Skip to main content

சீனர்கள் தமிழை அதிகமா கத்துக்கிட்டு ஊக்குவிக்குறாங்க; தமிழர்கள்? - முத்து கனகலெட்சுமி ஆதங்கம்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

 Muthu Kanagalakshmi Interview

 

நம்முடைய தாய்மொழியை வைத்து மட்டுமே உலகம் முழுவதும் பயணிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டி, வெளிநாட்டவர்க்கும் தமிழ் கற்றுக்கொடுக்கும் அரும்பணியைச் செய்த இடைநிலை ஆசிரியர், முனைவர் முத்து கனகலட்சுமி அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...

 

இயல்பிலேயே எனக்கு ஆய்வு மனப்பான்மை உண்டு. 2001 ஆம் ஆண்டு தொடங்கிய என்னுடைய மொழி ஆய்வு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உச்சரிப்பின் முக்கியத்துவத்தை நாம் மறந்த காரணத்தினால் தான் நம்முடைய குழந்தைகளுக்கு சரியாகத் தமிழ் பேச வரவில்லை. கடந்த நூறு ஆண்டுகளாக நாம் தமிழைத் தவறாகத் தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். வரி வடிவம் என்பது எழுதவும் பயன்படும், வாசிக்கவும் பயன்படும். இதையே நான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். 12 நாட்களில் இதைக் கற்றுக்கொள்ளலாம். 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பால்வாடி குழந்தைகளுக்கு இந்தப் பயிற்சியை வழங்கினோம். ஏழு நாள் பயிற்சியில் வரி வடிவங்கள் அனைத்தையும் மூன்று வயது குழந்தைகள் சரியாகக் கற்றுக்கொண்டனர். பேச்சு வராத ஒரு குழந்தையாலும் வரி வடிவங்களை சரியாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. வெளிநாட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த ஒரு தமிழ் ஆசிரியருக்கு 'ழ' எழுத்தை சரியாக எழுத வரவில்லை. அவருக்கும் இந்த வரி வடிவ முறை கைகொடுத்தது. தமிழை வைத்து மட்டுமே அனைத்து இடங்களுக்கும் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததால் நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவில்லை. 

 

தொடக்கக் கல்வித் திட்டத்தில் அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சி நடந்தது. அப்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த குழந்தைகளை பள்ளி அமைத்துப் படிக்க வைத்தோம். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும், பரப்ப வேண்டும் என்பதற்காக தலைமையாசிரியராக வேலை செய்துகொண்டிருந்த நான் இடைநிலை ஆசிரியராக விருப்பத்தின் பேரில் மாறினேன். சென்னையில் எனக்கு அப்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களும் தங்கம் தென்னரசு அவர்களும் மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் அளித்தனர்.

 

தமிழ்நாட்டில் எப்போது அனைத்து குழந்தைகளும் தமிழ் படிக்கின்றனரோ அன்றுதான் கார் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். திருவண்ணாமலையில் சமீபத்தில் 1,57,000 மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்களை வாசிக்க வைத்திருக்கிறோம். அது உலக சாதனைக்கான முயற்சியாகவும் மாறியுள்ளது. இந்த முயற்சிகளுக்கு என்னுடைய குடும்பத்தில் என்னை ஊக்குவிக்கவில்லை என்றாலும் தடுக்கமாட்டார்கள். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு அவர்கள் என்னுடைய பெரியப்பா. அவர் கொடுத்த ஊக்கத்தில் தான் நான் எழுதியவற்றை புத்தகங்களாக மாற்றினேன்.

 

என்னுடைய ஆய்வுகளை முழுமைப்படுத்திவிட்டு அதன் பிறகு கலைஞர் அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். கணக்குப் பாடத்தை குழந்தைகளுக்கு எளிமைப்படுத்தும் முறைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளேன். தமிழ் உயிர் எழுத்துக்களை நாம் சரியாக உச்சரித்தால் ஐம்புலன்களும் சரியாக இயங்கும். எழுந்து நின்று மெய்யெழுத்துக்களை உச்சரிக்கும்போது ரத்த ஓட்டம் சீராகும். தமிழ் மொழி பேசுபவர்களுக்கு யோகா தேவையில்லை. உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் தினமும் சரியாக உச்சரித்தாலே நமக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். 

 

தமிழ் மொழியின் சிறப்பு சீனர்களுக்குப் புரிந்துள்ளது. இன்று அவர்கள் வேகமாகத் தமிழ் கற்று வருகின்றனர். நாம் தான் ஆங்கிலம் கலந்த தமிழை உபயோகித்து வருகிறோம். அனைவருக்கும் சரியான தமிழைக் கற்றுக்கொடுப்பதே நம்முடைய நோக்கம்.

 


 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'சீரோடும் சிறப்போடும் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' - தமிழக அரசு அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Second World Tamil Classical Conference with Uniformity and Excellence'-Tamil Government Announcement

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றிருந்த நிலையில், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் கணித்தமிழும் இணைந்து நற்றமிழாகச் சிறப்புடன் திகழ்கிறது. திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதோடு, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது, பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு, வாழ்வியல் முறைகளைப் பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்தது.

அதன் தொடர்ச்சியாக 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நமது பண்பாட்டின் மணிமகுடங்களாகும். வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடர்ந்து இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.