Skip to main content

ஏமாற்றும் மத்திய அரசு! ஒப்புக்கொண்ட ஓ.பி.எஸ்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மே மாதம் நிறைவு பெறும் நிலையில் ஓரிரு மாதங்களில் தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

 

ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசின் கடன் சுமை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பதுடன், 43,417 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்கிறது பட்ஜெட். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது எடப்பாடி அரசு. மேலும், நடப்பு நிதியாண்டில் 84,686 கோடி ரூபாய் கடன் வாங்கவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பி.எஸ். தவிர, பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

 

கடன்சுமையும் வருவாய் பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்துவருவது தெரிந்திருந்தும் பொருளாதார வளர்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது இடைக்கால பட்ஜெட்டில் தெளிவாகியிருக்கிறது. ஆனால், பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, "நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது' என்கிறார் ஓ.பி.எஸ்.

 

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி பொருளாதார வல்லுநர்களும் தொழில் நிறுவனங்களும் இந்த இடைக்கால பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றன.

 

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ""கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிதி நிர்வாகத்தைக் கையாண்டு தொடர் வருவாய் பற்றாக்குறையையும் நிதி பற்றாக்குறையையும் உருவாக்கி நிதி பேரிடரை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய்தான். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் 7.2 சதவீதமாக குறைந்துவிட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பே, 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போயிருக்கிறது.

 

தமிழ்நாடு நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச் சட்டம்-2003 அமலானதற்குப் பிறகு கடனை வாங்கி கடனுக்கு வட்டிக் கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க.தான். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையில் 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை சுமத்தியுள்ளது அ.தி.மு.க. அரசு. இதுதான் வெற்றிநடை போடும் தமிழகமா?'' என்கிறார்.

 

மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் நாம் பேசியபோது, "குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குவது இந்த அரசின் முதல் முன்னுரிமை என பட்ஜெட்டில் சொல்லும் ஓ.பி.எஸ்., பள்ளிக் கல்வித்துறைக்காக ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது துரதிர்ஷ்டம். அரசு மருத்துவமனைகளை 100 சதவீதம் மக்களின் பயன்பாட்டிற்கு மாற்றாமல் அம்மா மினி கிளினிக் திட்டத்தை துவக்குவதற்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

"தமிழகத்திற்கு வழங்கும் பேரிடர் நிதியை போதுமான அளவில் தரவில்லை என்றும், பெட்ரோல் - டீசல் மீதான மேல்வரி கட்டணங்களில் தமிழக அரசின் பங்கை தரவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கவில்லை என்றும், உள்ளாட்சிகளுக்கான மானியத்தை குறைத்து விட்டது' என்றும் மத்திய பா.ஜ.க. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பட்ஜெட்டில் வைத்திருப்பதன் மூலம், "பா.ஜ.க.வை ஆதரிக்கும் தமிழக அரசை மத்திய பா.ஜ.க. அரசு ஏமாற்றுகிறது' என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் நிதியமைச்சர்.

 

கூட்டணியாக இருந்தும் தமிழகத்திற்கான நிதியைப் பெறும் நிர்வாகத் திறமை ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது புலனாகிறது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை மேற்குவங்கம், ராஜஸ்தான், அசாம், மேகாலயா, நாகலாந்து அரசுகள் குறைத்துள்ளது போன்று தமிழக அரசும் குறைக்காமல், புதிய செஸ் வரியை நீக்குக என பட்ஜெட்டில் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது மக்களை ஏமாற்றும் செயல். மின்சார பேருந்துகள் வாங்குவது, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல அறிவிப்புகள் அ.தி.மு.க. அரசு வழக்கமாக பாடி வரும் பல்லவியே'' என்கிறார் மிககாட்டமாக .

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், "அதிகாரப் பூர்வமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன் 12,110 கோடியில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் 5000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7,110 கோடியை யார் கட்டுவார்கள்? புதிதாக அமையவுள்ள ஆட்சியின் தலை யில் இதனை சுமத்தியிருக் கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட வருட கோரிக்கைகள் குறித்த எதற்கும் பட்ஜெட்டில் தீர்வு காணப்படவில்லை. அதேபோல, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில்... காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது வேலையில்லா பட்டதாரிகளுக்கு செய்யும் துரோகம்'' என்கிறார் நம்மிடம்.

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “உழவர் நலன்களுக்கும் வேளாண்மைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ரூபாய் 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் நிதி பற்றாக் குறையை போக்கும் வகையில் உடனடியாக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விசயம். பா.ம.க.வால் வலியுறுத்தப்பட்டு வரும் மேட்டூர் உபரி நீர்த்திட்டம், அத்திக்கடவு- அவினாசி நீர் திட்டம் ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும்; தாமிரபரணி - கருமேணி யாறு இணைப்புத்திட்டம் அடுத்த மார்ச்சுக்குள் நிறைவேற்றபடும் என்பதும் மகிழ்ச்சி தரக் கூடியவை'' என பட்ஜெட்டை வரவேற்கிறார் டாக்டர் ராமதாஸ்.

 

இந்திய விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் விருத்தகிரியிடம் பேசியபோது, "பத்தாண்டுகள் பதவியில் இருந்த ஒரு அரசு, நிதி ஆளுமை இல்லாததால் அடுத்துவரும் அரசுக்கு மிகக் கனமான கடன் சுமையை விட்டுச்செல்கிறது. மீண்டும் இவர்களே ஆட்சிக்கு வந்தா லும் கடனை தீர்ப்பதற்கான எந்த வழியையும் இவர்கள் காட்டவில்லை. தேர்தல் ஆண்டாக இருப்பதால் இலவசங்களும் விலையில்லா விவகாரங்களும் அரசின் செலவினங்களை அதிகரித்துள்ளன. நிவர் - புரெவி - தொடர் மழை - வெள்ளம் - பயிர் சேதம் ஏற்பட்டதால் நிவாரண உதவிகளுக்கு அரசு செலவழித்திருப்பது நியாயமானதுதான். அதனால் நடப்பு நிதியாண்டுக்கு நிதிச்சுமை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் செலவுகளுக்கேற்ப வருவாயை பெருக்கியிருக்கலாமே?

 

மற்ற மாநிலங்களைப் போல தனது பங்கை மத்திய அரசிடம் வலிமையாகக் கேட்டுப் பெறாமல், கட்சியைக் காப்பாற்ற பஞ்சாயத்து செய்வதிலேயே ஜெயலலிதா மறைந்த 4 ஆண்டுகளை அ.தி.மு.க. கடத்திவிட்டது. ஆண்டுக்கு 1,28,000 கோடிக்கு மேல் மதுபான விற்பனையில் வருவாய் பார்க்கும் அரசு, டாஸ்மாக் மதுபான தயாரிப்புகளுக்கு மூலப்பொருளான கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சேரவேண்டிய பல ஆயிரம் கோடிகளான நிலுவைத் தொகையை வழங்குதல் பற்றி எந்த தீர்வையும் பட்ஜெட்டில் கூறவில்லை. இது ஒரு ’சுமை(யை) தாங்கி’ பட்ஜெட்! மொத்தத்தில், 11 முறை நிதிநிலை அறிக்கை வாசித்த பெருமை மட்டுமே ஓ.பி.எஸ்.சுக்கு கிடைத்துள்ளது'' என்கிறார் அழுத்தமாக.

 

பொருளாதார வல்லுநரான ஆனந்த்சீனிவாசனிடம் பேசியபோது, ’’மே மாதம் இந்த ஆட்சியின் ஆயுள் காலம் நிறைவுறும் நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது தவறு. இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் ஏப்ரல் 1-லிருந்து செயல்பாட்டிற்கு வரும். ஆனால், ஏப்ரல் மாதத்தில் தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை அமலில் இருக்கும்போது பட்ஜெட்டில் இருப்பவை எதுவும் நடைமுறைக்கு வராது. புதிய ஆட்சி வரும் வரையிலான 45 நாட்களுக்கான செலவினங்களுக்கு மட்டுமே நிதிநிலை அறிக்கை வாசித்திருக்க வேண்டும். அறிவிக்கப்பட்டவை அனைத்தும் ஹம்பக்தான்.

 

இந்த அரசுக்கு மதுபான விற்பனை, பத்திரப்பதிவு, பெட்ரோலிய பொருட்களில் விதிக்கப்பட்டுள்ள வரி ஆகிய 3 வழிகளில்தான் வருவாய் கிடைக்கிறது. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம்தான் அதிகரிக்கும் எனச் சொல்லும் ஓ.பி.எஸ்., வரி வருவாயின் வளர்ச்சி 22 சதவீதமாக இருக்கும் என சொல்வது எப்படி? கடந்த பட்ஜெட்டின்போது 32,000 கோடி தருவதாக சொன்னார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மாநில அரசு 23,000 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறது. மீதமுள்ள 9,000 கோடி எங்கே?

 

ஒரு ஜி.டி.பி.க்கு 25 சதவீதத்திற்கு மேல் கடன் வாங்கமுடியாது. அதற்கு அதிகமாக வாங்க மாநில அரசுக்கு உரிமையும் இல்லை. 5.70 லட்சம் கோடி கடனை கணக்கிட்டால் ஜி.டி.பி. அளவில் 27 சதவீதம் கடன் பெறுவதாக இருக்கிறது. அதனால் கடன் வாங்கவும் கூட முடியாது. அனுமதிக்கப் பட்ட சதவீத அளவில் கடன் வாங்கினால், ஏற்கனவே இருக்கும் கடனுக்கு 60,000 கோடிக்கு வட்டி மட்டுமே கட்ட வேண்டும். மீதி அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கும் பென்சனுக்கும் போய்விடும். மக்கள் நலத்திட்டங்களுக்கு என்ன செய்வீர்கள்? மொத்தத்தில் இது பட்ஜெட்டே இல்லை'' ’என்கிறார் மிக ஆவேசமாக.

 

 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.