Skip to main content

அ.தி.மு.க. என்கிற கட்சி இருக்கணுமா... வேணாமா... மிரட்டும் அமைச்சர்கள்!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

அமைச்சர் பதவி யாருக்கு கொடுக்கலாம் என்று ஓபிஎஸ்ஸை வைத்தே விளையாட்டை ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பி.எஸ்.சை அழைத்து அமைச்சர் பதவி ரேசில் இருந்த மைத்ரேயன், தம்பிதுரை. கே.பி. முனுசாமி ஆகியோரை இ.பி.எஸ். தவிர்த்துவிட்டு வைத்திலிங்கத்தை ஓ.பி.எஸ். மகனுக்கு எதிராக முன்னிறுத்தும் திட்டத்துடன் ஓ.பி.எஸ்.ஸிடம் பேசினார் எடப்பாடி. "நீங்கள் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தினீர்கள். பிறகு, நானும் உங்களுடன் இணைந்து சசிகலா குடும்பத்தை எதிர்த்தேன். சசிகலா குடும்பத்தால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பகுதியில் ஏராளமாக இருந்தார்கள். அவர்களை நமக்கு ஆதரவாகப் பாதுகாத்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க துணை நின்றவர் வைத்திலிங்கம், ஜெ.வின் நம்பிக்கையை பெற்றவர். அவர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவருக்கு மத்திய மந்திரி பதவி பெற்றுத்தர விரும்புகிறேன்'' என நேரடியாகவே சொன்னார். 

 

admk



"வைத்திலிங்கம் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர். அவர் தியாகம் செய்தவர்' என ஆதரவு கொடுத்தார், மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி. அதற்கு ஓ.பி.எஸ். மறுத்தார். முரண்டு பிடித்தார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினார்கள். மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென்றால் ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளர் பதவியையும் துணை முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். ஓ.பி.எஸ். கட்சியில் இணையும் போதே அவரிடம் இருந்த ஏழு எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். தற்பொழுது அவரிடம் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அவர் மகனை மத்திய அமைச்சராக்கட்டும். நாங்கள் வைத்திலிங்கத்தை துணை முதல்வராக்குவோம். அவரை நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற வைப்போம். அவரை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக்குவோம்'' என மிரட்டல் தொனியில் பேசினார்கள்.

 

ministers



மோடி அமைச்சரவை பதவியேற்புக்கு முந்தைய நாள் இ.பி.எஸ். வீட்டில் "நான் என் மகனை மத்திய மந்திரியாக்க மாட்டேன்' என எழுதி கொடுத்துவிட்டுப் போனார் ஓ.பி.எஸ். ஆனால் 30-ந்தேதி காலை டெல்லிக்கு போன ப்ளைட்டில் இ.பி.எஸ். மற்றும் மந்திரிகளுடன் பயணமானார் வைத்திலிங்கம். அவர் மந்திரியாக பதவி ஏற்பதை காண தனது குடும்பத்தாரை அழைத்துச் சென்றார். அதே நேரத்தில் ஓ.பி.எஸ்.சின் குடும்பமும் அவர்களுடன் சென்றது.

  ops son



ஓ.பி.எஸ்.சின் மகன் மந்திரியாக அழைக்கப்பட்டிருக்கிறார் என டெல்லிக்குச் சென்றதும் அனைத்து தொலைக்காட்சியிலும் செய்தி வெளியானது. அதனால், இ.பி.எஸ். உடன் சென்ற அமைச்சர்கள் டெல்லியில் கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். "அ.தி.மு.க. என்கிற கட்சி இருக்கணுமா வேணாமா' என அவர்கள் இ.பி.எஸ்.சை கேட்டார்கள். அவர் பா.ஜ.க. மேலிடத்தை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.  பதவியேற்புக்கு முந்தைய கடைசி மணி நேரத்தில்,  ஓ.பி.எஸ். மகன் பெயரை ரத்து செய்தார் அமித்ஷா. 


இதனால் பா.ஜ.க. அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை என்ற விமர்சனம் வரும் என்பதால், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரும் சர்க்காரியா கமிஷனில் கலைஞருக்கு எதிராக செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ர மணியத்தின் மகனுமான ஜெய்சங்கர் பெயர் அமைச்சரவை பட்டியலில் இருந்தது. அவரை, தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கிடுங்கள்' என இ.பி.எஸ். தரப்பிடம் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆட்சிக்காலங்களில் தமிழகக் கூட்டணிக் கட்சிகள் மத்திய கேபினட்டில் முக்கிய இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை இணையமைச்சர் பதவி கூட இல்லை என்கிற அவமானத்துடன் அசிங்கப்பட்டுத் திரும்பினார்கள் டெல்லி சென்ற அ.தி.மு.க. தலைவர்கள்.