Skip to main content

'தினம் ஒரு மாவட்டத்தில், இன்று பெரம்பலூர்'... எந்த கட்சி பலம்... யாருக்கு பலவீனம்!

Published on 08/01/2021 | Edited on 09/01/2021

 

ு

 

விவசாயம் பிரதானமாக இருக்கும் மாவட்டங்களில் பெரம்பலூர் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ள மாவட்டம். இங்கு சிமெண்ட் ஆலைகளிலும் கணிசமான அளவில் மக்கள் பணிபுரிகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், கடந்த 1995ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மேலும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியும் இந்த மாவட்டத்தில் கூடுதலாக அமையப்பெற்றுள்ளது. ஆனால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூரைத் தவிர மீதமுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளும் திருச்சி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் கள நிலவரம் என்ன என்பதை பார்ப்போம். 

 

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி: 

 

விவசாயத்தைப் பிரதானமாக செய்யும் மக்களை பெருவாரியான கொண்ட தொகுதி. இந்த மாவட்டத்தில் இருந்து தமிழக அமைச்சரவையில் யாரும் அமைச்சராவில்லை என்ற குறை ஒருபுறம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாலை திட்டங்கள் இந்த தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரம்பலூர் தொகுதியில் கடந்த 1977ம் ஆண்டுக்குப் பிறகு 10 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது.  இதில், 5 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக மூன்று முறை வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த தமிழ்செல்வன் உள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார். 1980,1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. இந்த தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

குன்னம் சட்டமன்ற தொகுதி:

 

குன்னம் சட்டமன்ற தொகுதி கடந்த 2011ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி ஆகும். இங்கு நடைபெற்ற முதல் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.சிவசங்கர் தேமுதிக வேட்பாளரான துரை.காமராஜை தோற்கடித்தார். அந்த வகையில் குன்னம் தொகுதியில் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்தது. அடுத்த நடைபெற்ற 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.டி ராமசந்திரன் வெற்றிபெற்றார். இந்த முறையும் அதிமுக சார்பாக அவரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சார்பாக இத்தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பெரிய தொகுதி குன்னம். இந்த முறை இரண்டு கட்சிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Next Story

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

“உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” - அருண் நேரு உறுதி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"I will act as your house son" - Arun Nehru assured

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழ்க முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற  பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு பேசுகையில், “லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள தி.மு.க.வில் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமாந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சியில் நடைபெற்ற மாநாடுகளை எல்லாம் ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தின் மேடையில் நானும் ஒரு நாள் மைக் முன்னாள் நிற்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இளைஞர்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

"I will act as your house son" - Arun Nehru assured

அதனைவிட முக்கியமாக தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன் முதலாக எனக்கு வாக்கு கேட்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பெருமையாக இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் என் மீது எத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கிறார்களோ அதனை என் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் உறுதியளிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகம் பொற்கால ஆட்சியை கண்டிருக்கிறது. அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம். இந்தியாவே முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை அண்ணாந்து பார்க்கிறது. இத்தகைய தலைவரால் அடையாளம் கட்டப்பட்ட வேட்பாளராக இங்கு பெருமையாக நிற்கிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்தியில் அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சி மூலமாக பெற்று தருவேன். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.