Skip to main content

பாமக அரசியல் வன்னியர்கள் மத்தியில் எடுபடாது என்னும் அச்சத்தில்... : மு. ஞானமூர்த்தி 

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அங்கு திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தியை தொடர்பு கொண்டோம்.

 

m.gnanamoorthy


 

விக்கிரவாண்டியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
 

பிரகாசமாக உள்ளது. 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் கே. ராதாமணி 63757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆர். வேலு 56845 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். திமுகவுக்கு 6912 வாக்குகள் கூடுதல். இப்போது தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கும் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு, இட ஒக்கீட்டு போராளிகளுக்கு நினைவு மண்டபம், ஏ. ஜி. அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்திருப்பது வாக்காளர்களின் கூடுதல் ஆதரவை திமுக பெற்றுள்ளது. 


 

 

ஸ்டாலினுக்கு திடீரென்று வன்னியர்கள் மீது பாசம் வந்துவிட்டது. ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் ஸ்டாலினின் அறிவிப்பு விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வெளியிட்ட அறிவிப்பு. தேர்தல் முடிந்தவுடன் அதை அவர் மறந்துவிடுவார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாரே?
 

அன்புமணிக்குதான் அனிமேஷன் ஆம்னீஷியா வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததும் பொங்கி எழுந்த ராமதாஸும் அன்புமணியும் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக உள்ஒதுக்கீடு தருவதாக அறிவித்திருக்கிறார்களே, நீங்கள் வன்னியர்களுக்கு 17% தனி இடஒதுக்கீடு தருவோம் என அறிவியுங்கள் என்று கேட்டிருக்கலாமே? எடப்பாடியை நிருபர்கள் இது சம்பந்தமாக கேட்டபோது அவர் மழுப்பலாக நழுவி விட்டாரே, இது தெரியாதா அன்புமணிக்கு? இன்றுவரை ஏன் எடப்பாடியை ராமதாஸ், அன்புமணி கேட்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதி மக்களை பொறுத்தவரை வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு திமுக தரும் என முக. ஸ்டாலின் அறிவித்ததும் அதை பெரும்பான்மை வன்னியர்கள் மகிழ்வுடன் வரவேற்றுள்ளார்கள். திமுக இடஒதுக்கீடு கொடுத்துவிட்டால் பாமக அரசியல் வன்னியர்கள் மத்தியில் எடுபடாது என்னும் அச்சத்தில் அப்பாவும், மகனும் லாபி செய்கிறார்கள். 
 

விக்கிரவாண்டியில் ஏற்கனவே தி.மு.க. வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்திருப்பதால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே...
 

நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் வைத்த தவறான கூட்டணியை மக்கள்  எப்படி நிராகரித்தார்களோ அதே எதிர்ப்பலை இப்போதும் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ளது.  மேலும் வன்னியர் சங்கம் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் அ.தி.மு.க. நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த 21 குடும்பங்களுக்கு பா.ம.க. எதுவும் செய்யவில்லை என்கிற கோபம் இங்குள்ள வன்னியர்களிடம் தெரிகிறது. மேலும் மத்திய அரசின் தமிழகம் பாதிக்கும் திட்டங்களுக்கு துணை போகும் அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் புறக்கணிக்க முன்வந்துள்ளனர். 


 

 

15க்கும் மேற்பட்ட அதிமுக அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக பணியாற்றி வருகிறார்களே..

 

அமைச்சர்கள் செல்லும் இடத்திலெல்லாம் மக்கள் எதிர்க்கிறார்கள். குடிநீர் இல்லை, 100 நாள் வேலையை குறைத்து விட்டீர்கள், முதியோர் உதவித் தொகையை நிறுத்திவிட்டீர்கள் என பல குற்றச்சாட்டுகள் அமைச்சர்கள் மீது சுமத்துகிறார்கள். அண்மையில் சி.வி. சண்முகம் மக்களின் எதிர்ப்புக்கு பதில் சொல்ல முடியாமல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துவிட்டு திரும்பியுள்ளார். நீட் தேர்வுக்கு துணைபோவது, தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன வேலைகளில் வடநாட்டவரை நியமித்தது, தமிழ் நாட்டில் இந்தியை கொண்டுவர முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு துணைபோவது, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துதல் என பல்வேறு எதிர்ப்பலைகள் அமைச்சர்கள் மீது ஏற்ப்பட்டுள்ளது. 

 

m.gnanamoorthy



நா.புகழேந்தி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்?

நா. புகழேந்தி 1996ம் ஆண்டிலும் அவரது மருமகள் 2006ம் ஆண்டிலும் கோலியனூர் ஒன்றியப் பெருந்தலைவர்களாக தேர்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளனர். மக்களிடம் நன்கு பழகும் எளிமையான மனிதர். நடைபெறும் இடைத்தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.


 

சார்ந்த செய்திகள்