Skip to main content

சின்னப் பொறியிலிருந்து அடர்ந்த காட்டையே பற்றவைக்கும் அதிசய பதிவு..! - முத்துக்குமாரின் கவிதை களத்தில் யுகபாரதி

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

"வாழ்வை வம்புக்கிழுப்பதும் கவிதைகளோடு வாழ நினைப்பதும் ஒன்றுதான். ஒருவர் தன் முதல் கவிதையை எழுதிய உடனேயே பாரதியாகவும் பிச்சமூர்த்தியாகவும் தன்னை கருதிக்கொள்ள இடமளிக்கும். அதே கவிதைகள் எதார்த்த வாழ்விலிருந்து அவனை நாடு கடத்திவிடுகின்றன. இதுதான் கவிதையின் ஆச்சர்யம். இதுதான் கவிதையின் அபாயமும். எந்த ஒரு நல்ல கவிதையும் வாசிப்பவனைப் பரவசப்படுத்துவதுபோலவே எழுதியவனை இம்சிக்காமல் இருப்பதில்லை. அதனால்தான், ஒரு கவிஞன் கவிதையின் நுட்பங்களை அறிந்து மேலெழுந்து வருகையில் அவன் மனதாலும் உடலாலும் சிதைந்து காணப்படுகிறான். உண்மையில், கவிதைகள் வெளிப்பார்வைக்குத்தான் ரம்மியமானவை. அதை ஆக்கியளிக்கும் கவிஞனுக்கு அப்படியல்ல".என நா.முத்துக்குமாரின் கவிதை பெருவெளியில் பயணிக்க துவங்குகிறார் யுகபாரதி. அவர் கண்களின் வழியே நா.முத்துக்குமாரின் கவி உலகம்: 

 

Na.Muthukumar poems, Complimentary by Yugabharadhi


 

"ஒரு நல்ல கவிதை எழுதி முடிக்கப்பட்ட உடனேயே  தன்னை யாரிடமாவது வாசித்துக்காட்டு என நச்சரிக்கும். நான், எத்தனை செப்பமாக வந்திருக்கிறேன் என்று பிறர் சொல்வதைக் கேட்க, நல்ல கவிதைகளுக்கு அப்படியொரு விருப்பம். என் கவிதைகளை அவனும் அவன் கவிதைகளை நானும் அப்படித்தான் பரிமாறிக்கொள்வோம். கவிதைகளை வாசித்துக் காட்டிவிட்டு எதிரே இருப்பவரின் அபிப்ராயத்தை அறிந்துகொள்ள காத்திருக்கும் அந்தத் தருணங்கள் கவிதைகளைவிடவும் ஆனந்தமளிப்பவை. "பிரமாதம்டா' என்ற ஒற்றை வார்த்தையைப் பெற்றதும்தான் அந்த ஆர்வ மனம் அமைதியடையும். முத்துக்குமார் என்னிடமிருந்து எத்தனையோ பிரமாதங்களைப் பெற்றிருக்கிறான். அவனுடைய "பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதை நூலும் "நியூட்டனின் மூன்றாம் விதி' கவிதை நூலும் பக்கத்திற்கு பக்கம் என்னிடமிருந்து பிரமாதங்களை வாங்கியவை. ஒரு கவிதை சொல்லவரும் செய்தியை நேரடியான மொழியில் சொல்லப் பழகியிருந்த முத்துக்குமார், அவ்விரு தொகுப்புகளால் உலகமே அறியக்கூடிய உன்னத கவிஞர்களில் ஒருவனாகத் தன்னை நிறுவிக்கொண்டான். 
 

"இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்குகள்
ஞாபகங்கள் எரிகின்றன”
என்றொரு கவிதையை முத்து, தன்னுடைய "குழந்தைகள் நிறைந்த வீடு' நூலில் எழுதியிருப்பான். அவனுடைய கவிதைகளும் அத்தகைய விளக்குகளாகவே எனக்குத் தோன்றுகின்றன. ஆனாலும், அவனுடைய ஞாபகங்கள் எரியக்கூடியவை அல்ல. நினைவுகளின் அடுக்குகளில் அவன் கவிதைகள் நிம்மதியாக உறங்கினாலும் என்னை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. என்னை மட்டுமல்ல எல்லோரையும் எழுப்பக்கூடிய ஏராளமான கவிதைகளை அவன் எழுதிவிட்டுப் போயிருக்கிறான். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக, அவன்மூலம் கவிதை தன்னை எழுதிக்கொண்டிருக்கிறது. எல்லாவிதமான சூழல்களையும் அவனுக்கு வழங்கி, கவிதைகள் தன்னை வாழ்வித்துக்கொண்டன. ஒரு கவிதைபோல இன்னொரு கவிதை இல்லை என்னும் விதத்தில் ஒவ்வொரு கவிதையும் தன்னை தனித்துவமாக வெளிப்படுத்திக்கொண்டன.
 

முத்துக்குமார் அதிர்ந்து பேசி நான் அறிந்ததில்லை. அவனுடைய கோபங்கள் கவிதைகளைவிட மென்மையாயிருக்கும். வாழ்வில் அதிருப்தியுற்ற நேரங்களிலும் அவன் கவிதைகள் பூனையின் தலையை வருடிக்கொடுக்கும் குழந்தைகளைப் போலவே இருக்கும். சமூகம் சார்ந்த சிந்தனைகளில்கூட குறும்பும் விளையாட்டுத்தனமும் மிளிரும். இது, யாருக்கும் வாய்க்காத அரிய தன்மை. பாரதி, தன்னுடைய கவிதைகளில் சத்திய ஆவேசம் கொள்ளுமிடத்தில் கவிஞன் என்பதிலும் பார்க்க விடுதலைப் போராளியாகவே வெளிப்படுவார். அதன் காரணமாக அவர் கவிதைகளில் இயல்பாக எரியத்தொடங்கும் நெருப்பு நம்மைச் சுடும். சுட்டெரிக்கும். ஆனால், முத்துக்குமார் தன்னுடைய கவிதைகளில் எங்கேயும் அப்படியான நெருப்புகளைக் கொளுத்த விரும்பியதில்லை. நெருப்பைத் தன்னுள்ளே இழுத்துக்கொண்டு புகையை மட்டுமே வெளியிடுவான். அந்தப் புகையின் வீச்சம் நெருப்பைத் தாண்டிய நெடியை நமக்குள் ஏற்படுத்தும்.

 

Na.Muthukumar poems, Complimentary by Yugabharadhi


 

ஒரு நல்ல கவிதையை எழுதி முடிப்பதற்குள் சிந்தனையில் ஏற்படும் உளைச்சலை சொல்லி மாளாது. உணவோ, உடையோ, உறக்கமோ பிரதானமில்லை என்ற எண்ணத்தை ஒரு நல்ல கவிதை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். எழுதி முடித்த பிறகு அது நல்ல கவிதைதானா என்ற சந்தேகத்தைக் கொடுக்கும். சந்தேகத்திற்கு விளக்கமளிக்க மீண்டும் ஒரு நல்ல கவிதையை எழுதவேண்டியே அவசியம் ஏற்படும். இப்படித்தான் ஒரு கவிஞன் தொடர்ந்து சிந்தனை உளைச்சலுக்குள் சிக்கிக்கொள்கிறான். முத்துக்குமார், இதில் ஒருபடி மேலே போய் எழுதுவதெல்லாம் நல்லதாகவே வரவேண்டும் என எண்ணக்கூடியவன். அது சாத்தியமில்லை என்றாலும்கூட சமாதானம் அடையாதவன். 
 

"குழந்தைகளுடன் பேசும் கலை' என்றொரு கவிதை. முத்துக்குமாரின் ஆகச்சிறந்த கவிதைகளில் ஒன்று.

"கடவுளிடம் பேசுகிறோம்
என்கிற பயமே இல்லாமல்
குழந்தைகளிடம் பேசுகிறார்கள்
வளர்ந்த மனிதர்கள்”
என்று ஆரம்பிக்கும் அக்கவிதை ஒரு குழந்தையிடம் நம்முடைய உரையாடல்கள் எத்தனை போலியான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது என்பதைப் பேசும். ஒரு குழந்தையைக்கூட கொஞ்சத் தெரியாத சமூகத்தை அதைவிட காத்திரமாகச் சொல்லிய கவிதையை வேறுயாரும் படைக்கவில்லை. குழந்தைகள் நிறைந்த சூழலை முத்துக்குமார் விரும்பினான். தன்னையும் பொம்மையாகப் பாவித்து அவர்கள் விளையாட மாட்டார்களா என ஏங்கினான். இன்னும் சொல்லப் போனால், குழந்தைகளால் தான் உடைபடுவதையும் உடைக்கப்படுவதையும் குதூகலத்தோடு ஏற்றுக்கொண்டான். குழந்தைகளால் விளையாடப்படுவது குழந்தைகளால் விளையாடப்படுவது அல்ல. அது, கடவுளால் விளையாடப்படுவது என்றே அவன் கருதினான்.

"எல்லாக் காலத்திலும்
குழந்தைகளின் வானத்திலிருந்து
இசையுடன் உதிர்ந்துவிழுகிறது
ட்விங்கிள் ட்விங்கிள்
லிட்டில் ஸ்டார்”  என்பான்.
பால்யத்தில் தனக்குக் கிடைக்காமல் போன விளையாட்டுப் பொம்மைகளும் அம்மாவின் அரவணைப்புகளும் அவன் கவிதைகளில் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கின்றன. குழந்தைகளின் உலகத்தை திறக்கும் சாவியாக கவிதைகளை அவன் கையாண்டான். அதே கவிதையில் குழந்தைகளுடன் பேசுகையில் பிரபஞ்சத்தின் இருப்பு ஒரு புள்ளியாக சுருங்கிவிடுகிறது என எழுதியிருப்பான். குழந்தைகள் வளர்ந்தவர்களையும் குழந்தையாக்கிவிடுகின்றனர் என சொல்வதற்கு ஏற்ப அவனுடைய குழந்தைகள் பற்றிய கவிதைகள் நம்மையும் பால்யத்தை நோக்கி பயணப்பட வைக்கின்றன. மூக்கொழுகும் குழந்தைகளை அசூயை இல்லாமல் அள்ளிக்கொஞ்சும் ஒருவனால்தான் இப்படியான கவிதைகளை எழுதமுடியும். மயிலிறகுகளை சேகரித்து குட்டிபோடும் என நம்புகிற இதயம் உள்ளவனாக அவன் இருந்தான். அதைவிட அந்த மயிலிறகுகள் உண்ணுவதற்கு புத்தகங்களின் இடுக்குகளில் தானியமிடுபவனாகவும் அவன் இருந்திருக்கிறான். எனவேதான், எல்லாப் பள்ளிக்கூட வாசலிலும் கைகள் நடுங்க வேர்க்கடலை விற்கும் பாட்டிகளை அவனால் எழுத முடிந்தது. "சாப்பிடும்போது புத்தகம் படிக்காதே. ருசி தெரியாது' எனத் திட்டும் வீடுகளை விவரிக்க முடிந்தது. அத்தனை ரயில் நிலைய சிமெண்டு பெஞ்சிலும் படிந்திருக்கும் பறவைகளின் எச்சங்களைப் பாசத்தோடு பார்க்கமுடிந்தது. அடகுக்கடை கம்மலில் உலராமல் ஒட்டியிருக்கும் அதைக் கழற்றிக்கொடுத்த பெண்ணின் கண்ணீரை அக்கறையோடு துடைக்க முடிந்தது. மரண வீட்டில் யாருக்கும் சொல்லாமல் சாப்பாட்டுக் கடை நோக்கி நகரும் ஒருவனை சந்திக்க முடிந்தது. முத்துக்குமார், மெல்லிய உணர்வுகளின் மேலிருந்துதான் தன் கோட்டையைக் கட்டி எழுப்பினான். திரைப்பாடல் வரலாற்றில் அத்தகைய மெல்லிய உணர்வுகளை அவனுக்கு முன்னே யாரும் அவ்வளவு துல்லியமாகப் படம்பிடிக்கவில்லை.
 

"தாயம் ஆடும் பெண்கள்' என்னும் கவிதை குமுதம் இதழில் வெளிவந்தது. தொண்ணூறுகளுக்குப் பிறகு தாயம் என்றழைக்கப்படும் விளையாட்டைப் பற்றி நம்முடைய பெண்களுக்குத் தெரியாமல் போனது. மதிய உணவு முடித்த மத்தியதர குடும்பத்துப் பெண்கள், வானொலியில் ஒலிச்சித்திரம் கேட்டுக்கொண்டே தாயம் ஆடிய அழகுகளை இன்றைய நவீன உலகம் இழந்துவிட்டது. தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின் நாம் இழந்த எத்தனையோ அற்புதங்களில் தாயமும் ஒன்று, வீட்டுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு தங்கையுடனோ நாத்தனாருடனோ நம்முடைய பெண்கள் அவ்விளையாட்டை ஸ்நேகத்தோடு விளையாடினார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வெட்டக் கொடுத்து காய்களை நகர்த்துகையில் அந்தப் பெண்கள் தன் வீட்டின் ஆளுமை பொருந்திய நடவடிக்கைகளை கற்றுக்கொள்வார்கள். ஒருவரை அனுசரித்து வாழவும் ஒருவரை அகமகிழ்ந்து வரவேற்கவும் அவ்விளையாட்டு சொல்லித்தரும். ஒவ்வொரு கட்டங்களாகத் தாண்டித் தாண்டி பூரண கட்டத்தை நோக்கி வந்தடையும் வித்தைகளை அவர்கள் அவ்விளையாட்டில் இருந்தே படித்துக்கொண்டார்கள். முத்துக்குமார் அக்கவிதையை முடித்திருந்த விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.
"கடைசிவரை
எல்லாப் பெண்களுக்கும்
பிடிபடுவதே இல்லை,
சமையலறைக் கட்டங்களைத்
தாண்டி மலையேற
என்றைக்குத் தாயம் விழும்?”

ஒரு சின்னப் பொறியிலிருந்து அடர்ந்த காட்டையே பற்றவைக்கும் அதிசயமான பதிவுகள் அவனுடையன. சாதாரண நிகழ்வுகளிலிருந்து சமூகத்தை நோக்கி அவன் வீசிய பார்வைகள் நவீன கவிதைகளை வெளிச்சப்படுத்தின.
 

"கல்லறையில்கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்த்திருப்பேன்' என்று தீபாவளி திரைப்படத்தில் எழுதியிருப்பான். செல்மாவின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கலீல் ஜிப்ரான் எழுதிய முறிந்த சிறகுகளுக்கு நிகரான அவ்வரியை ஒரு திரைப்பாடலில் எழுதும் ஆற்றலை முத்துக்குமாருக்கு முன்னும் பின்னும் வேறு யாரும் பெற்றிருக்கவில்லை. ஆனந்த யாழை மீட்டிய அவனுடைய இதய நரம்புகள் அன்பினால் பின்னப்பட்டவை. இந்த மரணம் அவனை அவ்வளவு எளிதாக நம்மிடமிருந்து அறுத்துவிடாது. வாழ்வை வம்புக்கிழுப்பதும் கவிதைகளோடு வாழ நினைப்பதும் ஒன்றுதான் என்று ஆரம்பத்தில் நான் சொல்லியதுபோல வாழ்வு அவனைத் தோற்கடித்தாலும் கவிதைகள் அவனை ஜெயிக்க வைக்கின்றன. எதார்த்த வாழ்விலிருந்து அவன் நாடு கடந்துவிட்டாலும் எல்லா வீடுகளிலும் அவன் செல்லக் குழந்தையாகவே பார்க்கப்படுவான். அம்மா பிள்ளையாக இருக்க விரும்பிய அவன் அம்மாக்கள் எல்லோருமிடும் ஆசைமுத்தமாக அவதரிப்பான். நினைவுகளை நீக்கிவிட்டால் வாழ்வில் ஒன்றுமில்லை. அவன் நம்முடைய வாழ்வின் நினைவுகளிலிருந்து நீங்காதவன். பறந்துகொண்டே இருக்கப் பிரியப்பட்ட அவன், மரணத்திலும் தேங்காதவன். முத்துக்குமார் என்பது பெயரல்ல. பிரியம்."
 

-கவிஞர். யுகபாரதி