Skip to main content

பாஜக போடும் மெகா ப்ளான்...தாங்கி கொள்ள மக்களுக்கு சக்தி வேண்டும்...அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜனநாயகத்தின் மீது ஒரு அதிரடி தாக்குதலை நடத்த மோடி-அமித்ஷா கூட்டணி திட்டமிட்டு காய்களை நகர்த்துவதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்த நடவடிக்கையில் தொடங்கி இந்தியாவை ஒற்றுமைப்படுத்த இந்திதான் ஒரே மொழி என்கிற அமித்ஷாவின் குரலைத் தொடர்ந்து அடுத்த தாக்குதலை நடத்துவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது பா.ஜ.க. அரசு.

 

bjp



தேசத்தை முழுமையாக இந்துத்துவாமயமாக மாற்றும் பல திட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரால் ரகசியமாக கட்டமைக்கப்பட்டு வரும் சூழலில், பா.ஜ.க. அரசியலை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள், சிறுபான்மையின மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகள் என அனைவரையும் ஒடுக்கும் வகையில் பல சட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றும் திட்டத்தில் இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

 

bjp



இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள், "நாடாளுமன்றத் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை தந்தது மோடி அரசு. அதில் மிக முக்கியமானது காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவோம் என்பதுதான். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை அண்மையில் திடீரென நீக்கினார் அமித்ஷா.
 

congress



காஷ்மீரத்தில் மையம் கொண்டிருக்கும் பயங்கரவாத சூழ்நிலையையும், தீவிரவாத குழுக்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் ஆதரவான நிலைப்பாட்டில் காஷ்மீர் அரசு இயங்கி வந்ததையும் சுட்டிக்காட்டி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கான காரணமாக இதனை விவரித்தனர். அமித்ஷாவின் இந்த அதிரடிகள் பல அதிர்வுகளை ஏற்படுத்தின. பா.ஜ.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் அமித்ஷாவின் அந்த பாய்ச்சலை எதிர்த்தன; கண்டித்தன. தேசமெங்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான கண்டனங்கள் எதிரொலித்த நிலையில் சர்வதேச நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த சட்டத் திருத்தம்.

 

dmk



பாகிஸ்தானும் இதனை கண்டித்ததுடன், இந்தியாவிலுள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 17 கட்சிகள் மோடி அரசை கண்டித்து போராடுவதாக சர்வதேச அரசியலுக்கு கொண்டுபோனது. பாகிஸ்தான் ஊடகங்களும் இதனை ஊதி பெரிதாக்கிய நிலையில், சர்வதேச நாடுகளின் துணையுடன் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க காய்களை நகர்த்தியது பாகிஸ்தான். அதனை சாதுர்யமாக கையாண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடைக்காமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு.


காஷ்மீர் விவகாரத்தில் எழுந்த எதிர்ப்புக்குரலை அடக்கிவிட்டாலும் அதில் முழு திருப்தி மோடி அரசுக்கு கிடைக்கவில்லை. இனி அடுத்தடுத்து பா.ஜ.க. கொண்டு வர திட்டமிட்டிருக்கும் திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கின்ற நிலை அழுத்தமாக உருவாகும். அப்படிப்பட்ட நிலை உருவானால் சர்வதேச நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகலாம் என யோசித்துள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள்.

குறிப்பாக, காஷ்மீரத்தில் ராணுவத்தை நீண்ட நாட்களுக்கு நிலை நிறுத்த முடியாது. ஒரு கட்டத்தில் ராணுவத்தை முற்றிலும் விலக்கிக் கொண்டாக வேண்டும். அப்படி விலக்கிக்கொள்ளப்படும் போது, மோடி அரசுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அரசியல்கட்சிகள் நடத்தும். மோடி அரசை எதிர்க்கும் மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மோடி, அமித்ஷாவுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள். காஷ்மீர் பிரச்சனைகளுக்காக மட்டுமல்லாமல் இந்துத்துவா கொள்கைகளை நிலைநிறுத்த கொண்டு வரும் மற்ற சட்டங்களையும் எதிர்ப்பார்கள்.

அதனால், இதனை ஒடுக்குவதற்காக இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதம் பேசுதல், மேடையில் முழங்குதல், தேசத்தின் பாதுகாப்பு விவகாரங்களை கேள்வி எழுப்புதல், இந்தியாவின் நிலம் சார்ந்த எல்லை விவகாரங்களில் எதிர்மறை விமர்சனங்களை முன்னிறுத்துதல் என இனி யார் பேசினாலும் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் தேர்தலில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் போட்டியிடாத வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவது என யோசித்திருக்கிறார்கள்.

தவிர, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பேசினால் அவர்களது பதவி பறிக்கப்படுவதுடன் அவர்களும் அடுத்த 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டம் கொண்டுவரவும் அவர்களின் ஓட்டு உரிமையை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதைத்தவிர, சிறுபான்மையினருக்கு எதிராக மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவும் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய அதிரடி தாக்குதல்கள் அடுத்தடுத்த நாடாளுமன்ற கூட்டங்களில் நிறைவேற்றப்படலாம். இதனையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி மக்களுக்கு வேண்டும்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
 

Next Story

தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா; கையும் களவுமாக சிக்கிய நபர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election flying squad caught the person who paid money to vote for the bjp

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இதனையொட்டி வாக்குப் பதிவுக்கான பணிகள் மாநிம் முழுவதும் அதிதீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தாமரை சின்னத்திற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை தேர்தல் படக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி  ஐஜேகே சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில்  வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை  நிலையான குழுவினர் அங்கு சென்றபோது அங்கு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா அழகரையை சேர்ந்த அஜித் என்பவரிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர்  பறக்கும் படையினர் அவரை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 60 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Case against Nayanar Nagendran High Court action order

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

Case against Nayanar Nagendran High Court action order

இந்நிலையில் இந்த முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான நிரஞ்சன், “இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.