Skip to main content

அதிகாரி-வக்கீல்-டாக்டர்-இன்ஜினியர்! -டிசைன் டிசைனாக ஏமாற்றும் டுபாகூர் ஆசாமி!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020
dddd

 

 

தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள், நடிப்பு என எல்லா ஏரியாவிலும் கைவைத்து ஜொலித்தவர்கள் சிலருண்டு. டி.ராஜேந்தர் அவற்றில் பிரதானமானவர். ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு பொறுப்புகளில், பல பதவிகளை வகிக்கும் ஒரு அரிய அதிகாரியைப் பார்த்திருக்கிறீர்களா?'…அவரைப் பற்றியதுதான் இந்த செய்தி.

 

நக்கீரனைத் தொடர்புகொண்ட வாசகர் ஒருவர், ""என் பெயர் ஜிலானி, நான் தனியார் மருந்து கம்பெனியில் மார்கெட்டிங்கில் வேலை செய்து வருகிறேன். என் மனைவி ஃபரிதாபேகம், காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர். எங்களின் இரு மகள்களின் படிப்புக்காக சென்னை தாம்பரத்தில் தற்காலிகமாக குடியிருக்கிறேன். சொந்த ஊரான காஞ்சிபுரம் அசோக் நகரில் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் இருந்துவந்தோம். புரோக்கர் ஒருவர் மூலம் அதே பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல்தளத்தில் ஒரு வீடு விற்பனைக்கு வந்தது. கடந்த ஜனவரி மாதம் வீட்டைப் பார்க்க என் மகளும், மனைவியும் போனார்கள்.

 

dddd

 

அதன்பின் எங்கள் நம்பருக்கு பேசிய ஜெயக்குமார் துரைசாமி, "நீங்கள் வாங்கப்போகும் வீட்டின்மேல் வழக்கு உள்ளது. நேரில் வந்தால் பேசலாம்' என்று கூறினார், ஜனவரியில் 26-ஆம் தேதி அவர் வீட்டில் நேரில் சந்தித்தோம்.

 

நான், ஜெயக்குமார் துரைசாமி, தமிழக லோக் ஆயுக்தா தலைவர்...’என்று தொடங்கி இன்னும் பல புரியாத பதவிகள் பற்றி கூறினார். அவர் வீட்டு வாசலில் பல பதவிகளில் இருப்பதாக போர்டு எல்லாம் மாட்டியிருந்தது. "நீங்கள் வாங்கப்போகும் வீட்டின்மேல் வழக்கு இருக்கு. அதையெல்லாம் வாபஸ் பெற எனக்கு இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும், நான் அழைத்தால் எஸ்.பி., ஐ.ஜி. எல்லாரும் வீட்டுக்கே வந்து பதில்கூறுவார்கள். என்னை பகைத்தால் யாரையும் வாழ விடமாட்டேன்'’என்று மிரட்டினார்.

 

ddd

 

வீட்டு உரிமையாளர் கதிரவனை நேரில் சந்தித்து விவரத்தைக் கூறினோம். அவரோ, "அவன் ஓர் டுபாக்கூர், அவன் வழக்கறிஞரே கிடையாது'’என்று கூறி விளக்கினார். வீடு பிடித்திருந்ததால் பன்னிரண்டு லட்சத்திற்கு வீட்டை வாங்கினோம். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, இரவு 10 மணிக்கு என் மனைவிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பி மிரட்டிய ஜெயக்குமார், அடுத்தநாள் என் வீட்டு கதவில் பல ஆண்டுகளாக மெயிண்டனன்ஸ் பாக்கி தரவில்லை என்பதால் இந்த கதவைத் திறக்கக்கூடாது என்று "ஃபியுப்புல் ஃபோரம் ஆப் இந்தியாவின் தேசியத் தலைவர்' (PEOPLE FORUM OF INDIA ) என்று பச்சை மையில் கையொப்பமிட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்.

 

நாளுக்கு நாள் தொல்லை அதிகமானதால் அவர் கூறிய விவரங்களைச் சரிபார்த்தபோது, லோக் ஆயுக்தாவின் தமிழக தலைவர் முன்னாள் நீதிபதி தேவதாஸ்னு தெரியவந்தது. சரி வழக்கறிஞர்னு சொன்னாரேனு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டால் "இந்த ஆளு வழக்கறிஞரே கிடையாது'னு பதில் வந்துச்சு. அடுத்த அவதாரம் டாக்டர் பட்டம். எந்த பல்கலைக்கழகம் வழங்கியதென்றே தெரியவில்லை. லெட்டர் பேடுல எம்.டி., எம்.பி.ஏ., எல்.எல்.பி. பட்டங்களும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தேசிய உறுப்பினர், பி.எஃப்.ஐ. தேசிய சேர்மேன், தமிழக லோக் ஆயுக்தா தலைவர் என போட்டிருக்கும் பட்டியலைப் பார்த்தா விவரம் தெரியாத அப்பாவிங்க மிரண்டு போயிடுவாங்க.

 

ddd

 

பேஸ்புக்ல முஸ்லிமா மதம் மாறி ஹஜ்க்கு போனமாதிரி போட்டோ வைச்சிருக்கார். எண் கணிதம், ஜோதிடம் மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்னு ஒரு லேபிள். அனைத்து நீதிமன்றங்களின் தன்னார்வ சட்டப் பிரதிநிதி வேற... பி.இ., பி.டெக். பட்டப் படிப்பு, தேசிய மற்றும் மத்திய அரசு சார்பு பத்திரிகை குற்றப்பிரிவு நிருபர், ஆல் மீடியா, பிரஸ் ஜர்னலிஸ்ட் துணைத் தலைவர் பதவி ஐ.டி. கார்டு, "தனி அரசாங்கம்' என்ற தலைப்பில் சிறப்பு தலைவர் பதவி, தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணை யத் தலைவர் பதவி...…மொத்தத்துல நான் கடவுள்னு மட்டும்தான் போட்டுக்கலை. இவர் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பா காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் பாஸ்கரனிடம் புகாரளித்தும் பலனில்லை. அதேபோல காஞ்சி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தோம், பேருக்கு வழக்குப் பதிவானதே தவிர, கைது செய்யவில்லை'' என்கிறார் வருத்தமாக.

 

இந்த மோசடிமன்னன் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. இவரைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், ஜெயக் குமார் பெண்ணை மிரட்டியது, டாஸ்மாக்கை மிரட்டியது போன்ற பல கதைகளைப் பேசினார்.

 

ddd

 

தமிழக லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் ராஜாராமிடம் பேசினோம், "இந்த பெயரில் லோக் ஆயுக்தாவில் யாரும் கிடையாது'’என்றார். "லோக் ஆயுக்தா தலைவர்' என்று சொல்லி மோசடியில் ஈடுபடுவதால், தமிழக லோக் ஆயுக்தா பிரமுகர்களே இந்த டுபாக்கூர் மீது புகார் கொடுத்து உள்ளே தூக்கி வைக்கலாமே!

 

 

Next Story

பாகிஸ்தான் தேர்தல்: தவறை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்த அதிகாரியால் பரபரப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Excited by the official's information at Pakistan Election Fraud?

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதன்படி, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நடந்து முடிந்த பிறகு, புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அந்த வகையில், நவாஸ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் மோசடி நடந்ததாக இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழ்நிலையில், தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகத் தேர்தல் அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷ்னரான லியாகத் அலி சத்தா, இன்று (17-02-24) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர். நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.

மேலும், இந்த செயலில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக ஈடுபட்டார்கள். நாட்டின் முதுகில் குத்துவது என்னை தூங்க விடாது. நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்காக எந்த தவறான செயல்களிலும் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிகாரியின் இந்த தகவலால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் 62 லட்சம் இழந்த முன்னாள் ராணுவ வீரர்!

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

Ex-soldier who lost 62 lakhs online in the desire for more profit!

 

புதுச்சேரி முருங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 56). முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலமாக சம்பாதிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என தனது செல்போனில் தேடி உள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போலி நிறுவனத்திலிருந்து ஒரு லிங்க் அழைப்பு வந்துள்ளது. 

 

அதில் 'முதலீடு செய்யும் பணத்திற்கு 20% அன்றைய தினமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும். முதல் முறை முதலீடு செய்யும் பணத்திற்கு ஈடாக நாங்களும் நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்களோ அதே அளவு பணம் போனசாக தருவோம், எங்களிடம் பிளாட்டினம், ப்ரீமியம் ஸ்பெஷல் போன்ற பல்வேறு முதலீட்டு பிரிவுகள் உள்ளது' என்றும் கூறியுள்ளனர்.

 

இதனை நம்பிய முருகன், கடந்த ஜனவரி மாதம் ரூபாய் 10,500 முதலீடு செய்துள்ளார். அவர்களும் அதற்கு ஈடாக 10,500 பணத்தைப் போட்டு அன்றைய தினமே 30 வீடியோக்களை அனுப்பி உள்ளனர். அதை பார்த்து ரிவ்யூ (கருத்து) சொல்ல வேண்டும் என்றும், ரிவ்யூ சொன்ன உடன் ரூ.22,000 வரை அவரது வங்கி கணக்கில் பணம் அனுப்பி உள்ளனர். அதனால் இதை முழுமையாக நம்பி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரூபாய் 32 லட்சம் அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை முதலீடு செய்துள்ளார். 

 

இந்த பரிமாற்றங்களின் மூலம் அவருடைய செல்போனில் அவர் சம்பாதித்த லாபத்தையும் சேர்த்து அவரது கணக்கில் ரூபாய் 58 லட்சம் பணம் இருப்பதாக அந்த செயலியில் காட்டியுள்ளது. அந்த பணத்தை அவர் எடுக்க முயன்ற போது உங்களுக்கு எர்ரர் காட்டுகிறது என்றும், இதற்கு நீங்கள் வரி கட்டினால் தான் மேற்கண்டு பணத்தை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதற்கு வரி கட்டுவதற்காக அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் இருப்பதாக காட்டியுள்ளது. அந்த பணத்தை எடுக்க மேலும் வரி செலுத்த வேண்டும் என்று கூறியதால் தன்னிடம் இருந்த பணம், நகை, கடன் தொகை என அனைத்தையும் முதலீடு செய்துள்ளார். மொத்தம் ரூபாய் 62 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனாலும் அவரால் அவரது கணக்கில் இருக்கின்ற பணத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன், புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.