கரோனா வந்ததில் இருந்து ஆளாளுக்கு மணியம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நாம் நினைக்கிறோம், தமிழ்நாட்டுக்கு ஒரு இ.பி.எஸ். தான் இருக்கிறார் என்று. உண்மை அப்படி அல்ல, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு இ.பி.எஸ். இருக்கிறார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கின்றது. அது ஒரு இன்ஸ்பெக்டராக இருக்கட்டும், எஸ்.பி.யாக இருக்கட்டும், ஆட்சியராக இருக்கட்டும், அவர்கள் எடுப்பதுதான் முடிவாக இருக்கின்றது. மக்களாக இருக்கும் நாம் என்ன பாவம் செய்தோம். ஒரு பக்கம் கரோனா நம்மை கொல்கிறது. மூன்று நாட்களில் கரோனா ஒழிந்துவிடும் என்று கூறிய முதல்வர் தற்போது கடவுளிடம் பாரத்தைப் போட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்.
நம்மைவிட்டு கரோனா எப்போது போகும் என்று தெரியவில்லை. அதைவிட பெரிய கரோனா யார் என்றால் சில போலிஸ்காரர்கள். நான் அனைத்து போலிஸ்காரர்களையும் சொல்லவில்லை. சிலர் இருக்கின்றார்கள். சில போலிஸ்காரர்கள் ஆங்காங்கே கொடூரன்களாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு 2018ஆம் ஆண்டு திருச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ராஜா என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறார். அவரிடம் ஹெல்மட் இல்லை என்ற காரணத்திற்காக அவர்களைத் துரத்திச் சென்று உதைத்ததில் அந்தக் கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மக்கள் எல்லாம் போராடுகிறார்கள், அதற்குப் பயந்து ஒரு வழக்கு போட்டார்கள். கொஞ்ச நாள் உள்ளே இருந்துவிட்டு அந்த ஆள் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு தற்போது வெளியே வந்துவிட்டார்.
கோவையில் இதே மாதிரி ஒரு சம்பவம் நடைபெற்றது. கடை விற்றுக் கொண்டிருந்த அம்மாவிடம் காவலர்கள் கடையை மூடு என்று சொன்னார்கள். கூட்டம் அதிகம் இருந்த அந்த நேரத்தில் அந்த அம்மாவின் மகன் காவலர்களைப் பார்த்து ஏதோ கூறியுள்ளான். இதனால் அவனை மாடு அடிப்பதைப் போல் காவலர்கள் அடித்தார்கள். அந்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்திருப்போம். காவலர்களுக்கு மனசாட்சியே இருக்காதா? அவர்களுக்கும் குடும்பம், அக்கா, தங்கைகள் இருக்கத்தானே செய்கிறார்கள். அப்படி, என்ன அதிகாரம் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் அதனைக் காவலர்கள் தான் நடைமுறை படுத்த வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக இப்படி அராஜகம் செய்ய வேண்டுமா?
பொள்ளாட்சி வழக்கில் குற்றவாளிகள் மீது இவ்வளவு அக்கறையை காவலர்கள் காட்டினார்களா, லத்தியை கண்ட இடத்தில் வைத்து அடித்தார்களா, துன்புறுத்தினார்களா என்றால் அப்படி எதுவுமே இல்லை. ஏனென்றால் அது இவர்கள் பார்வைக்குத் தவறில்லை. ஆனால் தூத்துக்குடி வியபாரிகள் பென்னீக்ஸ் மற்றும் ஜெயராஜ் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக இவர்களுக்குத் தெரிகிறார்கள். என்ன குற்றம் செய்தார்கள். ஊரடங்கு நேரத்தில் 5 நிமிடம் கடையைக் கூடுதலாகத் திறந்துவிட்டார்கள். இதுதான் அவர்கள் செய்த குற்றம். வேறு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 1.30 மணி வரை அடித்துள்ளார்கள்.
அவர்களுடைய அம்மா காவலர்களிடம் கதறி இருக்கிறார்கள். ஆனால் அது எதையும் அவர்கள் கேட்கவில்லை. 'போலீஸ் பிரண்ட்ஸ்' என்று ஒவ்வொரு காவல்நிலையத்திலும் சிலர் இருப்பார்களாம். அவர்களும் சேர்ந்து இவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கும் சத்தம் வெளியே தெரு முழுவதும் கேட்டுள்ளது. வலியில் அவர்கள் அலறி உள்ளார்கள். ஒருத்தரும் உதவிக்கு வரவில்லையே என்று அந்த அம்மா மறுகுகிறார்கள். அடிப்பவர்கள் யாரும் அவர்களிடம் இரக்கமே காட்டவில்லை. அப்படி என்ன தப்பு செய்துவிட்டார்கள் அவர்கள் இருவரும்? இந்த ஊரடங்கு நேரத்தில் மக்களிடம் கேளுங்கள் கரோனா கொடியதா அல்லது ஊரடங்கில் போலிஸ்காரர்கள் செய்வது கொடூரமா என்று, அவர்கள் காவலர்களைக் கைகாட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இதற்கெல்லாம் அவர்கள் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிவரும் என்பது மட்டும் உண்மை.