Skip to main content

கேள்விநேரம் ஸ்வாஹா! கிழித்து தொங்கவிடும் எதிர்க்கட்சிகள்! கிடுகிடு வேகத்தில் பா.ஜ.க.!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
dddd

 

 

இந்தியாவில் கரோனாவின் பரவலையடுத்து மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், மழைக்காலக் கூட்டத்தொடருக்காக செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது. கரோனா முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்பவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கரோனா தொற்றுள்ள 30 எம்.பி.க்கள் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

மாஸ்க் அணிதல், ஒரு இருக்கை விட்டுவிட்டு உறுப்பினர்களை அமரவைத்தல், கண்ணாடித் தடுப்பு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டத் தொடரில் கடைப்பிடிக்கப்பட்டன. அதேபோல எம்.பி.க்களின் வருகையும் பிரத்யேக ஆப் மூலம் பதிவுசெய்யப்பட்டது. பொருளாதார வீழ்ச்சி, நீட் விவகாரம், கேள்வி நேரம் தவிர்க்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி போட்டன.

 

நீட் அட்டாக்

தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறையால் 12 மாணவர்கள் இறந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் எனப் பேசினார். திருச்சி சிவாவோ, பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு மட்டும் எப்படி நடத்த முடியும். பணம்கொடுத்து படிப்பவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

 

கேள்விநேரம் ஸ்வாஹா

கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர்ரஞ்சன் சௌத்ரி, மக்களின் பிரச்சனைகளை எழுப்புவதற்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு கேள்வி நேரம். அதனை ரத்துசெய்வதன் மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க அரசு முயற்சிக்கிறது என்றார். எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பயந்து கேள்வி நேரம் ரத்துசெய்யப்படவில்லையெனவும், கேள்விகளை எழுதி தந்தால் பொருத்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என அமைச்சர் பிரகலாத் விளக்கமளித்தார்.

 

எல்லையைக் கோட்டைவிடும் இந்தியா

பல மாதங்களாக இந்திய எல்லைப்பகுதி பத்திரமாக இருக்கிறது எனக் கூறிவந்தது பா.ஜ.க. மாறாக, எல்லையில் சீனா படையைக் குவித்துவருவதாகவும், ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாதெனவும் மக்களவையிலேயே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். 1100 கிலோமீட்டர் ஆக்கிரமிப்பு பற்றி விவாதம் நடத்தவேண்டுமென எதிர்க்கட்சிகள் கூற, பா.ஜ. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் நீங்கள் பேசலாம் எனக் கூறினார்..

 

செத்துப் போனாங்களா...

கரோனா குறித்த புள்ளி விவரங்களைப் பகிர்ந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இதுவரை கிட்டத்தட்ட 36 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இது நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 77.65 சதவிகிதமாகும். அரசின் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக 38,000 பேர் உயிரிழப்பது தவிர்க்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் கரோனா சாதனைகளைத் தெரிவித்தார்.

 

இதையடுத்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர், அவர்களுக்கு அரசு என்னென்ன உதவிகளை வழங்கியதென கேள்வியெழுப்பப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், "ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்ற புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை. எனவே நிவாரணம் குறித்த கேள்விக்கு இடமில்லை'' என பதிலளித்தார்.

 

யார் நலனுக்காக மசோதா?

சந்தைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில் மாநில அரசுகளைச் கலந்தாலோசிக்காமல், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அவசரமாக மூன்று மசோதாக்களை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங்கள் கிளம்பின. விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாடு, விவசாய விளைபொருள்களுக்கான விலை உறுதிப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் குறித்த இந்த அவசர சட்டத்திருத்தங்களுக்கு இடதுசாரி, காங்கிரஸ், திரிணமுல் காங்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளின் பேரைச் சொல்லி பெருநிறுவனங்கள் பலனடையவே அவசரச் சட்டங்களை ஆளுங்கட்சி கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

 

கடன் நல்லது

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக்சிங் தாக்குர், மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் போதிய நிதியில்லை. மாநிலங்கள் கடன் வாங்கிச் சமாளிக்கும்படி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

 

வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டத்துக்கெதிராக விமர்சனம் வைக்கும்போது, நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகக்கூறி திரிணமுல் காங்கிரஸின் சௌகதாராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென பாராளுமன்ற அலுவல் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.

 

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு செக்

கரோனா சூழலால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் நிதிநெருக்கடியைச் சமாளிக்க எம்.பி.க்கள் ஊதியத்தை 30 சதவீதம் குறைக்க முடிவெடுத்ததுடன், இரண்டாண்டுகளுக்கான எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் மத்திய அரசு கைவத்துள்ளது.

 

மொத்தத்தில் நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே சரமாரியாக விமர்சனங்களை வைக்கும் எதிர்க்கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அவசர சட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம்காட்டுகிறது பா.ஜ.க.