Skip to main content

தமிழகத்தை தட்டி எழுப்பிய நக்கீரன்!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

ரு காணொலி, கோடிக்கணக்கான தமிழர்களைத் தட்டி எழுப்பியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் பற்றிய நக்கீரன் ஆசிரியரின் தார்மீக கோபத்துடனான வார்த்தைகள் நிறைந்த வீடியோ தமிழகத்தின் குரலாக ஒலித்து சமூக வலைத்தளங்கள் வழியே ஒவ்வொருவர் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் முதல், பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டும் அந்த உரை... போராட்டக் களத்தில் ஆயுதமாகியுள்ளது.
jawahar
இரா.ஜவகர் -மூத்த பத்திரிகையாளர்


""அந்த அலறல் குரல் தூங்க விடாமல் செய்த நிலையில்... அவர் களுக்காக குரல் கொடுக்கவும் நீதி கேட்கவும் நான் இருக்கிறேன் என்பதுபோல ஒலிக்கிறது தம்பி கோபாலின் தார்மீகக் கோபக்குரல். அதைக்கேட்ட பிறகுதான் இன்று நிம்மதியாகத் தூங்கினேன்.
nellaikannan
நெல்லை கண்ணன்


தம்பி... நிறைய பிள்ளைகளை அந்த நாய்கள்ட்ட இருந்து காப் பாத்திட்டீங்கய்யா... வேற எதுவும் வெளியே வந்துடக்கூடாதுன்னு பதறுறாங்களே... கேஸ் போட்டுருக் காங்களா... நான் வெளிய வந்து பேசுவேன்... நாங்க எல்லாரும் உங்க பக்கம் இருக்கோம்.

கனிமொழி எம்.பி.
kanimozhi
பொள்ளாச்சி கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் இதழின் ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால், தங்களுடைய நிருபரை பொள்ளாச்சி ஜெயராமன் மிரட்டுவதாகக் குற்றம்சாட்டுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்ந் திருக்கும் நீங்கள், மக்களின் கேள்வியை பத்திரிகையாளர்கள் மூலமாக முன்வைத்தால் அதற்கு பதில்சொல்ல வேண்டியது உங்களுடைய கடமை. என்னைக் கேள்விகேட்க நீ யார் என்று கேட்டிருக்கிறீர்கள். பத்திரிகையை மிரட்டுகிறாய் என்றால் உங்களுக்கு என்ன திமிர்?

சுப.வீரபாண்டியன் -திராவிட இயக்கத் தமிழர் பேரவைsubavee

இது நக்கீரனின் அறச்சீற்றம்! பல சான்றுகளோட எத்தனையோ சம்பவங்களைப் பற்றி செய்தியா பண்ணியிருக்கீங்க. ஆனா, இது அத்தனை சாதாரண விஷயமல்ல. நக்கீரனுக்கு என் தலை வணக்கம்!

வன்னியரசு -விடுதலை சிறுத்தைகள் கட்சி
vanniarasu
அண்ணன்… உங்க அறச் சீற்றத்தை வீடியோவுல பார்த்து ஆடிப் போயிட்டேன். ஒரு மனுஷனுக்குள்ள இத்தனை கோபம். அந்தக் கோபத்தைப் பார்த்து எல்லோரும் ஸ்தம்பித்துப்போய் நின்னோம். சாதாரண செய்தியாக இதைக் கடந்துபோகாமல், பாதிக்கப்பட்டவர்களின் குரலாய், பாதிக்கப் பட்டவர்களோடு கரம் சேர்க்கும் இயக்கமாய் நக்கீரன் மாறியதைப் பார்த்தேன். நக்கீரன் தந்த நம்பிக்கைதான் இந்த விவகாரத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு மிகப்பெரிய ஆயுதம்!

வே.மதிமாறன் -திராவிட இயக்க எழுத்தாளர்mathimaran

ஜெயலலிதாவோடு கடும் பகை இருந்தபோதும் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெ. அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது நக்கீரனின் அரசியல் கண்ணோட்டத்திற்கு அடையாளம். நிர்மலாதேவி மாணவிகளை விபச்சாரத்திற்கு அழைத்ததையும் கவர்னர் மாளிகை தொடர்புகளையும் அம்பலப்படுத்தி யும், பிறகு நிர்மலாதேவியின் உயிரை பாது காத்ததிலும் நக்கீரனின் பங்களிப்பு முக்கிய மானது. இப்போதும், எல்லோரும் பேசமறுத்த பொள்ளாச்சி பயங்கரத்தை, முதன்மை பிரச்சினையாக மாற்றியதும் நக்கீரனே. இதுவும் தமிழக ஆட்சி அதிகாரத்தை திசை மாற்றும். நக்கீரனையும், ஆசிரியர் கோபாலையும் தவிர்த்து 30 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாறை எழுத முடியாது.
kushboo
குஷ்பு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்


நக்கீரன் இந்த வீடியோவை வெளியிட்டது தவறு என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், கோயம்புத்தூர் எஸ்.பி. பாதிக் கப்பட்ட பெண்ணின் பெயரையே வெளி யிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியே வரவில்லை என்றால் பொள்ளாச்சி ஜெயராமன் போன்றவர்கள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்திருப்பார்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்ற விழிப்புணர்வை நக்கீரன் வெளியிட்ட வீடியோ நம் பெண்களுக்குத் தந்திருக்கிறது.

எவிடென்ஸ் கதிர் -சமூக செயற்பாட்டாளர்
evidenckathir
பாலியல் சீண்டல் விவ காரங்களில் உச்சநீதிமன்றம் விதித் துள்ள விதிமுறைகளுக்கு கட்டுப் பட்டே பொள்ளாச்சி கொடூர விவகாரத்தில் நக்கீரன் வீடியோவை வெளி யிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை நக்கீரன் பாதுகாத்திருக்கிறது. குற்றவாளிகளை அடையாளம் காட்டி யிருக்கிறது. அரசியல், அதிகார பலம் பொருந்திய இந்த வழக்கை வெளியில் கொண்டுவருவது அத்தனை எளிய காரியமல்ல. தனிமனித வலியை சமூக வலியாக மாற்றுவதே ஒரு பத்திரிகையின் பணி.
suba
சுபா எழுத்தாளர்


நீங்க இந்த விஷயத்தைக் கையில் எடுக்கலைன்னா அப்படியே அமுங் கிப் போயிருக்கும். கத்தி, அருவா, வெட்டுக்குத்துன்னு நிறைய க்ரைம் கதைகளை நாங்க எழுதியிருக்கோம். ஆனா, எங்களையே அந்த வீடியோ கலங்க வைச்சிட்டது. என் நெஞ்செல்லாம் அடைச்சிருச்சு. "பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா.. வலிக்குது அண்ணா'ன்னு கெஞ்சுற புள்ளைய சீரழிக்க எப்படி அந்தப் பாவிங்களுக்கு மனசு வந்துச்சோ. இதைத் துணிச்சலோட வெளியே கொண்டுவந்த நக்கீரனுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்!

காந்தி கண்ணதாசன்
gandhidasan
நீங்க பொள்ளாச்சி விவகாரம் சம்பந்தமா வீடியோவுல பேசியது எதுவுமே, பத்திரிகை விளம்பரத் துக்கானது கிடையாது. ஒரு தகப்பனா, ஒரு சகோதரனா நீங்க நின்னு பேசி யதை என்னால மறக்க முடியலை. எல்லோரோட உணர்ச்சிகளையும் தூண்டி விடலாம். நீங்கதான் மத்தவங்க உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருக்கீங்க. வீடியோவோட இறுதியில மனசோட அடியாழத்துல இருந்து பேசுனீங்க. மத்த மீடியாக்களைப் போல வெறுமனே செய்தியோட நிறுத்திக்காம, பிரச்சனைக்கான தீர்வை சொன்னதுக்காகவே நக்கீரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன்.
kavithabarathi
கவிதா பாரதி -இயக்குநர்


பெருங்கொடுமையை வெளிக் கொண்டு வந்த நக்கீரனின் செயல் பாராட்டுக்குரியது. நக்கீரன்கோபால் அண்ணனுக்குத்தான் இந்த துணிவு வரும்.

டான் அசோக், எழுத்தாளர்donashok

நக்கீரன் கோபால் அண்ணனின் காணொலியை பார்த்தேன். பதற் றத்தில் அவர் கைகள் நடுங்குகிறது. கோபம் அவர் குரலில், வார்த்தை களில் வெளிப்படுகிறது. நக்கீரனும் இல்லை என்றால் தமிழ்நாடு நக்கிக்கொண்டுதான் போகும்.
pushy
பியூஷ் மனுஷ், சமூக செயற்பாட்டாளர்


பொள்ளாச்சி விவகாரம் 25 நாட்களாக அப்படியே இருந்தது. நக்கீரன்தான் அந்த வீடியோவை -பாதிக்கப்பட்ட பெண்களின் முகம் அனைத்தையும் மறைத்து வெளியிட்டது. நக்கீரன் கோபால் அவர்கள் அந்த வீடியோவிலேயே “ரொம்ப வேதனையுடன்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்’’ என மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் இன்னும் பல ஆயிரம், லட்சம் பெண்களின் உயிர்களைக் காக்க முடியும்.

அமீர், இயக்குநர்
ameer
சமூகத்தில் நடக்கும் பேரவலங்களை பலரும் கடந்து சென்று கொண்டிருக்கும்போது, யாராவது அவற்றை வெளிக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நக்கீரன் அதைத்தான் செய்தது. ஒரு ஊடகவியலாளர் என்பதையும் தாண்டி, ஒரு பெண்ணின் தகப்பனாக நக்கீரன் கோபால் அந்தப் பணியைச் செய்திருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

பொன்வண்ணன் திரைக்கலைஞர்
ponvannan
யாருக்கும் தெரியாமப் போயி ருக்கக்கூடிய விஷயத்தை வெளிக் கொண்டுவந்து பெரிய அலர்ட்டை உண்டு பண்ணிட்டீங்க. இதை ஒரு இஷ்யூவா மட்டுமே பார்க்காம, பெரியளவுல மிஸ்யூஸ் பண்றதைத் தடுத்துருக்கீங்க. "நீட்'ல பாதிச்ச அனிதாவின் முகமும், பொள்ளாச்சி சம்பவத்துல பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தமும் நம்ம உறவுகள்தான்னு நினைக்கும்போது மனசு பதைபதைக்குது. நீங்க இந்த இஷ்யூ மட்டுமில்லாம, எதிர்கால சமூகம் சோஷியல் மீடியாக்களால எந்தளவுக்கு பாதிக்கப் பட்டிருக்குன்னு கேள்வியைக் கேட்பதற்கான பாதையை உண்டு பண்ணிட்டீங்க. என்ன பண்றீங்கன்னு பெற்றோரை புள்ளைங்க கிட்ட கேட்க வைச்சிருக்கீங்க!
seenuramasamy
சீனுராமசாமி, இயக்குநர்


சமூக அவலங்களை, அநீதிகளை துணிச்சலாக அம்பலப் படுத்துவதில் எனக்கு தெரிந்து நக்கீரன் இதுவரை பின்வாங்கிய தில்லை. நக்கீரன் கோபால் இந்த வீடியோவை வெளியிட்டது அவரின் பத்திரிகை விற்பனையை கூட்டுவதற்குதான் என்ற பேச்சு களை எல்லாம் கேட்டேன். ஆனால், இணைய தளத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோ விற்கும், அச்சு பத்திரிகை விற்பனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இப்படி அவரின் நோக்கத்தை களங்கப்படுத்துவது தவறு. தமிழ் கூறும் நல் உலகம் அவரின் முயற்சிக்கு எப்போதும் துணைநிற்கும்.
thambi
தம்பி ராமையா, நடிகர்


பெண்ணியத்தின் கண்ணியத்தை காக்க நக்கீரன் மேற்கொண்ட நல்ல முயற்சி இது. எந்த விஷயமாக இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்க வேண்டும் என்று சொல்லு வார்கள். அந்த வகையில் நக்கீரன் இன்று தொட்டுவைத்த இந்த புள்ளி, புயலாக மாறி தமிழகம் முழுக்க பெண்களுக்கு ஒரு விழிப் புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும், பெண்களைப் பெற்ற அனைவரும் நக்கீரனுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

மகிழ் திருமேனி, இயக்குநர்
mahil
இரத்தத்தை உறையவைக்கும், கொதிக்கவைக்கும் பொள்ளாச்சி வன்கொடுமை நிகழ்வை நக்கீரன் ஆசிரியர் கோபால், துணிச்சலாக எவ்வித வளைந்து கொடுத்தலுக் கும் ஆளாகாமல், தயக்கத்துக்கும் அடி பணியாமல் தைரியமாக அம்பலப்படுத்தியதன் காரணமாகத்தான் இன்று தமிழ்நாடே இந்த செய்தியை கேட்டு பதறிப்போயும், கொதித்துப்போயும் இருக்கிறது. நீண்டகால நக்கீரன் வாசகராக நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.
ranjithjayakodi
ரஞ்சித் ஜெயக்கொடி, இயக்குநர்


ஒரு பெரிய அபாயம் ஒன்று நடக்கும்போது அதனை யாராவது ஒருவர் வெளியுலகத்திற்கு சொல்லிதான் ஆகவேண்டும். அந்தப் பணியை நக்கீரன் செய்கிறது என்பதில் மகிழ்ச்சி என்பதைவிட ‘பெருமை’ என்றுதான் சொல்ல வேண்டும்.

பனிமலர், பத்திரிகையாளர்panimalar

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் வீடியோ வெளியிட்டது ஒரு வகையில் சரிதான். ஒருவேளை இந்த வீடியோ வெளிவராமல் இருந்திருந்தால் இன்று இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
 

Next Story

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார். 

Next Story

சிக்கிய கூடுதல் வீடியோக்கள்; 2 வருடம் கழித்து தலை காட்டிய பொள்ளாச்சி கொடூரர்கள்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
More videos stuck; Pollachi case

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகையை பறித்ததாக கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பல பெண்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது சில வீடியோக்கள் மூலம் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் திருநாவுக்கரசு என்கிறவன் முக்கிய குற்றவாளியாகவும், அதைத் தொடர்ந்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டங்களின் விளைவாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இன்று சேலம் மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு 9 பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தவிர்த்து வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட கூடுதல் வீடியோ ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறிப்பாக இன்றைய தினம் 30 வீடியோக்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.