்கப்போகிறது என பல்வேறு விடைதெரியாத கேள்விகள் எழுகின்றன.

-க.செல்வகுமார், க.சுப்பிரமணியன்


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்