‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் தமிழக அரசை விமர்சித்து அரசியல் தலைவர்கள் பேசியது குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டில் அறிவியல் கலந்த விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அறிவியலை முன்னிறுத்திய வாழ்க்கை பயணத்தில்தான் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். அதுபோல வானிலை மாற்றங்களைக் கணக்கிட ஒன்றிய அரசிடம்தான் அனைத்து விஞ்ஞான கருவிகளும் இருக்கிறது. அவர்கள் சொல்லும் வானிலை எச்சரிக்கையை வைத்துத்தான் மற்ற மாநிலங்கள் புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளத் தயாராகிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாடு அரசு அண்மையில் வந்த ஃபெஞ்சல் புயலின் ஒவ்வொரு அசைவையும் அரசு மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் மூலம் கண்காணித்தார்கள். புயல் கரையைக் கடந்த பிறகு பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது உண்மை. ஆனால் 100 நாட்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 அல்லது 4 மணி நேரத்தில் எதிர்பார்த்திராத இடங்களில் பெய்ந்தது.
தென்பெண்ணை ஆற்றுக்கு ஒரே ஒரு கிளை இருக்கிறது என்று சொன்னால் அது முற்றிலும் தவறு. நிறையக் கிளைகள் மூலம் மழை நீர் பெருக்கெடுத்து சாத்தனூர் அணை நிரம்பியது. அதன் பிறகு அணை திறக்கப்பட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கைவிடப்பட்டதால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளப் பெருக்கை யாரால் தடுக்க முடியும்? எதிர்க்கட்சி விமர்சித்திருப்பது வாய்ச் சவடாலானது. மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு அதைக் கவனிக்கவில்லை என்று ராமதாஸ் குற்றம் சாட்டியதை மறுக்கிறேன். வானிலை அறிஞர்கள் எச்சரிக்கை கொடுத்து அதைத் தமிழ்நாடு அரசு கவனிக்கவில்லை என்று எதாவது ஒரு நிறுவனம் சொல்ல முடியுமா? ராமதாஸ் வயது முதிர்ச்சி காரணமாக புயல் வந்தபோது தூங்கியதால்தான் பேசியிருக்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுத்து உதவினோம் என்றும் சொல்வதற்கும் நேசக்கரம் நீட்டினோம் என்று சொல்வதற்கும் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், விஜய் உள்ளிட்டவர்களில் யாருக்காவது யோக்கியதை இருக்கிறதா? அதை அவர்கள் செய்திருக்கிறார்களா? வேடிக்கை பார்ப்பவர்கள் அரசை வன்மமாகப் பேசி வருகின்றனர். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதனால்தான் மக்களவை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது என்றார்.