Skip to main content

“என் குழந்தை குடியுரிமையோடு பிறக்க வேண்டும்” - 1400 கி.மீ. சைக்கிளில் பயணிக்கும் இலங்கைத் தமிழர்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

“My child should be born with citizenship”- 1400 km. A Sri Lankan Tamil traveling on a bicycle

 

சொந்த நாட்டில் (ஈழம்) வாழ வழியின்றி அகதியாக இந்தியாவிற்குள் நுழைந்து பல வருடங்கள் அங்கேயும் அகதி என்ற முத்திரையோடு வாழ்ந்து நமக்கென்று ஒரு குடியுரிமை வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து 15, 20, 30 நாட்கள் கடினமான கடல் பயணம் செய்து ஆஸ்திரேலியா செல்லும் ஈழத் தமிழர்களில் பல ஆயிரம் பேர் கடலுக்குள்ளேயே மடிந்து போனாலும் சில ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளுடன் ஆஸ்திரேலியா கடல் கரை ஏறும்போது விடும் நிம்மதி பெருமூச்சில் இனி எமக்கென்று ஒரு நாடு உள்ளது என்பது அனலாக வரும்.

 

ஆனால் கடந்த 12 வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாகச் சென்ற சுமார் 12 ஆயிரம் பேருக்கு இன்னும் நிரந்தர விசா கிடைக்காததால் தங்கள் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் உணவு, உறைவிடம், மருத்துவச் செலவுக்கே சரியாகப் போவதால் தங்களின் கனவான குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் தான் எங்களுக்கு நிரந்தர விசா கொடுங்கள், மருத்துவ அடையாள அட்டை கொடுங்கள் என்று தொடர்ந்து போராடும் இலங்கை, ஈரான் மக்கள் கடந்த மாதம் 22 ஆம் தேதி 22 பெண்கள் பாராளுமன்றம் நோக்கி 670 கி.மீ நடைப் பயணத்தை தொடங்கி கடினமான பாதைகளில் வலிகளைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.

 

“My child should be born with citizenship”- 1400 km. A Sri Lankan Tamil traveling on a bicycle

 

இவர்கள் எதிர்வரும் 18 ஆம் தேதி கான்பராவில் பாராளுமன்றம் முன்பு கூடி நின்று கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தினுஷன் என்ற இளம் கிரிக்கெட் வீரரும் 1400 கி.மீ. சைக்கிள் பயணத்தை தொடங்கி சென்று கொண்டிருக்கிறார்.

 

ஆஸ்திரேலியாவில் தனி ஆளாக சைக்கிள் பயணத்தில் உள்ள தினுஷன் நம்மிடம், “இலங்கையில் பிறந்த நான் அங்கே வாழ முடியாது என்ற நிலையில் சின்ன வயதில் பெற்றோருடன் இந்தியா வந்து 22 ஆண்டுகள் இந்தியாவில் பல முகாம்களில் வாழ்ந்தோம். உணவும் வசிப்பிடமும் கொடுத்த இந்திய அரசாங்கம் எங்களுக்கு குடியுரிமை தரவில்லை. நான் அனுமந்தை அரசுப் பள்ளியில் படிக்கும் போது தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கிய போது என்னோடு 3 மாணவர்களுக்கு தரவில்லை. எங்களுக்கு மனசு வலித்தது. நமக்கென்று ஒரு நாடு இருந்தால் இப்படி ஒதுக்கப்பட்டிருப்போமா? ஓ.சி என்று எங்களுக்கு சான்று கொடுத்தார்கள் சக மாணவர்கள் எங்களை 'ஓ.சி.' என்றே அழைக்கும் போது எங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும். அந்த வலிகளை பொறுத்துக் கொண்டு 22 ஆண்டுகள் வாழ்ந்தோம்.

 

“My child should be born with citizenship”- 1400 km. A Sri Lankan Tamil traveling on a bicycle

 

அதன் பிறகு தான் கடுமையான பயணம் என்பதை உணர்ந்தே கடலில் பயணித்தோம் 10 நாளில் வந்தடைய வேண்டும். ஆனால் 14 நாட்கள் ஆனது. திசைகாட்டி பழுதானதால் 2 நாள் கடலில் தவித்து ஒரு விமானம் வட்டமடித்து இறங்கியதைப் பார்த்து திசையறிந்து சென்றோம். நாங்கள் வந்தவுடன் உணவு கொடுத்து உபசரித்து தங்க வைத்தார்கள். சில மாதங்களில் தற்காலிக விசா கிடைத்தது. ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. ஆனால் 6 மாத விசா தான். விசா காலம் முடிந்ததும் வேலை கேள்விக்குறியாகும். மறுபடியும் விசா பெற வேண்டும். இப்படியே 12 ஆண்டுகள் ஓடிவிட்டது. இதற்காகத் தான் நிரந்தர விசா வேண்டும் என்கிறோம்.

 

எனக்கு 33 வயதாகிறது எனக்கு பிறக்கும் குழந்தை குடியுரிமையோடு ஒரு நாட்டின் குழந்தையாக பிறக்க வேண்டும். அகதியின் குழந்தையாக பிறக்கக் கூடாது என்பதற்காக நிரந்தர விசா கிடைக்கும் வரை திருமணம் வேண்டாம் என்று மறுத்து வருகிறேன். நான் ஒரு கிரிக்கெட் வீரர் பல நூறு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன். இந்தியாவில் பல போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆஸ்திரேலியாவிலும் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. எல்.எம்.எஸ். கிரிக்கெட் அணிக்கு என்னை தேர்வு செய்து அழைத்தார்கள். தற்காலிக விசாவில் இருப்பதால் பாஸ்போர்ட் எடுக்க இயலாது. இதனால் அந்த வாய்ப்புகள் என்னை விட்டுப் போனது. 

 

“My child should be born with citizenship”- 1400 km. A Sri Lankan Tamil traveling on a bicycle

 

ஆஸ்திரேலிய அரசாங்கம் நல்ல அரசு தான். எங்கள் கோரிக்கைகள் அவர்களின் கவனத்திற்கு முழுமையாக போனால் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகத் தான் அக்டோபர் 18 ஆம் தேதி பாராளுமன்றம் முன்பு பல ஆயிரம் அகதிகள் ஒன்றுகூடி அமைதியான முறையில் எங்களுக்கு நிரந்தர விசா கொடுங்கள் என்று கேட்க இப்போது 22 பெண்கள் 670 கி.மீ நடந்து வருகிறார்கள். நான் 1400 கி.மீ சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறேன்.

 

சைக்கிள் பயணம் எப்படி உள்ளது?


இது ரொம்பவே கடுமையான பயணமாக உள்ளது. நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாயைிலேயே என் பயணம் இருப்பதால் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லும் போது என்னைத் தள்ளிவிடுகிறது. பல இடங்களில் நிலை தடுமாறி சுதாரித்து வந்தேன். சில நேரங்களில் சைக்கிள் டயர் பஞ்சராகி சிரமப்பட்டு நானே பஞ்சர் ஒட்டி வந்திருக்கிறேன். காட்டுப் பகுதியில் வன விலங்குகள், பாம்புகளிடம் இருந்து தப்பி வந்தேன். உணவுக்காக கிடைக்கும் இடங்களில் வாங்கி வைத்துக் கொண்டு கிடைக்கும் இடங்களில் தங்கி கால் வலிக்கு மருந்து போட்டுக் கொண்டு சைக்கிள் மிதிக்கிறேன். எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் எங்களின் அகதி என்ற சொல்லை மாற்றத் தான். இன்னும் சில நாளில் (அக்டோபர் 18) என் பயணம் நிறைவு பெறும். அன்று எங்களுக்கான சுதந்திரம் கிடைக்கும் என்ற கனவோடு அனைத்து வலிகளையும் பொறுத்துக் கொண்டு பயணிக்கிறேன்.

 

18 ஆம் தேதி எங்கள் சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கான்பரா பாராளுமன்றம் நோக்கி வருகிறார்கள். பல ஆயிரம் பேர் வர முடியாவிட்டாலும் அந்தந்த இடங்களில் இருந்தே எங்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஊடகங்களும் எங்களுக்காக குரல் கொடுங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்” என்றார்.

 

நிரந்தர விசா கோரிக்கை பயணம் வெற்றி பெற வாழ்த்துகளைக் கூறினோம்.