கேரளா மாநிலம் எர்னாகுளத்திற்கு நீட் தேர்வு எழுதுவதற்கு மகனை அழைத்து சென்ற தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி என்கின்ற ரமேஷ். அவர் பெருகவாழ்ந்தான் அரசு நூலகத்தில் நூலகராக வேலைப்பார்த்து வருகிறார். அவரது மனைவி பாரதிமகாதேவி, மாற்றுத்திறனாளியான இவர் அதே ராயாநல்லூர் அரசு ஆரம்பபள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும், கஸ்தூரிமகாலிங்கம் என்கிற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று நீட் தேர்வு எழுதுவதற்கு திருவாரூரில் இருந்து தனது மகன் மகாலிங்கத்தோடு புறப்பட்டு எர்ணாகுளம் சென்றுள்ளார் ரமேஷ். இன்று காலை 8.30 மணிக்கு தேர்வு எழுதுவதற்கு மகனை தேர்வு அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியில் வந்தவர், நெஞ்சைப்பிடித்தபடி சாய்ந்தார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பதறியடித்துக்கொண்டு முகத்தில் தண்ணீர் தெளித்தும் நல்ல சுவாதீனம் வரவில்லை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்குள்ள மருத்துவர்கள் ரமேஷ் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
தன்னை அழைத்துவந்த தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார் என்கிற செய்தி கஸ்தூரிமகாலிங்கத்திற்கு தெரியாமல் தேர்வு எழுதினார்.
ரமேஷ் நாயுடு சமுகத்தைச்சேர்ந்தவர், பாரதிமகாதேவி முத்தரயர் சமுகத்தைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பாரதிமகாதேவி மாற்றுத்திறனாளி என்பதால் அவரது குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்தும் அதை எதிரத்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இரண்டு குழந்தைகளை அவரவர்களின் விருப்பப்படியே வளர்த்துள்ளனர். மகன் கஸ்தூரிமகாலிங்கம் சதுரங்கவிளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார். 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் ரமேஷ்க்கு ஒத்துக்கல, அதோட சாப்பிடாமலும் இருந்திருக்கிறார். இதுக்கெல்லாம் மத்திய அரசும், நீதிமன்றமும் தான் பொறுப்பு, தமிழர்களை எந்தந்த வகையில் காவு வாங்கனுமோ அப்படி வாங்குறாங்க, மாநில அரசும் அதற்கு இனங்கிப்போகிறது, தேர்வு எழுதுவதற்கு முன்பே ஒரு உயிர், ரிசல்ட் வந்ததும் எத்தனை உசுரோ" என கலங்கினார், ரமேஷின் உறவினர் ஒருவர்.
இறந்துபோன ரமேஷின் மனைவி பாரதிமகாதேவியோ, "எங்க புள்ளைங்களுக்காகவே வாழ்ந்தாருங்க, கஸ்தூரி மகாலிங்கம் திருச்சியில் படிச்சான், டாக்டர் ஆகனும்ங்கிறது அவனோட ஆசை, அதுக்காக கஷ்டப்பட்டான், எம்புருசனும் மகனுக்காக கஷ்டப்பட்டார், இப்ப எங்கள எல்லாரையும் கஷ்டபடவச்சிட்டாரே, இதுக்கெல்லாம் மத்திய மாநில அரசுகள் தான் காரனம்." என அழுதுபுறன்டார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு இருந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா இல்லையா என்ற குழப்பத்துக்கு மத்தியில் நீதிமன்றத்தின் கட்டாய உத்தரவின் படி நீட் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த அனிதா, தேர்வில் வெற்றியடையமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார், அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு மட்டும் தேர்வு மையங்களை மாற்றத் தேவை இல்லை என தீர்ப்பளித்தது.
தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், அஸ்ஸாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் மாணவர்கள் மத்தியிலும் சமுக ஆர்வளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு சமுக ஆர்வளர்கள் உதவிகரம் நீட்டியுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 2500 - 3300 கிமி வரை பயணம் செய்து நீட் தேர்வை எழுதுகின்றனர். ராஜஸ்தானில் தற்போது புழுதிப்புயல் காரணமாக பலர் இறந்திருக்கிறார்கள். அங்குள்ள பெற்றோர்களே தங்களது மாணவர்களை தேர்வு மையத்துக்கு அனுப்புவார்களா என்பது முழுமையாக தெரியாது. இயற்கைப் பேரிடர் காலங்களில் தேர்வை ஒத்திவைப்பது தான் வழக்கமானது. நீட் தேர்வு விவகாரத்தில் மட்டும் அரசு பிடிவாதமாக இருப்பது சரியானதல்ல. எந்தெந்த மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என மாணவர்களுக்கு முன்னதாகவே கூறியிருக்க வேண்டும். தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்னாடி திடீரென தேர்வு மையங்களை கண்டபடி மாற்று மாநிலங்களில் அறிவித்திருப்பது நியாயமற்றது. அப்படி அறிவித்ததால் தான் ஒரு உயிர் போயிருக்கிறது" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.