chennai

நாங்கள்

உயிருக்கு அஞ்சி

Advertisment

ஓடிக்கொண்டிருக்கிறோம்;

நீங்களும்

இரவு பகல் பார்க்காமல்

Advertisment

ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்

எங்கள் ஆபத்திலிருந்தும்

லாபம் திரட்ட

விதவிதப் புன்னகைகளோடு!

வைரஸ்களோடு

வாழப் பழகும் படி

எங்களுக்குப் போதிக்கும்

மானுடக்காவலர்களே..(?)

உயரத்தில் இருந்து கொண்டு

உபதேசிக்கும் நீங்கள்

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.

வைரஸின் சுயம்வரத்தில்

அது தேர்ந்தெடுக்கும்

மணமகன்களாக

நாங்கள் மட்டுமல்ல;

நீங்களும் இருக்கலாம்.

வாழ்க்கை மேடையின்

நீள அகலம் தெரியாமல்

கண்முடித்தனமாக ஆடும்

நீங்கள்;

உங்கள் காலிடறும் இடம்

எதுவென

அடையாளம் காண்பீரா?

உறவுகளின் பேரில்

ஒப்பந்தம் எடுத்து

நீங்கள் கட்டும் கட்டிடங்களில்

இப்போது வேண்டுமானால்

நதிகள் மூச்சுத்திணறலாம்.

ஊழல் நதிகளுக்கும்

இதுவரும் என்பதை

இதயம் இருந்தால்

எண்ணிப் பாருங்கள்.

துயரமாகத்தான் இருக்கிறது;

தூர் வாருவதாக எண்ணிப்

புதைகுழிகளைத்

தோண்டாதீர்கள்.

அணைகள் கட்டுவதற்கு முன்

முதலில் மனித உயிர்களுக்கு

அணைகட்ட வழி தேடுங்கள்.

உங்கள் திறப்பு விழா மோகம்

கல்லறைகளுக்கு

ரிப்பன் வெட்டுவதில் போய்

முடிவதாக இருக்கவேண்டாம்.

வாழ்க்கை வேண்டுமானால்

வேறு வேறாக இருக்கலாம்

உங்களுக்கும் எங்களுக்கும்

மரணம் ஒன்றுதான்.

நம்புங்கள்

கடைசி வாகனம்

எல்லோருக்கும்

ஒரே சாயலில்தான்.

நீங்கள் பறந்து பறந்து தேடும்

உங்கள் கரன்ஸிக்கட்டுகள்

உங்கள் கடைசி நேரத்துக்கான

ஆக்சிஜனை

சுரக்கப் போவதில்லை.

நீங்கள் இருக்கும் போது

எங்கள் வியர்வை

உங்களுக்கு இனிக்கலாம்.

படுத்துவிட்டால்

உங்களுக்கு ஊற்றப்படும்

பாலும் கசப்புதான்.

மறந்துவிடாதீர்கள்;

கிருமிகளின் முன்

உங்கள் பதவியும்

படாடோபமும்

செல்லாக் காசைவிடவும்

செல்லாக் காசுதான்.

நீங்கள் உங்கள் சந்ததிகளுக்கு

ஆஸ்தி சேர்ப்பதாக நினைத்து

அஸ்த்தி சேர்க்கும் நிலைக்குச்

சென்றுவிடாதீர்கள்.

புரிந்துகொள்ளுங்கள்

மரணத்தின் வலி

அன்றாடம் செத்துப்பிழைக்கும்

எங்களை விட

உங்களுக்குத்தான் அதிகமாக

இருக்கும்.

*