Skip to main content

அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ பயமில்லை... ஊழல் புகார்களை மறைக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

ddd

 

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் இருக்கின்றன. ஆனால், அந்த ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர எந்த முனைப்பையும் காட்டுவதில்லை எடப்பாடி அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை. இதனால்தான் அந்த வழக்குகள்மீது ஆதிக்கம் செலுத்த மத்திய பாஜக அரசு தன் வசமுள்ள சி.பி.ஐ மூலம் முயற்சிக்கிறது என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.


ஊழல்களுக்கு எதிராகப் போராடி வரும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எம்.எல். ரவி கூறுகையில், "அமைச்சர்கள், அதிகாரிகள், பிரபலங்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில், சம்மந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் சி.பி.ஐ அதிகாரிகள் சறுக்கினாலும், தங்களிடம் வரும் ஊழல் புகார்களை பதிவு செய்து, விசாரணை நடத்தி, கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்கிறார்கள். சில வழக்குகளில் தண்டனையும் கிடைக்கிறது. ஆனால், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை குறைந்தபட்சம் புகாரை பதிவுசெய்யக்கூட முயற்சிப்பதில்லை. பல புகார்கள் முடங்கி விடுகின்றன. முதல்வர் எடப்பாடி வசமிருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் கோட்டக் கணக்கர் பதவிக்கான தேர்வினை மாநில ஏ.ஜி அலுவலகம் நடத்தியது. இதில் லஞ்சம் கொடுத்து பலர் தேர்ச்சி பெற்றனர். அந்த ஊழலில் சம்மந்தப்பட்ட மாநில கணக்காயர் அருண் கோயலை சி.பி.ஐ கைது செய்ததுடன், லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்ற நெடுஞ்சாலை துறை கோட்ட கணக்கர்களின் விடைத் தாள்களை கைப்பற்றி ஹைதராபாத் புலனாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தது.

 

ஆய்வுகளில் ஊழல் உறுதியானதால், அதனை முதல்வர் எடப்பாடிக்கும், துறையின் செயலாளருக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ வலியுறுத்தியது. ஆனால், குற்றவாளிகளான கோட்ட கணக்கர்கள் தண்டிக்கப்படவில்லை. மேலிடத்தின் ஆசியோடு இப்போதும் பணியில் நீடிக்கிறார்கள். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நான் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

அதேபோல தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையால் கட்டப் பட்ட பாலங்களில் பல ஆயிரம் கோடி ஊழல்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக, தஞ்சையில் கட்டிமுடிக்கப்பட்ட ஒரு பாலம் திறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது. புதுக்கோட்டையில் கட்டப்பட்ட ஒரு பாலத்தில் போடப்பட்ட சாலையில் வெடிப்புகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு அருகதையற்றுப் போனது. காஞ்சிபுரம், பொன்னேரி பகுதிகளிலும் பாலங்கள் முறையாகக் கட்டப்படாமல் காண்ட்ராக்டருக்கு பில் பாஸான உடனேயே பழுதடைந்தன. இவைகள் குறித்த புகார்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.


கடந்த 2017-ல் தார் கொள்முதல் செய்ததில் சுமார் 1,000 கோடி ரூபாயை சுருட்டியது நெடுஞ்சாலைத்துறை. இதற்கான ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கோர்ட்டுக்கு போனது அந்த ஊழல் விவகாரம். நீதிமன்றத்தின் எச்சரிக்கையால் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழலில் சிக்கியுள்ள அதிகாரிகளைக் கைது செய்யவோ, அவர்களைக் குற்றவாளிகளாக நிரூபிக்கவோ எந்த ஒரு சின்ன விசாரணை முனைப்பையும் கடந்த 3 வருடமாகக் காட்டவில்லை. இதனால் ஊழல் குற்றவாளிகள் பதவி உயர்வு பெறுவதும், அனைத்து ஓய்வுகால பலன்களுடன் பணிஓய்வு பெறுவதும் நிறைய நடந்துள்ளன. அதனை வேடிக்கை பார்த்தபடியே திருப்தியடைகிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

 

தேசிய நெடுஞ்சாலை பணிகளில் நடந்த முறை கேடுகள் மீதான புகாரில் சிக்கிய தேசிய நெடுஞ்சாலை திண்டுக்கல் கோட்டப் பொறியாளர் முருகபூபதியை, கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்து, நடத் திய விசாரணையில், இந்த ஊழல்களுக்குப் பின்னணியில் துறையின் உயரதிகாரிகள், தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், அரசியல்வாதிகள், மத்திய அரசு பொறியாளர்கள் என பலரும் இருப்பதை முருகபூபதி வெளிப்படுத்தியதாக தகவல். இதனையறிந்த தேசிய நெடுஞ்சாலை வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஒருவர், தன்னை சி.பி.ஐ கைது செய்துவிடுமோ என்கிற அச்சத்தில் விருப்ப ஓய்வில் சென்று விட்டார். தற்போது இந்த ஊழல் புகாரை வெவ்வேறு கோணங்களில் சி.பி.ஐ எடுத்துச் செல்வதாக தெரிகிறது.

 

அதேபோல, சென்னை தேசிய நெடுஞ்சாலை வட்டத்தில் நடக்கும் பணிகளில் அரசின் மேலிடத்துக்கும் பொறியாளர் ஒருவருக்கும் நடந்துள்ள ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் ஆடியோ பதிவுகள் சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில், சி.பி.ஐ.யால் தனக்குப் பிரச்சனை வந்து விடுமோ என பயந்து அந்த பொறியாளர் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். அதேசமயம், அந்த பொறியாளர் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என அவருக்கு அரசு மேலிடம் அழுத்தமும் கொடுத்துள்ளது. இதனால் விருப்ப ஓய்வில் செல்ல அவரும் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையே, சம்மந்தப்பட்ட பொறியாளரின் கீழ் பணிபுரிந்த கோட்டப் பொறியாளர் ஒருவரையும் வேறு பிரிவுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்துவிட்டது நெடுஞ்சாலைத்துறை.

 

சி.பி.ஐ.யிடம் செல்லும் எடப்பாடி அரசின் ஊழல் புகார்களால் அரசு மேலிடமும் அதிகாரிகளும் பயந்து போகிறார்கள். அதுவே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் செல்லும் புகார்கள் மீது அவர்களுக்குப் பயம் வருவதில்லை. ஆட்சியாளர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சலாம் போடுகிறது. இத்துறைக்கு அனுப்பப்படும் புகார்கள் முன்பெல்லாம் அவர்களது குப்பைக் கூடையில் போட்டுவிடுவார்கள். இப்போதெல்லாம் அந்தப் புகார்கள் சம்மந்தப்பட்ட துறைக்கே அனுப்பப்படுவதால் துறையிலுள்ள குப்பைகளில் சேர்ந்து விடுகிறது.

 

இதனால், லஞ்ச ஒழிப்புத் துறையிலுள்ள ஊழல் புகார்களை கண்காணிக்கவும், ஆட்சியாளர்களுக்கு எதிராகவுள்ள ஊழல்களை மூடி மறைக்க நடக்கும் ஊழல்களைக் கண்டறியவும் ஒரு விசாரணை கமிசனை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்குப் புகார் அனுப்பவிருக்கிறேன்'' என்கிறார் ஆவேசமாக.

 

மேலும் நாம் விசாரித்தபோது, ‘’தேசிய நெடுஞ்சாலை பிரிவில் மத்திய அரசின் நிதியை எடப்பாடி அரசின் நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகளும் பொறியாளர்களும் வாரிச் சுருட்டுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, தேவையற்ற சாலைகளைக் காரணமேயின்றி மேம்படுத்தத் திட்டமிடுவது, அதற்காக பல கோடி ரூபாய்களில் கூடுதல் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுவது, அதிகமாக கமிஷன் தரும் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்குவது ஆகிய ஊழல்கள் வேகமெடுத்துள்ளன. இதனைக் கண்டறிந்த மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை தற்போது நிறுத்திவிட்டது.

 

dddd

 

தேசிய நெடுஞ்சாலை பணிகளில் பின்பற்றப்பட்டு வரும் ஈ.பி.சி ஒப்பந்த முறைகளுக்குத் தனியார் கண்சல்டண்ட்கள் மூலம் துறையின் அதிகாரிகள், காண்ட்ராக்டர்களின் விருப்பத்திற்கேற்ப மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. இப்படி மதிப்பீடுகளை தயாரிப்பதற்காகவே ஓவுரெட்டி என்பவரை ஆலோசகராக வைத்துள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நெடுஞ்சாலைத் துறையால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் பொறியாளரான இவரை ஊழல் புகாரில் ஏற்கனவே சி.பி.ஐ கைது செய்துள்ளது. அண்மையில் வேறொரு ஊழல் புகாரில் இரண்டாவது எஃப்.ஐ.ஆரும் ஓவுரெட்டி மீது சி.பி.ஐ பதிவு செய்திருக்கிறது.

 

cnc

 

அப்படிப்பட்ட நபரின் மூலம்தான் இந்த வருடம் மட்டும் 12,000 கோடிகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு காண்ட்ராக்ட்டுகள் தரப்பட்டுள்ளன. இவைகளையெல்லாம் சி.பி.ஐ கண்காணித்தபடிதான் இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிரான, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட ஊழல் புகார்கள் குறித்து எந்த விபரங்களை சி.பி.ஐ கேட்டாலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஒத்துழைப்பதில்லை. இதனால் சமீபத்தில் பிரதமர் அலுவலகம் நடத்திய ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையிடமுள்ள ஊழல் புகார்களின் நிலை குறித்த தகவல்களை சேகரிப்பது பற்றிய விவாதம் எழுந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து ஆளும் கட்சியினர் தப்பித்து வருவதாகவும், அத்துறையின் மீது அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ பயமில்லை என்றும் அதிகாரிகள் விவரித்துள்ளனர்‘’ என்கின்றன டெல்லி சோர்ஸ்கள்.

 

இதுகுறித்து, லஞ்சஒழிப்புத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "இந்தத் துறை தன்னாட்சிப் பெற்றதாக இருந்தாலும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீதுள்ள புகார்களை விசாரிக்க வேண்டுமானால் விஜிலென்ஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும். இப்போது விஜிலென்ஸ் கமிஷனர் பொறுப்பை கூடுதலாகக் கவனிக்கிறார் தலைமைச் செயலாளர் சண்முகம். அதனால் அரசின் அனுமதியில்லாமல் ஊழல் புகார்கள்மீது இத்துறையின் அதிகாரிகள் சுதந்திரமாக ஆக்சனில் இறங்கிவிட முடியாது. அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்கிற சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முயற்சிக்கட்டும். சட்டப்பிரிவின் மூலம் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு, ஆக்ஷன் எடுக்கப்படவில்லையே எனக் குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை'' என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்