Skip to main content

பாலம் போட்ட பா.ம.க... பதவி விலகிய வி.பி.சிங்... கொள்ளை ராணி நாடாளுமன்றத்தில் நுழைந்த வரலாறு...

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

பொள்ளாச்சி கொடூரம், காசியின் காமவேட்டை, சிறுமி ஹாசினி துயரம், டெல்லி நிர்பயா கொலை உள்ளிட்ட எந்தச் செய்தியைக் கேட்டாலும் ஒரு பொதுஜன மனநிலை எப்படி இருக்கும்? குழந்தைகளின், பெண்களின் ரத்தம் குடித்த அந்த ஓநாய்களை நடுரோட்டில் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொந்தளிக்கும். அது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் அதுதான் சரியான நீதி என பொதுஜனம் புலம்பித் தவிக்கும். அதைத்தான் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்தார். தன் உடலைத் தின்ற 22 பேரை நடுரோட்டில் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டார். அவரை பொதுஜனங்கள் ‘துர்கை’யாக வழிபட்டனர். அவர்தான், தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட கொள்ளை ராணி - பெண் அரசியல்வாதி- வெற்றிகரமான இந்திய எம்.பி…. ‘பூலான் தேவி’.

 

யார் அந்தப் பூலான் தேவி?

 

இந்திய நாட்டில் பெண்ணாகப் பிறந்தாலே பல சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தால் சொல்லவா வேண்டும்... இன்னும் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் வசதியற்ற படகோட்டியின் மகளாக பிறந்தால் எப்படி இருக்கும்? மேற்சொன்ன சிந்தனைகளின் உயிர் உருவமே பூலான் தேவி.

 

1963-இல் உத்திரப்பிரதேசத்தின் கங்கை நதிக்கு உணவாகாமல் தப்பிப் பிறந்த பெண் சிசுக்களில் அவரும் ஒருவர். பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால், தந்தையால் வெறுக்கப்பட்டவர். 11 வயதில் திருமணத்திற்குத் தயார் செய்யப்பட்ட பூலான், தன்னை விட 20 வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள அப்பாவோடு காலமும் கட்டளையிட்டது. அப்போது திருமணமான குழந்தைகள் வயது வரும் வரை தந்தை வீட்டில்தான் இருப்பர். ஆனால், அவர் கணவன் புட்டிலாலோ திருமணம் ஆனதும் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமி என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தல் தருகிறார். மிச்ச நேரங்களில் வீட்டு வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார் பூலான். இதனால் மனமுடைந்த பூலான் கணவனுக்குத் தெரியாமல் தன் தந்தை வீட்டுக்கு வந்துவிடுகிறார்.

 

சுரண்டிய சொந்தங்கள்:

 

கணவனுக்குத் தெரியாமல் வீட்டுக்கு வந்த பூலானை தந்தை ஏற்க மறுக்கிறார். இருப்பினும், ஊர் பெரியவர்களின் அறிவுறுத்தல் படி சிலகாலம் பெரியப்பா கருதயாளின் வீட்டில் தங்கவைக்கப் படுகிறார் பூலான். ஆனால், எல்லாவற்றையும் கேள்வி கேட்டுப் பழகிய பூலான் தனது தந்தையின் நிலத்தை அபகரித்துள்ள பெரியப்பாவிடம் நிலத்தைக் கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெரியப்பா கருதயாள், பூலானை வீட்டை விட்டுத் துரத்துகிறார். மீண்டும் வீட்டிற்குச் சென்றால் பெற்றோர் மனம் வருந்துவர் என்பதால் மறுபடியும் கணவன் புட்டிலால் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால், கணவன் இன்னொரு மனைவியோடு குடும்பம் நடத்துவதைப் பார்த்ததும் கையறு நிலையில், மீண்டும் தன் கூட்டிற்கு வந்தடைகிறது அந்தப் பெண் புறா.

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

 

வீட்டிற்கு வந்த பிறகும் தந்தை நிலத்தை அபகரித்த பெரியப்பாவை எதிர்த்து அவ்வப்போது பேசியும், போராடியும் வந்தார் பூலான். எப்படியாவது தங்கள் நிலத்தை மீட்க வேண்டும் என நினைத்த பூலானின் செயல்பாடுகள் பெரியப்பாவையும் அவர் மகனையும் தூங்க விடாமல் செய்தது. இந்நிலையில், மாமா என்ற உறவு முறையில் வீட்டிற்குள் நுழைந்தது வேறொரு பிரச்சனை. பூலானின் மாமா அடிக்கடி பூலானை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தினார். பூலானின் வயதான தந்தையால் இதெல்லாம் தட்டிக் கேட்க முடியவில்லை. உடன் பிறந்த நான்கு சகோதரிகளுக்கும் ஒரு சின்ன தம்பிக்கும் இந்தக் கொடுமைகளை எதிர்க்கும் வலு போதுமானதாக இல்லை.

 

மறுமணமும் திருட்டுப் பழியும் :

 

நிலப் பிரச்சனையைக் மீண்டும் மீண்டும் கிளரும் பூலான் மீது பெரியப்பா குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்தனர். அவரைப் பழி தீர்க்க சமயம் பார்த்தனர். இந்நிலையில் கைலாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட பூலான், பூலான் கைலாஷாக மாறினார். திருமணம் முடிந்ததும் இனி கைலாஷ்தான் எல்லாம் என நினைத்தார். சந்தோஷமான எதிர்கால வாழ்க்கையை அடிமனதில் அசைபோடத் தொடங்கினார் பூலான். ஆனால், கையைக் கசக்கிக்கொண்டு நம்பியாரைப் போல கொடூரத்திட்டம் தீட்டியது, விதி. 

 

பூலானின் நெருக்கடிக்கு முடிவுகட்ட நினைத்த பெரியப்பா கருதயாளின் மகன், தன் தங்கக் கடிகாரத்தைத் திருடி விட்டதாக போலீசில் பொய்ப் புகார் கொடுத்தார். ஏன் என்று கேட்க நாதியில்லாத பூலானை போலீஸ் கைது செய்கிறது. ஆம் நீங்கள் யோசித்தது சரிதான், போலீஸும் அவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகிறது. பிறகு நீதிபதியின் கருணையால் அவர் விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வரும் பூலானை, ஊர் மக்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். வேறுவழி தெரியாத கைலாஷ் தன் கொள்ளைக்கார நண்பர்களுடன் மனைவி பூலானை சில காலம் அனுப்ப முடிவு எடுக்கிறார். நம்பி வந்த கணவனின் கைவிரிப்பு பூலானுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. கொள்ளையர்களுடன் செல்லும் முடிவில் பூலானுக்குச் சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அவரின் உடன்பாடுகள் எல்லாம் ஒருபோதும் கேட்கப்பட்டதே இல்லை.

 

கொள்ளைக் காதல் :

 

கைலாஷோடு இருந்த போதே பூலானின் மீது ஆசை கொண்டிருந்தான் கொள்ளை நண்பன் பாபு குஜ்ஜர். இந்நிலையில் கைலாஷ், பூலானை அவனோடு அனுப்பி வைக்க, பாபுவின் கொரூர மனம் விழித்துக்கொண்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவன்தான், பாபு குஜ்ஜர். பாபு குஜ்ஜருக்கு அடுத்த இடத்தில் இருந்தவன் விக்ரம் மல்லா. பூலானை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று வீசிவிட திட்டமிட்டு, காய் நகர்த்தினான் பாபு. ஆனால் இந்தத் திட்டம் அறிந்து பாபு குஜ்ஜரோடு சண்டையிட்டான் விக்ரம் மல்லா. சண்டையில் பாபு கொல்லப்பட்டான். விளைவு, விக்ரம் மல்லா கொள்ளைக் கும்பலின் தலைவன் ஆனான்.

 

சாதி பார்க்காமல் கொள்ளையடித்தனர். ஆனால், கொள்ளையர்களுக்குள் சாதி பார்த்தனர். கொல்லப்பட்ட பாபு குஜ்ஜர் உயர்சாதியாகக் கருதப்பட்ட தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர். கொலை செய்த விக்ரம் தாழ்த்தப்பட்ட மல்லா இனத்தைச் சேர்ந்தவர். அவ்வளவு தான், கூட்டத்தின் ஒரு பகுதி விக்ரமைக் கொலை செய்யும் சந்தர்ப்பத்திற்குச் சமயம் பார்த்தது. இந்நிலையில், விக்ரம் மல்லா- பூலான் தேவியைத் திருமணம் செய்து கொள்கிறான். அதுவரை தனக்கு யாரும் வழங்காத சுயமரியாதையை விக்ரம் அளித்தது பூலானுக்குப் பிடித்திருந்தது. குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல் என சகல வித்தைகளையும் கற்று தேர்ந்த கொள்ளை ராணியாக உருவெடுத்தார், பூலான்.  

 

புயலில் சிக்கிய பூச்செடி:

 

பூலான் இந்தக் கொள்ளை வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், அவருக்கு இப்போது இதுதான் ஒரே பாதுகாப்பு. கொள்ளைக் கூட்டத் தலைவன் விக்ரம் மல்லாவின் மனைவியாகக் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தார், பூலான் தேவி. அவரைக் கண்டு அனைவரும் மரியாதை தந்தனர். ஆண்கள் அவரை மதித்தனர். சில காலம் நீடித்தது இந்தச் சுயமரியாதை வாழ்க்கை. ஆனால், மீண்டும் கையைக் கசிக்கிக்கொண்டு புதுத் திட்டத்தோடு வந்து நின்றது விதி. 

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

 

1980 ஆகஸ்ட் 13-இல் கொள்ளைக் கூட்டத் தலைவன் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். பூலானை, உயர்சாதி கூட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ‘பேமாய்’ என்னும் கிராமத்திற்குக் கடத்திச் சென்றனர். மீண்டும் பாலியல் துன்புறுத்தல்கள், அடி, உதை, அவமானம். கிட்டத்தட்ட 3 வாரங்கள் தொடர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார் பூலான். ‘பேமாய்’ கிராமத்தில் உள்ள வேறு சில உயர்சாதி கழுகுகளும் அவரின் உடலைச் சுற்றி வட்டமிட்டன. தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளையும் தாங்கிக்கொண்ட பூலான், தனக்கான நீதியைத் தானே எழுதத் துணிந்தார். இப்போது, அவர்களைப் பழி தீர்ப்பது மட்டும்தான் பூலானின் ஒற்றை நோக்கம். வாய்ப்பு வசப்பட்டது, தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் உதவ அங்கிருந்து தப்பினார் பூலான்.

 

பதவி விலகிய வி.பி.சிங்:

 

உடலும் மனமும் வலுவிழந்த நிலையில், வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகலாம் என நினைக்கும் சராசரிப் பெண் அல்ல பூலான் தேவி. தப்பித்த சில நாட்களிலேயே விக்ரம் மல்லாவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கிறார். 14 ஃபிப்ரவரி 1981,  தன் உடலைக் கொத்திய கழுகுகளையும், கடித்துக் குதறிய ஓநாய்களையும் பழி தீர்க்கும் வெறியோடு ‘பேமாய்’ கிராமத்தில் தடம் பதித்தார். அவ்வளவாக அந்த உருவங்கள் அவருக்கு நியாபகம் இல்லை, விசாரித்ததில் அகப்பட்ட 22 ஆண்களை வரிசையாக நிற்கவைத்தார். தோட்டாக்கள் சீறித் தெறித்தது. இந்தியாவே கொந்தளித்தது. காரணம் கொலை செய்யப்பட்ட 22 பேரும் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த ஆண்கள். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாய் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விளைவு, அன்றைய உத்திரப்பிரதேச முதல்வர் வி.பி.சிங் பதவி விலகினார்.

 

பூலானின் தலைக்கு 2 லட்சம் விலை வைத்துத் தேடியது அரசு. சில காலம் மத்திய பிரதேச மற்றும் உத்திரப்பிரதேச அரசுகளுக்குப் போக்கு காட்டிக் கொண்டிருந்த பூலானுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் ஆதரவாகத் துணை நின்றனர். தங்களைக் காக்கவந்த “துர்கா தேவி” என பூலானை வணங்கினர். வட மாநிலங்கள் முழுதும் அரசுக்குப் பெரும் தலைவலியாக இருக்கும் பூலானை சரணடையவைக்க அரசுத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர் போராட்டங்களால் சற்று உடல் நலிவுற்று இருந்தார் பூலான். இந்நிலையில், போலீஸ் தேடுதலால் அங்கும் இங்கும் ஓட முடியாத நிலையில் இருந்த பூலான் அரசின் சமரச போக்கைப் பயன்படுத்தி சரண் அடைந்து நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்ப நினைத்தார். “யானை படுத்தாலும் குதிரை மட்டம்” என்பதுபோல சரணடைவதற்குச் சில நிபந்தனைகளை விதித்தார் பூலான்.

 

வெளிவந்த பெண் சிங்கம்:

 

‘கை விலங்கு போடக் கூடாது’, ‘தனக்கோ தன் கூட்டத்தினருக்கோ தூக்குத் தண்டனை வழங்கக்கூடாது’, ‘தனி நீதிமன்ற விசாரணை அமைக்க வேண்டும்’, ‘8 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும்’, ‘எனக்கு உத்திரப்பிரதேச போலீசாரின் மீது நம்பிக்கை இல்லை, அதனால் நான் மத்தியப் பிரதேசத்தில் சரணடைய அனுமதியளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட அவரின் பல்வேறு நிபந்தனைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

 

1983-இல் மத்தியப்பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் பூலான் தேவி சரணடைய மேடை அமைக்கப்பட்டது. மேடையில் தேசப்பிதா காந்தியின் புகைப்படமும், கடவுள் துர்க்கா தேவியின் புகைப்படமும் இருக்கிறது. பூலான் சரணடையும் நிகழ்ச்சியைக் காண அனைத்துப் பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். காரணம், பூலானின் பெயர் அறிமுகமான அளவுக்கு அவரின் உருவம் அறிமுகம் இல்லாமல் இருந்தது.

 

தலையைச் சுற்றி சிவப்புத் துணி, காக்கி உடை, இடுப்பில் பெல்ட், முதுகில் பெரிய துப்பாக்கி எனக் காட்சியளித்தார் பூலான். வட மாநிலங்களையே தன் செய்கையால் கொலை நடுங்கச் செய்த 26 வயதே ஆன பூலானின் உயரம் 4 அடி 11 அங்குலம் மட்டுமே. பூலானும் அவரின் படையும் துப்பாக்கியைக் கைவிட்டு முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் சரணடைந்தனர்.   

 

பாலம் போட்ட பா.ம.க.:

 

எத்தனை முறை விதியின் வசத்தால் வீழ்ந்தாலும், பூலான் ஒருபோதும் விதிக்கு அஞ்சியதில்லை. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் புதிய அத்தியாயத்தைத் தேடியே அவரின் சிறகுகள் விரியும். இந்த முறையும் அப்படித்தான் பூலானின் விடுதலை தாமதிக்கப்பட மத்திய, மாநில அரசுகளின் ஆட்சி மாற்றம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில், வேறொரு விஷயமாக அடிக்கடி சிறைக்கு வந்து போன உமத் சிங் என்பவர் பூலானைச் சந்திக்கிறார். பூலானின் வலி நிறைந்த வாழ்வில் பங்கேற்கிறார் உமத் சிங். அவரின் ஆறுதல் வார்த்தைகள் பூலானின் கடந்த கால காயங்களுக்கு களிம்பு தடவியது.

 

கொள்ளை ராணியாகச் சிறை சென்ற பூலானை அம்பேத்கரின் புத்தகங்கள் கொள்கைவாதியாக வெளியேற்றியது. ஆம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு 37 ஆவது வயதில் (1994 ஃபிப்ரவரி 19) விடுதலை செய்யப்பட்டார் பூலான் தேவி. அப்போது உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் முலாயம்சிங், பூலானின் மீது இருந்த 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்தார். இதனால் சுதந்திரப் பறவையாக வெளியில் வந்தார் பூலான் தேவி. கலவரங்கள் அற்ற சாதாரண வாழ்கையை அமைத்துத் தர விரும்புவதாகச் சொன்ன உமத் சிங்கோடு பூலானின் திருமணம் எளிய முறையில் நடந்துமுடிந்தது.

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

 

விடுதலைக்குப் பிறகு அவரின் முதல் அரசியல் நிகழ்ச்சிக்கு மேடை அமைத்தது தமிழகம். 1994  ஆம் ஆண்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற “மது ஒழிப்பு, ஆபாசப் படம் தடை மற்றும் மகளிர் இயக்கம்” குறித்த மாநாட்டில் பங்கேற்றார், பூலான் தேவி. துப்பாக்கிகளுக்கும் துரோகங்களுக்கும் நடுவே வாழ்ந்தவரை அரசியல் மேடைக்கு அழைத்து வர பாலமாய் இருந்தது பா.ம.க. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடிகள் அவர் வாழ்வில் அரங்கேறியது. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான அரசியலில் தீவிரமாகக் களம் இறங்குகிறார் பூலான்.

 

பூலான்தேவி., எம்.பி!

சமாஜ்வாதி கட்சி சார்பில் இரண்டு முறை உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் தொகுதி சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 1996 –இல் மக்களவை சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பூலான்தேவி. காடுகளிலும் மேடுகளிலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடித்திரிந்த பூலானின் கால்கள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தது. காலமெல்லாம் நசுக்கப்பட்ட பூலான் நாடாளுமன்றத்தில் பெருங்குரலெடுத்து பேசினார். தன் தொகுதி மக்ககளின் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். விளைவு அடுத்து நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலுவான ஆளுமையாக உருவெடுத்தார்.

 

Phoolan MP

 

வாழ்வின் அத்தனை அசவுகரியங்களையும் சகித்துக் கொண்டு வாழத் தயாரானவரை இந்த உலகம் இறுதி வரை வாழவிடாமலேயே செய்தது. அதேசமயம் தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநியாயங்களுக்கு எதிராகவும் சோர்ந்துவிடாமல் போராடிக் கொண்டிருந்த பெண் சிங்கத்தை 5 தோட்டாக்கள் சரித்தது. 2001 ஜூலை 25 அன்று வீட்டு வாசலில் கார் ஏற வந்த பூலானை முகமூடியிட்ட மூன்று மர்ம நபர்கள் சுட்டு வீழ்த்தினர். சம்பவ இடத்திலேயே பூலான் பலியானார். விரைவில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரணையில், பேமாய் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 22 பேரின் மரணத்திற்காக பழி தீர்த்தாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர் கொலையாளிகள்.

 

பாட்சாவாக இருக்கும்வரை பூலானை நெருங்க பயந்த கூட்டம், மாணிக்கமானதும் மண்ணில் வீழ்த்தி பகைமுடித்தது.

 

இன்று பூலான் நினைவு நாள்!

 

 

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

Next Story

பா.ம.க பரப்புரையில் திடீர் எண்ட்ரி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்; அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Durai Murugan who made a sudden entry in the BMC lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ம.க, த.மா.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே போல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பிரச்சாரக் களத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான பா.ம.க கட்சிக்கு, வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை ஒதிக்கியுள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில், பா.ம.க வேட்பாளராக பாலு களமிறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பா.ம.க வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்த போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவ்வழியே வந்த போது அங்கு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பா.ம.க வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று (15-04-24) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சனை ஆதரித்து பரப்புரை செய்து முடித்துவிட்டு, பா.ம.க வேட்பாளர் பரப்புரை செய்த அந்த வழியாக வந்தார். அப்போது, அமைச்சர் துரைமுருகனை பார்த்த பா.ம.க வேட்பாளர் பாலு, “எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றிபெற வைக்க வேண்டும். என்று கூறிவர், உங்கள் வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார். 

மேலும், நான் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவேன். இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும், முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால், அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.