Skip to main content

"நீங்கள் ஜெ.வைப் போல செயல்பட வேண்டும்" - எடப்பாடி பழனிச்சாமியை ட்ரிகர் பண்ணும் அதிகாரிகள்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுகவில் அமைச்சர்கள் யார் யாரென வெளியே தெரியாமல் இருந்தது. எந்த ஒரு முடிவையும் அவர்தான் எடுப்பார், எந்த ஒரு அறிவிப்பையும் அவர்தான் வெளியிடுவார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு பல அமைச்சர்கள் வெளியே பேசத் தொடங்கினர். அதில், செல்லூர் ராஜு, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தங்கள் பேச்சாலேயே ஃபேமஸாகவும் இருக்கின்றனர். பேசுவது ஒரு புறம் என்றால் வசூல் நடவடிக்கைகள், ஆட்சி நடவடிக்கைகளிலும் கூட அமைச்சர்கள் அதிக சுதந்திரத்துடன் செயல்படுகின்றனர். மக்களாட்சியில் இதுதான் நியாயம் என்றாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதில் முழு சம்மதம் இல்லையாம்.

இதுகுறித்து, இரு போலீஸ் அதிகாரிகளை ஆலோசனை கலந்தார். எடப்பாடியுடன் ஆலோசனை செய்த டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தியும், "நீங்கள் ஜெ.வைப் போல செயல்பட வேண்டும். ஜெ. ஒவ்வொரு இடத்திலும் இரண்டுபேரை ஆதரிப்பார். ஒருவரை வீழ்த்துவார். மற்றொருவர் அந்த இடத்திற்கு வருவார். அதுபோல் நீங்கள் யாருக்கும் மிகவும் நெருக்கமானவர் என காட்டிக் கொள்ளாதீர்கள். ஒருவரை ஆதரிக்கும் அதே நேரம் அவர்களுக்கு எதிராகவும் ஒரு சில காரியங்களை செய்யுங்கள். உங்களுக்கும் ஜெ.வுக்கும் வித்தியாசம் இல்லை. நீங்கள்தான் அ.தி.மு.க.வின் சர்வாதிகாரி. எனவே உங்களை சுற்றியிருக்கும் வட்டத்தை உடைத்தெறியுங்கள்'' என்றனர்.


 

eps


அதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி தனக்கு நிழல்போல இருந்த சேலம் இளங்கோவனுக்கு செக் வைத்தார். சேலம் துணை கமிஷனர் சுப்புலட்சுமியை சென்னைக்கு மாற்றம் செய்தார். "சுப்புலட்சுமியை ஏன் மாற்றினீர்கள்' என எடப்பாடியிடம் கேட்ட இளங்கோவனை எடப்பாடி மதிக்கவேயில்லை.

அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரகுருவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்தார். விழுப்புரம் என்றாலே சி.வி.சண்முகம் என்பதை மாற்றி குமரகுரு சொன்னால் அரசு வேலைகள் நடக்கும் என கொண்டு வந்தார். எடப்பாடியின் திடீர் ஆதரவால் சி.வி.சண்முகத்திற்கு இணையாக உயர்ந்த குமரகுருவின் வளர்ச்சியை எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணி, வேலுமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஜெ. உயிருடன் இருந்தபோது வேலுமணி, தங்கமணி ஆகியோர், "குமரகுரு கவுண்டர்களுக்கு எதிராக பேசினார்' என அவரது மா.செ. பதவியை எடப்பாடியுடன் சேர்ந்து பறிக்க வைத்தனர். அப்படிப்பட்ட எடப்பாடி குமரகுருக்கு எப்படி ஆதரவு தருகிறார் எனத் தெரியாமல் எடப்பாடியிடம் புலம்பினர். "அது அப்படித்தான் ஒன்றும் செய்ய முடியாது' என எடப்பாடி சொல்லிவிட்டார்.

இப்படி அ.தி.மு.க.வினர் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி செய்யும் எடப்பாடி அடுத்தகட்டமாக பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே மோசமாகி வரும் உறவை சீர் செய்ய விரும்பினார். அதற்காக திருப்பதிக்கு வந்த வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது "சமீபத்தில் நடைபெற்ற குட்கா ரெய்டு போன்ற மத்திய அரசின் தாக்குதல்களை குறைக்க வேண்டும். கூட்டணிக்கு நாங்கள் தயார். ரஜினி வந்தால் என்ன செய்வது' என்பது பற்றி யெல்லாம் எடப்பாடி பேசினார். எடப்பாடி வெங்கையா நாயுடு சந்திப்பை தொடர்ந்து வேலுமணியும் தங்கமணியும் டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர்.

பத்திரிகை விருது வழங்கும் விழாவுக்குச் சென்ற வேலுமணி அங்கேயே தங்க வைக்கப்பட்டார். பா.ஜ.க.வின் முக்கியமான தலைவரான ஜெட்லியுடன் தனது அமைச்சர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த கூட்டணி பேச்சுகள் இனியும் தொடரும் என்கிறது டெல்லி வட்டாரம். இப்படி சகலவிதத்திலும் தன் கை ஓங்கியிருக்க வழி வகை செய்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.